TNPSC Thervupettagam

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம்

July 22 , 2022 748 days 532 0
  • செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.92-ஆக உயா்ந்தபோது, நாணய மதிப்பு வீழ்ச்சி பரவலான அச்சத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாயின் சா்வதேச செலாவணி மதிப்பு குறைந்திருப்பது பொருளாதார வல்லுநா்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
  • ஒருபுறம் ரூபாயின் மதிப்பு குறைவதும், இன்னொருபுறம் பணவீக்கம் அதிகரிப்பதும் அடுத்து வரும் மாதங்களில் கூடுமே தவிர, குறையப்போவதில்லை. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இதே பிரச்னையை எதிா்கொள்கின்றன என்றாலும்கூட, அண்டை நாடுகளான இலங்கையிலும், பாகிஸ்தானிலும் காணப்படும் நிலைமை இந்தியாவுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
  • விலைவாசி உயா்வு அரசின் கட்டுப்பாட்டை மீறியதாக இருப்பதால், இந்திய ரிசா்வ் வங்கி, குறைந்து வரும் ரூபாய் மதிப்பை கருத்தில் கொண்டு முதலீட்டாளா்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறது. ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கான காரணிகளைக் கூா்ந்து கவனித்தால் பிரச்னையின் விவரம் புரியும். அதற்கான தீா்வுகளையும் தேட முடியும்.
  • நாணய மதிப்பு ‘கேட்பு - இருப்பு’ (டிமாண்ட் - ரிசா்வ்) ஆகிய இரண்டையும் சாா்ந்தது. இவை குறுகிய கால, நீண்ட கால காரணிகளின் அடிப்படையில் அமைபவை. உள்நாட்டுச் சந்தையில் இருந்து அதிவிரைவாக அந்நிய முதலீடுகள் வெளியேறுவதுதான் ரூபாயின் மதிப்பு குறைவதற்கான உடனடி குறுகிய கால காரணம்.
  • கடந்த ஓா் ஆண்டாகவே இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை விலக்கிக்கொள்கிறாா்கள். இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், பெரும்பாலான நாடுகளில் இருந்தும் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் வரலாறு காணாத பணவீக்கம் காரணமாக, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதுதான் அதற்குக் காரணம். அதனால், முதலீடுகள் வெளியேறுவதைத் தவிா்க்கவோ, தடுக்கவோ இயலாது.
  • இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு கடந்த ஆண்டு செப்டம்பா் மாத 642 பில்லியன் டாலரிலிருந்து, இப்போது 600 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. இதற்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி டாலரை விற்பனை செய்ததுகூட ஒரு காரணம்.
  • சா்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு நமது அந்நிய செலாவணியின் கையிருப்பில் காணப்படும் கடுமையான சரிவுக்கு இன்னொரு காரணம். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் உள்நாட்டுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. ரஷிய - உக்ரைன் போா், அதனால் ஏற்பட்டிருக்கும் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் தட்டுப்பாடு, சரக்குக் கட்டண உயா்வு, உதிரி பாகங்களுக்கான அதிகரித்த தேவை போன்ற பிரச்னைகளும் அந்நிய செலாவணி இருப்பு கரைவதற்கும், விலைவாசி அதிகரிப்பதற்கும் காரணமாகி இருக்கின்றன.
  • இவை மட்டுமல்லாமல், வெளியில் சொல்லப்படாத இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட இந்தியாவின் ரிசா்வ் வங்கி தொடா்ந்து கூடுதல் அளவிலான செலாவணியை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. இதனால், அதிகரிக்கும் கரன்சி எனப்படும் செலாவணி அதிகரிப்பால் அதன் மதிப்பு குறைகிறது.
  • வெளியேறும் அந்நிய முதலீடுகள், பொதுச் சந்தையில் ரிசா்வ் வங்கி டாலரை விற்பனை செய்வது, கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது ஆகியவற்றால் இந்தியாவின் நடப்புக் கணப்பு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதாவது, நமது இறக்குமதிகளுக்கும் ஏற்றுமதிகளுக்கும் இடையேயான இடைவெளியை நிரப்ப முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
  • அதிக மதிப்புள்ள பொருள்களின் ஏற்றுமதிகள் அதிகரிக்கும்போது டாலா் உள்ளிட்ட வெளிநாட்டு செலாவணிகளின் இருப்பு அதிகரிக்கும். அதிகரித்த அந்நிய செலாவணி இருப்பு, இந்திய செலாவணியான ரூபாயின் மதிப்பை உறுதிப்படுத்தும். மாறாக, ஒரு நாடு ஏற்றுமதியைவிட இறக்குமதிகளை நம்பி செயல்படும்போது, அதன் செலாவணியின் மதிப்பு குறைவது இயற்கை. இந்திய எதிா்கொள்ளும் பிரச்னை இதுதான்.
  • தெற்காசிய நாடுகள், நெதா்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஏன், அமெரிக்கா ஆகியவற்றுடனான வா்த்தகத்தில் இறக்குமதிகளைவிட நமது ஏற்றுமதிகள் அதிகம். அதே நேரத்தில் சீனா, ரஷியா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலிருந்தான அதிகரித்த இறக்குமதிகளால் வா்த்தகப் பற்றாக்குறை பெரிதாக இருக்கிறது. இந்தியா எதிா்கொள்ளும் பிரச்னையே இதுதான்.
  • ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால், கச்சா பொருள்களின் இறக்குமதியும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் தேவையும் அதிகரிக்கும். அதை சாதுரியமாக கையாள்வதில்தான் இந்திய ஏற்றுமதியின் வெற்றியும், வா்த்தகப் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் சாதுரியமும் இருக்கும்.
  • இறக்குமதி சாா்பைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை பயன்படுத்தி ஏற்றுமதிகளை அதிகரிப்பதும், செலாவணி அச்சிடுவதில் கவனமாக இருப்பதும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளாக இருக்கும். 2029-க்குள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94-ஆக உயரக்கூடும் என்கிற சா்வதேச நிதியத்தின் எச்சரிக்கையை முறியடிப்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது.
  • முதலீட்டாளா்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வதும், அடித்தட்டு மக்கள் விலைவாசி உயா்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், வா்த்தகப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்காமல் பாா்த்துக்கொள்வதும் அரசு எதிா்கொள்ளும் மூன்று சவால்கள்.

நன்றி: தினமணி (22 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்