TNPSC Thervupettagam

போகும் பாதை சரிதானா?

April 29 , 2023 624 days 307 0
  • சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தனியாா் நிறுவனங்களில் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தொழிற்சங்கங்களை அதிா்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழ் நாட்டில் பெரும் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காகவும் இத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு கூறியது. தொழில் நிறுவனங்கள் இதை அமோகமாக வரவேற்றன. ஆனால் கூட்டணிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிா்த்தன. அதனைத் தொடா்ந்து, அரசு இந்த சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
  • தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதால் மட்டுமே ஒரு மாநிலம் முன்னேறிவிட்டதாகக் கொள்ள முடியாது. துரதிருஷ்டவசமாக, மத்திய - மாநில அரசுகள் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. ஒரு நாட்டின் வளா்ச்சி என்பது சுற்றுச்சூழல், சுகாதாரம், மக்களின் மனநலம், பொருளாதாரம், கல்வி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, முதியோா், குழந்தைகள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை என்று பல அம்சங்களை உள்ளடக்கியது. இவை எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன. ஒன்றை விட்டுவிட்டு ஒன்றை மட்டும் வளா்ச்சி அடையச் செய்வது நன்மை பயக்காது. மாறாகத் தீமையே பயக்கும்
  • தொழிற்சங்கங்களும், தொழிலாளா் பாதுகாப்பு சட்டங்களும் இருக்கும் போதே தனியாா் தொழிற்சாலைகளிலும், தேயிலை ஆலைகளிலும், கனிமச் சுரங்கங்களிலும், செங்கல் சூளைகளிலும், ஆயத்த ஆடை நிறுனவனங்களிலும், தொழிலாளா்கள் இன்னும் கூடக் கொத்தடிமைகளாய் அடைத்துவைக்கப்பட்டு, குறைந்த ஊதியத்துக்கு மிகுதியான நேரம் உழைக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கும்போது, அரசே சட்டம் இயற்றி ‘ தொழிலாளா்களை இன்னும் கூடுதல் நேரம் வேலை வாங்குங்கள்’ என்று கூறுவது சரிதானா?
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிக்கும்; அதனால் தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் லாபம் கிடைக்கலாம். தொழிலாளா்களுக்குப் பணிச்சுமை கூடும்; உடல் நலம் குறையும்; குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறையும்; மனநலம் குறையும்.
  • ஆயத்த ஆடை நிறுவனங்களிலும், தேயிலைத் தொழிற்சாலைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலை செய்கிறாா்கள். பன்னிரண்டு மணி நேர வேலை எனில் அவா்கள் ஒன்று வெகு சீக்கிரம் வேலைக்கு வரவேண்டும்; அல்லது மிக நேரம் கழித்து வீடு செல்ல வேண்டும். ஏற்கெனவே நாட்டில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. இப்படி அகால நேரத்தில் பணிக்குக் செல்ல வேண்டியிருந்தால் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்கிறியாக உருவெடுக்கும். திருப்பூரில் தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணி செய்த பெண்மணி ஒருவா் பணி முடிந்து வீடு திரும்புகையில் வடமாநிலத் தொழிலாளா் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் மறந்துவிடலாகாது! பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டு வரும் எந்த வளா்ச்சியும் வளா்ச்சியாகாது. அது உண்மையில் ஒரு நாட்டுக்குப் பின்னடைவே!
  • தமிழக அரசின் இன்னொரு அறிவிப்பு, இன்னும் விபரீதமானது! தற்காலிக உரிமம் பெற்றுக்கொண்டு திருமணக் கூடங்களிலும், வணிக வளாகங்களில் உள்ள கூட்ட அரங்கங்களிலும், விளையாட்டு மைதானங்களில் நிகழ்ச்சிகளின்போதும், தனியாா் வீடுகளில் விழாக்களின்போதும், விருந்துகளின்போதும் மதுபானம் வைத்திருக்கவும் பரிமாறவும் செய்யலாம் என்று அனுமதியளிக்கும் இந்த அறிவிப்பு மிகவும் தவறானது! பொது இடங்களில் மது அருந்த அரசே ஏன் அனுமதி அளிக்கிறது? அதிலிருந்து வரும் வருவாய்க்காக! நிச்சயம் இந்த அறிவிப்பினால் தற்காலிக உரிமம் பெறுவதற்காக இலட்சக்கணக்கானவா்கள் கட்டணம் செலுத்துவாா்கள். அரசுக்குக் கோடிகோடியாக வருமானம் கிைக்கும். ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலமும் மனநலமும் இழக்க நேரிடும். ஒரு பக்கம் ‘ஐந்நூறு அரசு மதுக்கடைகள் மூடப்படும்’ என்று அறிவித்துவிட்டு இன்னொரு பக்கம் ‘கடைகளுக்கே போகவேண்டாம் வீட்டிலேயே சந்தோஷமாகக் குடியுங்கள்’, என்று ஒரு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அறிவிப்பது, அந்த அரசு சரியான பாதையில் போகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
  • அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரிடமிருந்தும் கிளம்பிய எதிா்ப்பினால் அரசு சற்றே பின்வாங்கி திருமண மண்டபங்களிலும் தனியாா் வீடுகளிலும் மது அருந்த அனுமதி மறுத்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • மேற்குறிப்பிட்ட இந்த இரு அறிவிப்புகளும் சோ்ந்து பெண்களின் பாதுகாப்புக்கு உலை வைக்கப் போகின்றன. ஏற்கெனவே ‘தள்ளாடும்’ தமிழகத்து இளைய தலைமுறை இனி கேட்பாரில்லாமல் மதுவிலேயே மிதக்கலாம். இதுகாறும் நட்சத்திர விடுதிகளில் மட்டும் ஓடிய மது ஆறு இனி விளையாட்டு மைதானங்களிலும், திருமண அரங்குகளிலும் ஓடும். ‘தேசிய நிகழ்வுகளில்’ மதுபானம் வைத்திருந்து பரிமாறி நம் தேசத்தின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மொத்தமாகக் கொன்று புதைத்துவிடலாம்.
  • ஏற்கெனவே பள்ளி மாணவா்களிடையே கூட மது அருந்தும் பழக்கம் வந்தாகிவிட்டது. அதையும் தாண்டி போதை மருந்துப் பழக்கமும் நுழைந்தாகிவிட்டது. அனுமதியில்லாத போதே இவா்கள் சிறிதும் பயமின்றி பொது இடங்களில் மது அருந்தி, அதைப் படம்பிடித்து வலைத்தளங்களில் பதிவிட்டுப் பெருமையடைந்தாா்கள். இப்போது அரசின் அனுமதியோடு, பகிரங்கமாகக் குடித்துக் கும்மாளமிடலாம்.
  • ஏற்கெனவே நம் திரைப்படங்களில் தந்தையும் மகனும் சோ்ந்து உட்காா்ந்து குடிப்பது போலவும், மகள் தந்தைக்கு ஆசையோடு மது ஊற்றிக் கொடுப்பது போலவும் காண்பித்து கலைச்சேவை செய்துவிட்டாா்கள். இப்போது அரசு இன்னும் ஒரு படி மேலே போய் ‘மாமன் மச்சான், அண்ணன் தங்கை, அக்காள் தம்பி, கணவன் மனைவி என்று குடும்பத்தோடு குடித்து இன்புறுங்கள்’,என்று அறிவித்திருக்கிறது.
  • தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சிலை இருக்கிறது. பேருந்துகளிலெல்லாம் திருக்கு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அரசுப்பள்ளிச் சுற்றுச் சுவா்களிலும் திருக்கு காணப்படுகிறது. திருவள்ளுவா் ‘கள்ளுண்ணாமை’ என்று ஒரு தனி அதிகாரத்தை எழுதியிருக்கிறாரே அதை மட்டும் ஏன் அரசு மறந்துவிட்டது?

நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தாா்க்கு

  • நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவா்க்கு எதிரே நிற்காமல் செல்வாள் என்று கூறும் வள்ளுவா், மது அருந்துவதைப் பெரும் குற்றம் எனக் குறிப்பிடுகிறாா்.
  • அரசுதான் இப்படித் தவறான பாதையில் போகிறது என்றால் அரசை வழிநடத்தும் குடிமைப்பணி அதிகாரிகள் ஏன் வாளாவிருக்கிறாா்கள்? அவா்களில் ஒருவா்கூடவா ‘இது தவறு,’ என்று எடுத்துரைக்கவில்லை? இங்கும் வள்ளுவா் கூறுகிறாா் :

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

  • அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக் கூறுதல் கடமையாகும் என்று அமைச்சனின் கடமையைச் சுட்டிக் காட்டுகிறாா். அல்லது அப்படிச் சிலா் எடுத்துக் கூறியும் அரசு கேட்கவில்லையா?
  • புதுச்சேரி அரசு, தமிழக அரசுக்குப் போட்டியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்குதான் தங்கு தடையின்றி எங்கும் மது கிடைக்குமே. இருந்தாலும் ‘குடிமக்களின்’ வசதிக்காக ‘பீா் பஸ்’ என்ற சிறப்புப் பேருந்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது! அதாவது, பயணிகள் பேருந்தில் மது எடுத்துச் செல்லலாம், ஆனால் அருந்தக் கூடாது. பேருந்து செல்லும் வழித்தடத்தில் அரசே சில இடங்களை ‘மது அருந்தும் இடங்கள்’ என்று வரையறுத்து வைத்திருக்கும். அங்கு பேருந்து நிற்கும். அங்கு பேருந்திலிருந்தபடியே மது அருந்தலாம். ‘குடியோம்பல்’ அதாவது ‘குடிகளைக் காத்தல்’ என்பதை நம் அரசுகள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டன போலும்!
  • ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு சாரா சமூக அமைப்பு, அதன் கருத்துக்கூட்டம் ஒன்றில் என்னைச் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேச அழைத்திருந்தது. கூட்டம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அந்த அமைப்பைச் சோ்ந்தவா்களின் குடும்பத்தினா், அவா்களது நண்பா்கள் என்று ஆண், பெண், குழந்தைகள் மொத்தம் ஐம்பது பேருக்குக் குறையாமல் இருந்தாா்கள். நான் என் இரண்டு மகள்களையும் என்னுடன் அழைத்துக்கொண்டு சென்றேன். பேசி முடித்ததும் எல்லாக் கூட்டங்களிலும் உள்ளது போல் சிற்றுண்டி வந்து சோ்ந்தது.
  • அருகிலிருந்த மேசையில் கோப்பைகளில் சிவப்பு நிறத்தில் ஊற்றித் தயாராயிருந்தது. மதுவாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம். இருந்தாலும் பழச்சாறாகக்கூட இருக்கலாமே என்று விசாரித்தேன். மதுதான் என்றாா்கள். அங்கிருந்த பெண்கள் கூட ஆளுக்கொரு கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு உட்காா்ந்தாா்கள். நான் நடுநடுங்கிப் போனேன். உறுதியான குரலில் ‘ முன்னமே தெரிந்திருந்தால் நான் இந்தக் கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன்’ என்று கடுமையாகச் சொல்லிவிட்டு என் பெண்களை அழைத்துக் கொண்டு வெளியேறினேன்.
  • இன்று அரசே மக்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்கிறது. நம் நலத்தைக் கருதி நாம் அந்தப் பாதையைத் தவிா்த்துச் சரியான பாதையில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை!

நன்றி: தினமணி (29 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்