- உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் ஜெர்மனி. அது வளரவில்லை. மாறாக சுருங்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 0.3%. அதற்கு முந்தைய காலாண்டில் மைனஸ் 0.5%. பணவீக்கத்துக்கு உரிய தொகைகளை கழித்து விட்டு கணக்கிடும் ‘ரியல் ஜிடிபி’ 2 காலாண்டுகளுக்கு தொடர்ந்து குறைந்தால், பொருளாதாரத்தில் அதன் பெயர், ‘ரெஷசன்’. தமிழில் பெருமந்தம்.
- கரோனா வைரஸ் தாக்கம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் 44 உறுப்பு நாடுகளில் பலவற்றில், 2023-ம் ஆண்டு பெருமந்தம் வரக்கூடும் என்று அச்சப்பட்டார்கள். இப்போது ஜெர்மனியில் வந்துவிட்டது. கடும் விலைவாசி உயர்வுதான் இதற்கான உடனடி காரணமாகப் பார்க்கப்படுகிறது.
- 2022 ஏப்ரலில் இருந்ததைக் காட்டிலும் 2023 ஏப்ரலில் பொருட்களின் விலை 7.2% அதிகம். பணவீக்கத்தை சமாளிக்க, அரசும் மக்களும் செலவுகளைக் குறைத்து கொண்டார்கள். விளைவு பெருமந்தம். 2020-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கரோனா ஊரடங்கு காரணமாக ஜெர்மனி ஒரு பெருமந்தத்திலிருந்து மீண்டது.
- அதன் பிறகு 2021-ல் நடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், Social Democrats, Greens and Free Democrats ஆகிய 3கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால் கொள்கை முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போதைய பொருளாதார சுருக்கம் என்பது ஒரு சிறிய ஆரம்பம்தான். ஜெர்மனிக்கு அடிப்படையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
- மோட்டார் வாகன உற்பத்தி ஜெர்மனியின் பலம். ஆனால் சமீபகாலமாக எலக்ட்ரிக் உள்ளிட்ட புதிய வகை மோட்டார் வாகனங்கள் வந்துவிட்டதால் வாகன தயாரிப்பில் ஜெர்மனி இப்போது முன்னணியில் இல்லை.
- சீமென்ஸ், போக்ஸ்வேகன், பிஎம்டபிள்யு, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பேயர், ஹெங்கள், போர்ஷே, டாய்ஷ் வங்கி போன்ற பாரம்பரியமிக்க மாபெரும் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் உருவாகிக் கொண்டிருப்பதைப் போல வருங்காலத்தில் பெரும் நிறுவனங்களாக மாறக்கூடிய ‘ஸ்டார்ட் அப்’ கள் ஜெர்மனியில் அதிகம் உருவாகவில்லை. 2022-ல் ஜெர்மனியில் முதலீடு செய்யப்பட்ட ‘வென்சர் கேபிடல்’ நிதி 11.7 பில்லியன் டாலர். இந்தியாவில் 2022-ல், 21 பில்லியன் டாலர். அமெரிக்காவில் 234 பில்லியன் டாலர்.
- ஜெர்மானிய முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் அதிகம் ரிஸ்க் எடுப்பதில்லை. அதனால் தொழில் தொடங்க போதிய நிதி கிடைப்பதில்லை.
- ஐரோப்பிய மத்திய வங்கியான ECB, தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இன்னும் உயரும் என்கிறார் அதன் ஆளுநர்.
- அரசு தரவேண்டிய பல்வேறு ஒப்புதல்கள் வர தாமதமாகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஜெர்மனி பின்தங்கி இருக்கிறது. போதிய அளவில் முதலீடுகள் செய்யவில்லை
- வயதானவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இன்னும் ஆறேழு ஆண்டுகளில் மனிதவள பற்றாக்குறை ஏற்படும். தவிர, வயதானவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
- இப்படிப்பட்ட சில பிரச்சினைகள் சொல்லப்பட்டாலும், அவற்றில் முக்கியமான மற்றும் பல பிரச்சினைகளுக்கும் காரணமான ஒன்று, அந்த நாட்டின் எரிபொருள் பிரச்சினைதான். ஆண்டுக்கு 3 மாதம் குளிர்காலம். மைனஸ் 5 டிகிரி. அதை வாழத்தக்க அளவுக்கு உயர்த்திக் கொள்ளவும், சாலைகள், தண்ணீர் போன்ற பல பொதுத் தேவைகளை பராமரிக்கவும் எரிசக்தி ஆண்டு முழுக்கத் தேவைப் படும் அவசியமான ஒன்று.
- ஜெர்மனியின் பொருளாதாரம் 20% அதன் உற்பத்தித் துறையை சார்ந்து இருக்கிறது. பொறியியல் மற்றும் வேதியியல் பொருட்கள் ஆகியவை இரு பெரும்தொழில்கள். இரண்டுமே அதிக மின்சாரம் தேவைப்படுபவை. தவிர, வாகனங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- பெரிய அளவில் அணுமின் நிலையங்களையும் அனல்மின் நிலையங்களையும் உருவாக்கி வைத்திருந்த ஜெர்மனி, அவை இரண்டையும் விடுத்து சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலைகள் மின்சக்தி உற்பத்தியில் இறங்கியிருக்கிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் முழுவதும் ‘கிளீன் எனர்ஜி’க்கு மாறிவிடத் திட்டம். அதற்குத் தேவையான கட்டுமானங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இடைப்பட்ட காலத்தில் அதன் தொடரும் மற்றும் அதிகரிக்கும் மின்சாரத் தேவைகளுக்காக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி வருகிறது. ஜெர்மனியினுடைய மொத்த இயற்கை எரிவாயு தேவையில் 40% நெடுங்காலமாக ரஷ்யாவிடம் இருந்துதான் இறக்குமதியாகிறது.
- அவற்றை கொண்டுவர பூமிக்கு கீழே ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் உறுப்பு நாடான ஜெர்மனியும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய மற்றும் ரஷ்யாவின் தடைகளை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
- இதனால் சர்வதேச சந்தையில் இருந்து எரிபொருளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி தொழிற்சாலைகளுக்கும் மக்களுக்கும் மானிய விலையில் வழங்க வேண்டி இருப்பதால் அரசுக்கு மிகப்பெரும் செலவு. ஜெர்மனியால் பெரிய அளவில் மற்ற நாடுகளைப் போல மரபுசாரா எரிசக்தியை உருவாக்கிவிட முடியாது. காரணம், காற்றாலைக்குத் தேவையான கடற்கரை ஓரங்கள் அந்த நாட்டில் குறைவு.
- சூரியஒளி, மின்சாரம் தயாரிக்கக்கூடிய அளவில் ஆண்டு முழுவதும் எல்லா பகுதிகளிலும் கிடைப்பதில்லை. ஹைட்ரஜனை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்து, அதை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனி. ஆனால், அவ்வளவு பெரிய அளவில் இதுவரை ஹைட்ரஜனைக் கொண்டு வேறு எங்கும் மின்சாரம் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை என்ற சந்தேகங்களும் எழுப்பப் படுகின்றன.
- இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி குறைவு அல்லது சுருக்கம் என்பது உடனடியாக சரியாகி விடாது என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜி 7 நாடுகளிலேயே மிகக் குறைந்த அளவு வளர்ச்சி காணப் போவது ஜெர்மனிதான் என்கிறது சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்).
- மாறி வரும் உலகுக்கு ஏற்ப மாற்றங்களை புரிந்து கொண்டு, புதிய வகை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தொடர்ந்து பல காலத்திற்கு செல்வம் ஈட்டித் தந்த பொறியியல் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டு, பெரிய அளவில் எரிசக்தியை பயன்படுத்திக் கொண்டு, வயதான சிங்கம் போல் இருக்கிறது ஜெர்மனி.
- இவற்றையெல்லாம் அந்நாட்டு பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ் (Olaf Scholz) ஒப்புக் கொள்வதாக இல்லை. ஜெர்மனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. குறுக்கீடுகளைக் (ரெட் டேப்) குறைத்து, சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவித்து குறையும் வளர்ச்சியை சரி செய்து விடுவோம் என்கிறார். அவர் இப்படிச் சொல்வது முதல் முறை அல்ல. ஜெர்மனி ஒரு வித்தியாசமான நாடு.
- அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிக தொகையை ஆராய்ச்சிகளுக்காக செலவிடும் நாடாகவும், ஐரோப்பாவில் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் நாடாகவும் ஜெர்மனி இருக்கிறது. இப்படிப்பட்ட வலுவான ஜெர்மானியர்கள் இந்த புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வெளி வருவார்கள் என்று நம்புவோம்.
நன்றி: தி இந்து (05 – 06 – 2023)