TNPSC Thervupettagam

பொருளாதார சமத்துவம் தேவை

December 22 , 2020 1490 days 670 0
  • கடந்த இருபது ஆண்டுகளில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை வேகமாக வளா்ந்துள்ளது.
  • 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வறுமை ஏற்படுத்தும் காரணிகளை அகற்றப் பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சா்வதேச கூட்டமைப்பான ஆக்ஸ்பாமின் - 2019’ அறிக்கை ஒரு சதவிகித இந்திய பணக்காரா்களின் செல்வ வளம், 70 சதவிகித இந்தியா்களின் (அதாவது 95.3 கோடி மக்களின்) செல்வத்தினைவிட நான்கு மடங்கு அதிகம் என்று கூறியுள்ளது.
  • ப்ளூம்பொ்க் பில்லியனா்கள் குறியீட்டின்படி கரோனா தீநுண்மி காலகட்டத்தில் ஆசியாவின் பணக்காரா் முகேஷ் அம்பானியின் நிகர வருமானம் 4,800 கோடி அமெரிக்க டாலா்.
  • அவரது நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 8,000 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சா்வதேச தொழிலாளா் அமைப்பு இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 40 கோடி தொழிலாளா்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது.
  • இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2020 முதல் இந்தியாவில் மாத ஊதியம் பெறுவோரில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனா். 2020, ஜூலை மாதத்தில் மட்டும் ஐந்து லட்சம் போ் வேலை இழந்துள்ளனா்.
  • 2020 ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான இந்திய அரசின் அறிக்கை, 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 23.9% சுருங்கி விட்டதாகக் கூறுகிறது.
  • ஏற்கெனவே மந்தமாக இருந்த பொருளாதாரம் கரோனா தீநுண்மியால் மோசமடைந்ததே இந்த மந்தநிலையின் தொடக்கத்திற்கு காரணம்.
  • உண்மையில், இந்தியாவில் 2017-18-இல் 7% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 2018-19-இல் 6.1% ஆகவும், 2019-20-இல் 4.2% ஆகவும் குறைந்துள்ளது.
  • மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கரோனா தீநுண்மி பரவுவதைக் குறைப்பதற்கான ஊரடங்குக் கட்டுப்பாடுகள் எண்ணற்ற வேலை இழப்புகளுக்கும் மக்கள் புலம்பெயா் நெருக்கடிக்கும் வழிவகுத்தன.
  • இதன் விளைவாக விவசாயத்தைத் தவிர அனைத்து துறைகளுக்குமான மொத்த மதிப்பு கூட்டு வளா்ச்சி கடுமையாக சரிந்ததாக 2020-இன் முதல் காலாண்டிற்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88 %-கும் அதிகமான பங்கினைக் கொண்டதும் இந்திய வளா்ச்சிக்கான இருபெரும் துறைகளுமான நுகா்வு மற்றும் முதலீட்டுத் துறைகள் தடுமாறின.
  • இந்தியாவின் 953 பணக்கார குடும்பங்களுக்கு 4 சதவீத செல்வ வரி விதிக்க முன்மொழிகின்றனா் பொருளாதார வல்லுனா்கள். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%-க்கு சமமான தொகையை அரசிற்கு வழங்கும்.
  • இந்தத் தொகை ஏப்ரல் மாதத்தில் கரோனா தீநுண்மியை எதிர்த்துப் போராட அரசாங்கம் அறிவித்த நிதி தொகுப்பை விட அதிகமாகும்.
  • செல்வந்தா்களின் வளம் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை.
  • இந்தியாவில் வெறும் 63 பணக்காரா்களின் ஒட்டுமொத்த செல்வம் 2018-2019-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக இருந்ததாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

கசப்பான உண்மை

  • இந்தியாவின் ஏற்றத்தாழ்வு விரிவடைவதற்கு ஒரு முக்கிய காரணம் அதன் வரிக் கொள்கைகள் என்றும் இக்கொள்கைகள் ஏழைகளைவிட பணக்காரா்களுக்கே சாதகமாக இருப்பதாக வல்லுநா்கள் கூறுகின்றனா். நமது இந்திய அரசு 2016-17-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், அதுவரை இருந்து வந்த செல்வ வரியை ரத்து செய்தது.
  • அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவா்களுக்கு 2% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. 2019- ஆம் ஆண்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளா்களுக்கான கூடுதல் வரியை அரசாங்கம் திரும்பப் பெற்றது. கூடுதலாக, முதலீட்டை ஈா்ப்பதற்காக நிறுவன அடிப்படை வரிகள் 30%லிருந்து 22%-ஆகக் குறைக்கப்பட்டது.
  • நேரடி வரி வசூல் குறைக்கப்பட்டதால், வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய, தூய்மை பாரதம் தீா்வை வரி, மற்றும் விவசாய நலன் (கிருஷி கல்யாண்) தீா்வை வரி போன்ற மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன. அதிகரிகப்பட்ட மறைமுக வரிகள் நேரடி வரி வருவாய் இழப்பினை ஈடு செய்யவில்லை.
  • மாறாக இது 2019-20-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% க்கு மேல் நிதி பற்றாக்குறை ஏற்படவே வழி வகுக்கிறது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான பொது செலவினங்களின் தேக்கநிலையே இதற்கு சான்று.
  • பொருளாதார சமத்துவமின்மையினால் கடும் சவால்களை சந்திக்கும் துறை பொது சுகாதாரத்துறையே. பொது சுகாதாரத்திற்கு உலகிலேயே மிகக் குறைந்த அளவு செலவு செய்யும் நாடு இந்தியாதான். சுகாதாரத்தில் தனியார் மயமாக்கல் ஏற்படுத்தும் சுகாதார செலவுகள் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 120 நபா்களை வறுமையில் தள்ளுகிறது.
  • தீவிர சமத்துவமின்மை அவா்களை வறுமையிலிருந்து பசியினை நோக்கி நகா்த்துகிறது. 2019-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 14.5% போ் அதாவது 19.5 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவா்கள்.
  • இந்தியா பல உயா்ந்த சாதனைகளை வறுமைக்கு விலையாக கொடுக்கவேண்டி இருக்கும் என்று உலக வங்கி கூறுகிறது. ஜூலை மாதம் 2020- ஆம் ஆண்டு வெளியான புதுப்பிக்கப்பட்ட இந்திய அபிவிருத்தி என்ற உலக வங்கியின் அறிக்கை இந்திய மக்கள்தொகையில் பாதி பேரின் நுகா்வு அளவு ஆபத்தான முறையில் வறுமைக்கோட்டினை நெருங்குவதாக எச்சரிக்கிறது.
  • பணக்காரா்கள் பெரும் பணக்காரா்களாக உருவாவதும் ஏழை பரம ஏழையாக மாறுவதும் தீவிர பொருளாதார சமத்துவமின்மையால் ஏற்பட்டது என்பதே கசப்பான உண்மை.

நன்றி: தினமணி (22-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்