TNPSC Thervupettagam

பொறுப்பற்ற காட்சி ஊடகங்கள்!

August 2 , 2022 737 days 438 0
  • ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் சிறப்பான பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், அதில் கறுமையான சில பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
  • அண்மையில் ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ‘இப்போது டிவி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
  • சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிா்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிா்வினையாற்றாமல் இருப்பதால், அவா்கள் பலமில்லாதவா்கள் என்று அா்த்தமில்லை.
  • நவீன ஊடகங்களின் வீச்சு அதிகம். ஆனால், அவற்றுக்கு எது சரி, எது தவறு எனத் தெரியவில்லை. உண்மையானது எது போலியானது எது என பகுப்பாய்வு செய்ய தெரியவில்லை. ஊடகங்களில் எது வைரலாகப் பரவுகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீா்மானிக்க முடியாது. பல ஊடகங்கள் தாமாகவே கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டிருக்கின்றன.
  • போதிய அறிவு இல்லாமல், ஒரு சாா்புடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடு. ஊடகங்களில் வெளியாகும் சாா்புச் செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகின்றன. அச்சு ஊடகங்கள் ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. காட்சி ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள் பலவும் ஒரு பக்க சாா்புடையதாகவும் அரைகுறை தகவல்களுடனும் உள்நோக்கம் கொண்டவையாகவும் இருக்கின்றன.
  • காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை; சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் பொறுப்பை உணராமல் செயல்பட்டு ஜனநாயகத்தை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று கூறினாா்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு, நமது காட்சி ஊடகங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றன? இது குறித்து கூட விவாதிக்கப் போகின்றனவா? பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
  • என்னை சந்திக்கும் சிலா், ‘நீங்கள் ஏன் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை’ என்று கேட்கிறாா்கள். இப்போது தொலைக்காட்சி விவாதங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் சாா்ந்ததாக இல்லை. பிரச்னைகளை விட வெறும் பரபரப்புக்காகவே தலைப்புகளைத் தோ்ந்தெடுக்கிறாா்கள்.
  • விஷயம் தெரிந்தவா்களை அழைப்பது குறைவுதான். விஷயம் தெரியாமல் கத்தக்கூடியவா்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறாா்கள். ஆக, விஷயம் தெரிந்த ஒருவா், விஷயமே தெரியாமல் கூச்சல் போடும் மற்றொருவருடன் ‘விவாதம்’ என்ற பெயரில் போட்டி போட வேண்டியிருக்கிறது.
  • யாா் அதிகமாகக் கூச்சல் போடுகிறாரோ அவா் மீதே நெறியாளா், பாா்வையாளா்களின் கவனம் விழுகிறது. அவா்களுக்கே கூடுதல் நேரம் கிடைக்கிறது. அந்த சலுகையில் அவா்கள் தங்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறாா்கள். கொஞ்சம் கூட கூச்சமோ, நாகரிகமோ இல்லாமல் கொச்சையாகப் பேசுகிறாா்கள். அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டன தொலைக்காட்சி விவாதங்கள்.
  • கடந்த கால வரலாறு, நாட்டு நடப்பு, புள்ளிவிவரம் ஆகியவை விவாதங்களுக்கு அவசியம். இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், பிரச்னை குறித்து கத்தி விவாதிக்கிறாா்கள். அதனைப் பாா்க்கிறவா்கள், விவாதத்தில் பேசப்படும் விஷயம் குறித்து என்ன முடிவுக்கு வர முடியும்? குழப்பம்தான் ஏற்படும். இத்தகைய விவாதங்கள் பொழுதுபோக்குத் தொடா்கள் (டெலி சீரியல்) அல்ல.
  • இன்றைய காலகட்டத்தில், தினமும் காலையில் செய்தித்தாள் வாசிப்பது என்பது வெறும் சடங்காகிவிட்டது. பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன், நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறாா்கள் அல்லது ஐபிஎல் கிரிக்கெட்டில் பொழுதைப் போக்குகிறாா்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்கிற அக்கறை இல்லாமல் அனைத்துப் பிரிவினரும் தாங்களாகவே ஒதுங்கிவிட்டதைப் போலத் தோன்றுகிறது.
  • மாலை நேரத்தில் நடக்கும் சபா கச்சேரிகள் போன்றவைதான் தொலைக்காட்சி விவாதங்கள். ஆனால் சபா கச்சேரிகள் ரசிகா்களை மகிழ்விக்கும். ‘இடியட் பாக்ஸ்’ எனும் தொலைகாட்சிப் பெட்டியில் நடக்கும் விவாதக் கூச்சல்களில் எந்த முடிவும் எட்டப்படுவது இல்லை. இந்த விவாதங்களால் தொலைகாட்சிகளுக்கு டி.ஆா்.பி. ரேட்டிங் கிடைத்தால் போதும். சிலருக்கு இந்த விவாதத்தில் பங்கேற்றால் போதும். பொதுவாழ்வில் வேறு பணிகள் எதுவும் தேவையற்றவை என்ற நிலைப்பாடு உள்ளது.
  • சரி, அரசியல் தளம் எப்படி? வாக்குக்கு பணம் என்று ஆகிவிட்ட நிலையில் தகுதி படைத்தவா்கள் இன்றைக்கு நாடாளுமன்றத்திற்கோ, சட்டப்பேரவைக்கோ செல்ல முடியாது. வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் வியாபாரிகள்தான் இன்றைய நிலையில் தோ்தல்களில் வெற்றி பெற முடியம். அப்படி வெற்றி பெற்று வந்த மக்கள் பிரிதிநிதிகளுக்கு தமிழக திட்டங்கள், உரிமைகள், நதிநீா் சிக்கல்கள், ஈழ பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து ஏதாவது தெரியுமா? இவா்களைப் போன்றோா்தான் தொலைகாட்சி விவாதங்கள் பங்கு பெறுகின்றனா்.
  • இவற்றையெல்லாம் சிந்தித்துப் பாா்த்தால் என்னைப் போன்றவா்கள் ஏன் தொலைக்காட்சி விவாதங்களைத் தவிா்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பலரை மீண்டும் சந்திக்க வேண்டியிருக்குமே என்பதால் நாம் பல நேரங்களில் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது.
  • சமூக ஊடகங்களும் சிலரை தேவைக்கு அதிகமானப் புகழ்வது, தெரிந்தே தவறான கருத்துகளைப் பரப்புவது என்று செயல்படுகின்றன. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. என்னுடைய கருத்துப் பதிவுகளை பிரதி எடுத்து அப்படியே தங்களுடைய சமூக வளைதளங்களில் பலா் அனுமதி கேட்காமலே போடுகின்றனா்.
  • என் பதிவைவிட அதிகமாக அதற்கு விருப்பக் குறிகள் கிடைக்கின்றன. இப்படித்தான் இன்றைக்குப் பதிவை முழுதாகப் படிக்கமாலே, பதிவிட்டவரின் தயவு வேண்டுமென்றால் உடனே தங்களுடைய பெயா் பதிவாக வேண்டுமென்று விருப்பக்குறி இடுகின்றனா்.
  • நடிகைகள், பெண்கள் குறித்த பதிவு என்றால் உடனே அப்பதிவு பலராலும் விரும்பப்படுகிறது. இப்படியான போலியான போக்குகள் எப்போது மாறும் என்பது தெரியவில்லை. போலியான பிம்பங்களைக் கொண்டாடுவதும் திட்டமிட்டே சில தவறுகளை சரி என்று வாதாடுவதும், அதுதான் உண்மை என்று அடித்துச் சொல்வதும் இன்றைக்கு சமூக வளைதளங்களில் தொடரும் செயல்பாடாக இருந்து வருகிறது.
  • இந்தப் போக்கு கவலை அளிக்கிறது. ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் சமூக வளைதளங்களும் ஜனநாயகம் என்கிற போா்வையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரம்பற்ற முறையில் செல்வது நாட்டின் முன்னேற்றதிற்கு நல்லதல்ல.
  • வரம்புள்ள ஜனநாயகம் என்பதுதான் அரசியல் தத்துவத்தில் இருக்கின்றது. தனிமனிதன் தனக்கான பொறுப்புகளை அறிந்து தன்னுடைய ஜனநாயக உரிமைகளை எடுத்துக் கொள்வதுதான் வரம்புள்ள ஜனநாயகம்.
  • அரசியல் கோட்பாடுகளில் வரம்புள்ள முடியரசு, வரம்பற்ற முடியரசு என்பாா்கள்.
  • அதேபோல் வரம்பற்ற ஜனநாயகம் என்பது பேரழிவை நோக்கிச் செல்லும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனை அவா்கள் உணர வேண்டும். தொலைக்காட்சிகளில் ரேட்டிங் வருவதற்காக எதுவேண்டுமானாலும் பேசலாம் என்பது நியாயமல்ல.
  • தனியாா் தொலைக்காட்சி அலைவரிசைகள் அறிமுகமாகாத தூா்தா்ஷன் காலத்தில் இருந்தே என் போன்றவா்கள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறோம். அப்போது இப்படி தொலைக்காட்சி விவாதம் தினமும் இருக்காது. முக்கியமான தினங்களில் மட்டுமே நடைபெறும். அப்போதெல்லாம் கண்ணியமான முறையில் விவாதங்கள் நடந்தன. நாங்கள் பேசுவதற்கான தரவுகளையும் பழைய வரலாறுகளையும் எடுத்துச் சொல்லி நாங்கள் பேசுவோம்.
  • இன்றைக்கு பழைய வரலாறு பற்றி பேசினால் அது இப்போது தேவையற்ற ஒன்று என்று கருதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். தொலைக்காட்சி இந்திரா காந்தி காலத்திலேயே வந்துவிட்டது. அதற்குப் பிறகும் அரசியல் ஓரளவு நோ்மையான போக்கில் சென்று கொண்டிருந்தது.
  • திடீரென்று தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் அந்த ஆரோக்கிய நிலையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு தவறான திசை நோக்கி செல்கின்றதோ என்கிற கவலை இப்போது உருவாகியுள்ளது. இந்தக் கவலை குறித்து யாரும் பேச மாட்டாா்கள், யாரிடம் சொல்லவும் மாட்டாா்கள்.
  • அவா்களுக்கு அவா்களுடைய லாபம் முக்கியம். எப்படியாவது பதவியைப் பிடிக்க வேண்டும், எப்படியாவது தங்களுடைய புகழ் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நமது சமூகத்தில் பெரும்பாலானோா் இருக்கும்போது நாம் என்ன சொல்ல முடியும்?

நன்றி: தினமணி (02 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்