- தமிழ்நாட்டில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மாநில உயர் கல்வித் துறை உருவாக்கும் பாடத்திட்ட வரைவு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் யதார்த்தங்களையும், நமது மாணவர்களின் தேவைகள், போதாமைகளையும் கருத்தில்கொண்டு, அந்தப் பாடத்திட்ட வரைவு அமையும் என எதிர்பார்த்தவர்கள் இப்போது ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். பொதுப் பாடத்திட்டமாகத் தற்போது முன்வைக்கப்படும் இந்த வரைவு, பல்வேறு குறைபாடுகளையும் போதாமைகளையும் கொண்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்வது தமிழ்நாட்டில்தான் சாத்தியமாகியிருக்கிறது. பல இந்திய மாநிலங்களில் இது 25%தான். இந்திய/உலக அளவில் நமது உயர் கல்வியின் நிலை என்ன, நமது கல்வி நிறுவனங்களில் எத்தகைய கற்றல்-கற்பித்தல் நடைபெறுகிறது, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை நமது நிறுவனங்கள் அளிக்கின்றனவா என்றெல்லாம் ஆராய வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான ஒரு பொதுப் பாடத்திட்டத்தை முன்வைப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
- பாடத்திட்டங்கள் பன்மைத்துவமாக அமைவதன் சாதகங்களை ஆலோசித்துத்தான் பல்கலைக்கழக மானியக் குழு, கல்வி நிறுவனங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ‘தன்னாட்சி’ அந்தஸ்து வழங்கத் தொடங்கியது. தற்போது, இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் 800க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான்.
- 2022 தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி நிறுவனங்கள். நிலவரம் இப்படியிருக்க, தடாலடியாக ஒரு பொதுப் பாடத்திட்ட வரைவை அமல்படுத்துவது கேள்விக்குரியது.
இலக்கியப் பாடங்களில் வறட்சி:
- தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் - நடைமுறைகளைக் கணக்கில் கொண்டு ஒரு முன்னுதாரணமான பாட வரைவை அரசு வழங்கியிருக்க முடியும்; ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த வரைவின்கீழ், தமிழ் இலக்கியப் பாடங்கள் 25 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். சமகால இலக்கியங்களுக்கான இடமே அதில் இல்லை.
- கடந்த நூறு ஆண்டுகளுக்கான உலகளாவிய நவீன, பின்-நவீன இலக்கியக் கோட்பாடுகள், வகைமைகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமே தமிழ் இலக்கியக் கல்வியைச் சமகாலத்தன்மை உடையதாக மாற்ற முடியும். நான் பணிபுரியும் (தன்னாட்சி பெற்ற) அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டத்தில் இதற்கெல்லாம் இடம் உண்டு. ஆனால், அரசின் புதிய பாடத்திட்டத்தில் இளங்கலைக்கும் முதுகலைக்கும் சேர்த்து, எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ எனும் ஒரே ஒரு நாவல் மட்டுமே பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
- நூறு ஆண்டு கால தற்காலக் கவிதை, புனைகதை, கட்டுரை, நாடகம் ஆகிய அனைத்தும் ஒரே பாடமாகச் சுருக்கப்பட்டுள்ளன. தமிழிலக்கிய நதி பாரதியோடு நின்றுவிட்டதான பொதுப்புத்தி மனோபாவத்தையே இந்தப் புதிய பாடத்திட்ட வரைவும் பிரதிபலிக்கிறது.
கற்றல் சூழல்:
- உயர் கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்குவதை மனதில் கொண்டே பாடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய மாணவர்களே எதிர்காலத்துக்கான கல்வியாளர்களாக, எழுத்தாளர்களாக, சிந்தனையாளர்களாக, நிறுவனத் தலைவர்களாக மாறக்கூடியவர்கள்.
- இரண்டாவதாக, பாடத்திட்ட பொருண்மைகளுக்கு அப்பால், இன்று உயர் கல்வியில் தமிழக மாணவர்களின் பின்னடைவுக்கான காரணங்களை இந்தப் புதிய பாடத்திட்டம் எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள எத்தகைய முறைமைகளை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள், கல்லூரி வளாகங்களில் எத்தகைய கற்றலுக்கான சூழல் நிலவுகிறது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
- ‘எப்படியாவது’ தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதே ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் கல்லூரி நிர்வாகங்களாலும் முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால், உயர் கல்வி பெற்ற மாணவர் ஒருவர் உயர்ந்த குடிமைப் பண்புகளோடும் சமூகத்தின் சவால்களைச் சுயமாக எதிர்கொள்கிறவராகவும் இருக்க வேண்டும்.
- ஒருகாலத்தில் கல்லூரிப் படிப்பைக் கடந்து வந்தவர்களுக்கு இயல்பாகவே இத்தகைய பண்புகள் கைவரப் பெற்றன. இப்போது இவற்றைத் தனியாக ஊட்ட வேண்டியதேவை ஏன் ஏற்பட்டது என்பதை உயர் கல்வித்துறை பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
கசக்கும் உண்மைகள்:
- நமது கலை-அறிவியல் கல்லூரிகளின் பின்னடைவுக்கு இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்: ஒன்று, கல்லூரிகளில் இரண்டடுக்கு ‘ஷிஃப்ட்’ முறை அறிமுகமானது. பெரும் மூலதனத்தில் இயந்திரங்களை இறக்குமதி செய்து தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் இயந்திரங்களை ஓய்வின்றிப் பயன்படுத்தினால் மட்டுமே லாபகரமாகத் தொழிலைத் தொடர முடியும் என்ற பொருளாதாரக் காரணங்களுக்காக நவீன யுகத்தில் உருவான உத்தியாகவே இந்த ‘ஷிஃப்ட்’ முறை இருந்திருக்க வேண்டும்; அதைக் கல்விக்கூடங்களுக்கும் அமல்படுத்தியது ஒரு பிழை. கல்விக்கூடங்களில் 5 மணி நேரம் மட்டுமே மாணவர்கள் கற்கிறார்கள்.
- ஆகவே, ‘வகுப்பறைகளை ஏன் சும்மா வைத்திருக்க வேண்டும், அதிக மாணவர்களுக்குக் கல்வி வழங்கலாமே’ என ‘ஷிஃப்ட்’ முறைக்குக் காரணம் சொல்லப்பட்டது. கற்பது என்பது வகுப்பறைக்குள் மட்டுமே நிகழ்வது என்ற புரிதலின் விளைவு இது. இதன் காரணமாக, வகுப்பறைகளுக்கு வெளியே ‘கல்லூரி வாழ்க்கை’, ‘வளாகக் கலாச்சாரம்’ என்ற அடிப்படையான விஷயங்கள் இன்று கல்லூரிகளில் அற்றுப்போய்விட்டன.
- மாணவர்கள் பாடங்களைத் தவிர்த்து சமூகம், கலை, அரசியல் விஷயங்கள் சார்ந்து உரையாட, விவாதிப்பதற்கான வெளி இல்லாமலாகி ஒரு மொண்ணையான இளைய தலைமுறையை உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறது உயர் கல்வி.
- இரண்டாவதாக, பள்ளிக் கல்வியின் தரம். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருவது மகிழ்ச்சிக்குரியது என்றாலும், தாய்மொழியில்கூட எழுதப் படிக்கத் தெரியாத பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்விக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறைப் படிப்பாளிகள்.
- இத்தகைய பள்ளி மாணவர்களைக் கல்லூரி மாணவர்களாக உருமாற்றுவதற்கான எவ்வித நடைமுறைகளும், உபாயங்களும் உயர் கல்வித் துறைக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ கல்வி நிறுவனங்களுக்கோ இல்லை. நாம் கவனம் செலுத்த வேண்டிய இடம் இதுதான். ஆகவே, உயர் கல்வி என்னும் அடுத்தகட்ட நகர்வுக்கான முன்தயாரிப்பாக ஓர் இணைப்புப் பாலம் தேவைப்படுகிறது. ஒரு மாணவன் கல்லூரிக்குள் நுழைந்தவுடன், முதல் பருவம் முழுவதையும்கூட அத்தகையதாக வடிவமைக்கலாம்.
அடிப்படை அம்சங்கள்:
- தமிழில் சரளமாக எழுதவும் பேசவும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சப் பயன்பாட்டுக்குமான பயிற்சி; கணினியில் அடிப்படைப் பயன்பாடு, தமிழ், ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி; மொழி, இனம், சாதி, சமூகம், நாடு, பாலினம், பண்பாடு, வரலாறு குறித்த அடிப்படைகளை உணர்வு கலக்காமல், அறிவுபூர்வமாக விளக்கும் சிறிய பாடங்கள்; உடல், சுகாதாரம், உணவு, உடலோம்பல் குறித்த விழிப்புணர்வு; போதைப் பொருள்கள், குடிப்பழக்கம், குடிநோய்களின் சமூக உளவியல் தாக்கங்களை விளக்கும் அமர்வுகள்; செய்தித்தாள்கள், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தும் பயிற்சிகள்; சமூக ஊடகங்களைச் சாதகமாகக் கையாள, கைபேசிகளைத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் போன்ற அடிப்படை அம்சங்கள், ஒரு பள்ளி மாணவனைப் பண்பட்ட குடிமைப் பண்புகள் உள்ளவனாக மாற்றுவதற்கான முதற்படியாக அமையும்.
- இன்றைய இளைஞர்கள் சிலரிடையே நிலவும் சாதிய மனோபாவம், தீவிர பிற மத வெறுப்பு, பாலின சமத்துவத்துக்கு எதிரான சிந்தனைகள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியவை கல்வி நிறுவனங்கள்தான். வேலைவாய்ப்புக்கான தொழில்முறைத் தகுதிகளையும் சிறந்த மனிதனாக வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையும் வழங்குகின்ற ஒரு பொருத்தமான பாடத்திட்டத்துடன் இணைந்த செயல்முறையைக் கற்பனை செய்ய வேண்டும். அதற்கு மேலோட்டமான ‘பாடத்திட்ட’ மாற்றங்கள் மட்டும் போதாது. தலைகீழ் மாற்றங்களுக்கும் நாம் தயாராக வேண்டும். அரசு இதைக் கவனத்தில் கொள்ளட்டும்!
நன்றி: தி இந்து (23 – 05 – 2023)