- அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என்கிற வாதம் புதிதொன்றுமல்ல. கடந்த கால் நூற்றாண்டாக, பாரதிய ஜனதா கட்சி, "ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்கிற அரசியல் கோஷத்தை எழுப்பி வருகிறது. தேர்தல் ஆணையமே 1980-களில் இதுபோன்றதொரு கருத்தை முன் வைத்தது.
- நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், நரேந்திர மோடி தலைமையில் அமைந்த முதலாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, 40 அரசியல் கட்சிகளை அழைத்து, இது குறித்து விவாதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- ஆனால், காங்கிரஸ் மட்டுமல்லாமல், முக்கியமான பல மாநிலக் கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
- இந்த ஆண்டு அரசியல் சாசன தினமான நவம்பர் 26-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும், "ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார்.
- 2024-இல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்கிற முடிவை அரசு எடுக்கக்கூடுமோ என்கிற ஐயப்பாட்டை பிரதமரின் உரை எழுப்புகிறது.
- இப்போதைய நிலையில், நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவருவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை, மத்தியில் ஆளும் பாஜக-வால் ஏற்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கையில் எழுந்திருக்கும் எண்ணம் இது என்று கருத இடமிருக்கிறது.
- இப்படியொரு யோசனை ஏற்படுவதற்குப் பின்னணி இருக்கிறது. அன்றைய இந்திரா காந்தி அரசு, அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தபோது, இதற்கு முன்னுதாரணம் ஏற்படுத்தி இருக்கிறது. 1976-இல் 42-ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம், மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும், ஐந்தாவது மக்களவையின் பதவிக்காலமும் ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டன.
- 2024-இல், அதே வழிமுறையைப் பின்பற்றி, சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை நீட்டித்து அல்லது சுருக்கி, மக்களவைத் தேர்தலுடன் இணைந்து "ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்கிற நடைமுறையை ஏற்படுத்த, நரேந்திர மோடி அரசு முனைகிறதோ என்று கருதத் தோன்றுகிறது.
- 1967 வரை மக்களவை, சட்டப்பேரவைகள் ஆகியவற்றிற்கு தனித்தனியாகத் தேர்தல் நடத்தாமல் இணைத்தே நடத்தப்பட்டது. மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது மட்டுமல்லாமல், மத்திய - மாநில அரசுகள் தங்களது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவும் செய்தன.
- 1967-இல் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்தபோது, மாநிலக் கட்சிகளின் கூட்டணிகள் ஆட்சி அமைத்தன. கூட்டணிக் கட்சிகள் நீண்டநாள் பதவியில் தாக்குப்பிடிக்க முடியாமல், ஆட்சிகள் கவிழ்ந்தபோது ஒரு சில மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்குத் தனியாகத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- 1971-இல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவால் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் இருந்த பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அரசு, வங்கதேசப் போரைத் தொடர்ந்து, அந்த வெற்றியை சாதகமாக்கிக்கொள்ள, பதவிக் காலம் முடிவதற்கு முன்பே மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலியது. அதன் பிறகு 1967-க்கு முன்பிருந்த நிலைமை திரும்பவே இல்லை.
- ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் என்கிற நிலைமையை ஏற்படுத்தினால், ஒரே ஒரு வாக்காளர் பட்டியல் தயாரித்தால் போதும். உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எல்லா தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி விடலாம்.
- பாதுகாப்புப் படையினருக்கும், காவல் துறையினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் அது மிகப் பெரிய நிம்மதியை அளிக்கும். நாம் பல கோடி ரூபாயை வளர்ச்சிப் பணிகளுக்காக மிச்சப்படுத்தலாம். தேர்தல் விதிமுறை நடைமுறைக் காலம் என்று வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்படாது - இவையெல்லாம் "ஒரே தேசம் ஒரே தேர்தல்' முறைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்கள்.
- "ஒரே தேசம் ஒரே தேர்தல்' நடைமுறைக்கு வந்தால், மக்களவையிலும், எல்லா சட்டப்பேரவைகளிலும் ஒரே கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது என்ன நிச்சயம்? தேர்தல் முடிந்த சில வாரங்களில் கூட்டணி ஆட்சிகள் கவிழ்ந்தால், ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டு அரசு பெரும்பான்மையை இழந்தால், அடுத்த ஐந்தாண்டுகள் ஆளுநர் ஆட்சியில் தொடரவா முடியும்?
- ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்தத் தேர்தல்வரை அவரைத் திருப்பி அழைக்கும் உரிமை நமது தேர்தல் முறையில் இல்லை.
- மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தனித்தனியாகத் தேர்தல் நடக்கும்போது, வாக்காளர்கள் வெவ்வேறு விதமாக முடிவெடுப்பதை நாம் அனுபவபூர்வமாகப் பார்த்திருக்கிறோம்.
- நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைத்தன்மை கூட்டாட்சி முறை எனும் நிலையில், "ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்பது வாக்காளர்களின் ஜனநாயக உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பது மட்டுமல்ல, அது நடைமுறை சாத்தியமும் அல்ல.
- வேடிக்கை என்னவென்றால், அரசியல் சாசன விவாதத்தின்போது, அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், சட்ட அமைச்சரான "பாபாசாகேப்' டாக்டர் அம்பேத்கரும் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல், குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை ஆகியவற்றை ஆதரித்தனர். ஆனால், அவற்றை அரசியல் சாசன சபை உறுப்பினர்கள் பெரும்பான்மை வாக்கில் நிராகரித்தனர்.
- நாடாளுமன்றப் பெரும்பான்மையால் மட்டுமே முடிவெடுக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல "ஒரே தேசம் ஒரே தேர்தல்'. கேட்பதற்கு நன்றாக இருக்கிறது; நடைமுறையில் சாத்தியமில்லை!
நன்றி :தினமணி (01-12-2020)