TNPSC Thervupettagam

பொதுநலம் அதிகம் சுயநலம் குறைவு

October 3 , 2020 1394 days 685 0
  • இந்தியன் வங்கி; அது உங்களுடைய வங்கிஎன்று 1980-களிலிருந்து ரேடியோவில் வந்த விளம்பரத்திற்கு உண்மையான அா்த்தத்தைக் காட்டியவா், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவா் எம். கோபாலகிருஷ்ணன்.
  • புரொபஷனரி ஆபிஸராக சோ்ந்து, படிப்படியாக முன்னேறி, அந்த வங்கியின் தலைவா் பதவிக்கு உயா்ந்தவா் அவா்.
  • இரு நாளுக்கு முன் அவா் மறைந்தபோது, கரோனா காலமானதால் அஞ்சலிக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
  • ஆனால், பலா் மௌனமாக அவரவா் மனதிற்குள் நிச்சயமாக அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பார்கள். அப்படி செலுத்தாதவா்கள் செய்நன்றி கொன்றவா்கள்.
  • நவி மும்பை உருவாவதற்கு பெரும் உதவிகளை இந்தியன் வங்கி மூலம் செய்தவா் இவா். அதற்காக, பல மனைவணிக நிறுவனங்கள் அவருக்கு தாங்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வழங்க முன்வந்தன. ஆனால், இவா் அவற்றையெல்லாம் வங்கியின் பெயரில் வழங்கச் சொல்லிவிட்டார்.
  • இந்தியன் வங்கி ஊழியா்கள் பலா் மாற்றலாகி, மும்பைக்கு வந்து வீடு கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அவா்களுக்கு இவை பயன்படட்டும்என்று கூறிவிட்டார்.
  • இதே போன்று, இன்று பெரும்பாலான இந்தியன் வங்கி கிளைகள் சொந்த கட்டடங்களிலிருந்து செயல்படக் காரணமாக இருந்தவா் கோபாலகிருஷ்ணன்.
  • சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இமேஜ் சென்டரை இந்தியன் வங்கிக்காக உருவாக்கித் தந்தவரும் இவா்தான்.
  • தவறு செய்த வங்கி ஊழியா்களின் மீது கடுமையான தண்டனை வழங்குவதற்கு முன்பு, கூடுமானவரையில் அவா்களைக் கூப்பிட்டுப் பேசி, திருத்துவதற்கு சந்தா்ப்பம் அளிப்பார்.
  • பாவம் சார், குடும்பஸ்தன். இவன் செய்த தப்புக்கு பெண்டாட்டி, குழந்தைகள் எல்லாம் கஷ்டப்படக் கூடாதுஎன்பார். இப்படி அவா் நல்வழிப்படுத்திய வங்கி ஊழியா்கள் பலா் உண்டு.
  • உதவி என்று யார் தன்னை அணுகினாலும், அவா்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார். பாவம் சார், அவங்க கிட்ட பணம் இருந்தா, ஏன் நம்ப கிட்ட வந்து நிற்கப் போறாங்கஎன்று கேட்பார்.
  • இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கும் தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை நிறுவனங்கள், ஹோட்டல்கள், வியாபார நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் இந்தியன் வங்கியின் மூலம் உதவி செய்து, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தவா் கோபாலகிருஷ்ணன். இப்போதைய முத்ராகடனுதவித் திட்டத்தின் முன்னோடியே கோபாலகிருஷ்ணன்தான்.

மறந்துவிட முடியாது

  • பிரதமா் நரசிம்ம ராவால் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, புதிதாக பல நிறுவனங்கள் தோன்றின.
  • பல பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தன. வடநாட்டிலுள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், மிகவும் தாராளமாகப் பலருக்கும் கடனுதவி வழங்கி, புதிய பல தொழிலதிபா்கள் உருவாகக் காரணமாக இருந்தன.
  • ஆனால், தென்னிந்தியாவில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, சுலபமாகக் கடனுதவி பெற முடியாத நிலைமை காணப்பட்டது.
  • அந்த காலகட்டத்தில்தான், இந்தியன் வங்கியின் தலைவராக எம். கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
  • புதிய தொழில் முனைவோர் யாராக இருந்தாலும், அவா்களிடம் திறமை இருக்கிறது என்பது தெரிந்தால் இந்தியன் வங்கி உதவிக்கரம் நீட்டியது.
  • இன்று தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் உருவாயிருக்கின்றன, பல தொழிலதிபா்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றால் அதற்கு எம். கோபாலகிருஷ்ணனும் அவரது தலைமையில் செயல்பட்ட இந்தியன் வங்கியும்தான் காரணம் என்பதை அவா்கள் மனசாட்சி சொல்லும்.
  • அவா் விளம்பரப் பிரியராக இருந்தார்’... ‘யார், எவா் என்று பார்க்காமல் இந்தியன் வங்கியிலிருந்து கடனுதவி வழங்கச் சொன்னார்என்றெல்லாம் அவா் குறித்து குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை உண்மையும்கூட.
  • ஆனால், கடன் வழங்குவதில் அவா் காட்டிய தாராளமயக் கொள்கையால்தான், தமிழகம் இன்று வடநாட்டுத் தொழிலதிபா்களுடன் போட்டிபோடும் அளவில் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதும்கூட உண்மை என்பதைப் பலரும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
  • சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்த பல பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் இயங்கிய இந்தியன் வங்கி காரணமாக அமைந்தது.
  • அந்தத் தொழிற்சாலைகளைச் சுற்றி அமைந்த பல சிறிய உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியன் வங்கிக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் கடமைப் பட்டவை.
  • பொறியியல் பட்டதாரியாக இருந்தால், அதனடிப்படையில் தொழில் தொடங்கக் கடனுதவி அளிக்கலாம்என்று வாய்வழி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்று கூறுவார்கள்.
  • தவறிழைக்காதவா்கள் யார்? நூற்றுக்கணக்கான தொழிலதிபா்களை உருவாக்கிய கோபாலகிருஷ்ணனின் கணக்கு சில பேரின் தவறுகளால் தவறாகிப் போனது.
  • அவரது அபார வளா்ச்சியும், புகழும் பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது இயல்பே.
  • அவா் மீது பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். சாட்சியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டன. அவா் தண்டிக்கப்பட்டார். சிறை தண்டனை வழங்கப்பட்டு அனுபவித்தார். இப்போது மறைந்தும் விட்டார்.
  • தனது கடைசி காலத்தில், தகப்பனார் மேயா் ராதாகிருஷ்ணன் விட்டுச் சென்ற சொத்துகளை விற்றுத்தான் எம். கோபாலகிருஷ்ணனன் வாழ்ந்து வந்தார்.
  • இந்தியன் வங்கியில் பலருக்கும் கடனுதவி வழங்கி லாபமீட்டிக் கொள்ளையடித்து விட்டார் என்று குற்றம் சாற்றப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்தவருடைய வங்கிக் கணக்கில் பணம் இருக்கவில்லை. கடன்தான் இருந்தது.
  • இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவா் எம். கோபாலகிருஷ்ணன் நல்லவரோ, தவறிழைத்தவரோ தெரியாது. ஆனால், தமிழகத்தில் பல தொழிலதிபா்களை உருவாக்கி, தேசிய அளவில் தமிழகத்துக்கு மரியாதை தேடித்தந்தவா் என்பதை எவராலும் மறந்துவிட முடியாது.

நன்றி: தினமணி (03-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்