TNPSC Thervupettagam

போதிய தரவுகள் இன்றி கரோனா தடுப்பூசியை அனுமதிக்கக் கூடாது

December 15 , 2020 1497 days 638 0
  • இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் பரிசோதிக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்குப் போதிய தரவுகள் இல்லாமலும் அவற்றைக் குறித்து சந்தேகங்கள் நிவர்த்தியாவதற்கு முன்பாகவும் அவசரம் அவசரமாக அனுமதி வழங்க முடியாது என்று இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
  • புணே நகரில் அமைந்துள்ள சீரம் நிறுவனம், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை தயாரிக்கும் தடுப்பூசி மருந்துகளில் மேலும் கூடுதலான பாதுகாப்பையும் நோய் எதிர்ப்புத் திறனையும் நிரூபிக்குமாறு கேட்டிருப்பது, தடுப்பூசிக்கான அவசரத் தேவையைக் காட்டிலும் போதுமான தரவுகளைச் சரிபார்ப்பதற்கே மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை அதிகாரி முன்னுரிமை கொடுத்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதனால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் கிடைப்பதற்குச் சற்று தாமதமாகலாம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
  • அதே நேரத்தில், அடுத்து வரும் சில வாரங்களில் தடுப்பூசி கிடைக்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை இந்த கமிட்டி தவறாகப் புரிந்துகொண்டு விரைந்து அனுமதியளித்துவிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
  • பாரத் பயோடெக் நிறுவனம் தனது மூன்றாவது கட்டப் பரிசோதனைகள் குறித்து எந்தத் தரவுகளையும் சமர்ப்பிக்காமலேயே தடுப்பூசிக்கு அனுமதி பெற்றுவிட முயல்கிறது.
  • அதேநேரத்தில், சீரம் நிறுவனமோ இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட மருந்துப் பரிசோதனைகளிலிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு, தடுப்பாற்றல் குறித்த தரவுகளின் தற்காலிக அறிக்கையையே சமர்ப்பித்திருக்கிறது. அதிலும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மருந்துப் பரிசோதனைகளின் பாதுகாப்பு விவரங்கள் நவம்பர் மாதம் பாதி வரையில் மட்டுமே இருக்கின்றன.
  • செப்டம்பர் 21-ல் சீரம் நிறுவனத்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனைகள் தொடங்கின. முதல் முறையாக மருந்து கொடுக்கப்பட்டதிலிருந்து 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மருந்துகள் கொடுக்கப்பட்டன.
  • அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் பரிசோதனைக்கான நிபந்தனைகளை விதித்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இரண்டாவது முறை மருந்து கொடுக்கப்பட்டு, அதன் விளைவுகள் குறித்த தரவுகள் கிடைப்பதற்கு முன்பே அத்தடுப்பு மருந்தைத் தயாரிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
  • ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியின் மூன்றாவது கட்டப் பரிசோதனைகளின் தற்காலிக தரவுகள் சார்ந்து சில கேள்விகள் இருப்பதால், பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்த தரவுகளை கமிட்டி கேட்டிருப்பது சரியானதாகும்.
  • கடந்த செப்டம்பரில் உலகின் மிகப் பெரிய ஒன்பது தடுப்பூசி நிறுவனங்கள், கரோனா தடுப்பூசி மருந்துகளில் உயர்ந்த தரத்தை எட்டுவதற்கு முன்பாக மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற முயல மாட்டோம் என்றும் தடுப்பூசி போடப்படும் தனிநபர்களின் பாதுகாப்பே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தன.
  • அதுபோல, இந்திய நிறுவனங்களும் தங்களது மருந்துகளின் பரிசோதனைகளை மிகவும் உயர்ந்தபட்ச அற விழுமியங்களோடு நடத்தி, அது குறித்த முழுமையான தகவல்களைச் சமர்ப்பித்த பிறகே அவசர கால அனுமதியைப் பெறுவது சரியாக இருக்க முடியும்.

நன்றி: தி இந்து (15-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்