TNPSC Thervupettagam

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு!

February 7 , 2025 28 days 59 0

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு!

  • உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கும் நிலையில், அவற்றிலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.
  • 2024 ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் மதத் தலைவர் போலே பாபா நடத்திய நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரண்டதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். 2013இல் மத்தியப் பிரதேச மாநிலம் ரதன்கர் மாதா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேரும் 2011இல் கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பேரும் உயிரிழந்தனர். இப்படி ஏராளமான அசம்பாவிதங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.
  • இப்படியான சூழலில், தற்போதைய கும்பமேளாவில், மௌன அமாவாசை அன்று (ஜனவரி 29) திரிவேணி சங்கமத்தின்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது. நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று தெரிந்தும் உத்தரப் பிரதேச அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாகவும் விழா ஏற்பாடுகளில் போதாமை இருந்ததாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கும்பமேளாவில் மக்கள் உயிரிழந்ததை அசம்பாவிதம் எனக் குறிப்பிட்டதோடு, இந்த வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி விஷால் திவாரிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
  • இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிடுவதோடு விசாரணையில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
  • மகா கும்பமேளாவின்போது நான்கு கோள்கள் நேர்க்கோட்டில் நிற்கும் அரிய நிகழ்வு 144 ஆண்டுகள் கழித்து நடைபெறுவதால் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பது தெரிந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியப்போக்கைக் கடைப்பிடித்த உத்தரப் பிரதேச அரசின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்கு உரியது. கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தபோது போதுமான எண்ணிக்கையில் காவலர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் இல்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
  • முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்காகக் காவலர்கள் அனுப்பப்பட்டுவிட்டதால், மக்களின் எண்ணிக்கைக்குப் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதேநேரம், முக்கியப் பிரமுகர்களுக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாபச்சன் தெரிவித்திருக்கிறார். முக்கியப் பிரமுகர்களுக்கே இந்த நிலை என்கிறபோது மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அச்சம் எழுகிறது.
  • லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்தப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதோடு குடிநீர், கழிப்பறை போன்றவற்றை அமைத்துத் தருவதும் அரசின் அடிப்படைக் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் நிவாரண நிதிகளுமே போதும் என்கிற அரசுகளின் அலட்சிய மனோபாவமே இதுபோன்ற தொடர் துயரச் சம்பவங்களுக்கு வித்திடுகிறது. பாதுகாப்புக் குளறுபடிகளால் ஏராளமான மக்கள் உயிரிழப்பது வாடிக்கையாக இருக்கிறது.
  • இந்நிலையில், கும்ப மேளா உயிரிழப்புகளை அரசு ஒரு படிப்பினையாகக் கருதி, மக்களின் பாதுகாப்புக்கு எல்லா நிலையிலும் பொறுப்பேற்க வேண்டும். அரசின் அலட்சியத்தால் இனி ஓர் உயிர்கூடப் பாதிக்கப்படாத வகையில் அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுடன் வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுப்பதுதான் அரசு மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்