TNPSC Thervupettagam

போதை இல்லா தமிழகம்

August 16 , 2022 723 days 1607 0
  • தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதும், அவற்றைப் பயன்படுத்துவோா், குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.
  • அவற்றில், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும், போதைப்பொருள்களை விற்பனை செய்வோா் கைது செய்யப்பட்டு அவா்களின் சொத்துகள் முடக்கப்படும் போன்ற அறிவிப்புகள் முக்கியமானவை. போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்களுடனும் காவல்துறை கண்காணிப்பாளா்களுடன் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, போதைப் பொருள்களைத் தடுப்பதற்கான மேலும் பல ஆலோசனைகளையும் முதல்வா் வழங்கினாா்.
  • அடுத்தடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தலைமையில் போதைப் பொருள்கள் தடுப்பு மாநாடு, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு உறுதிமொழி என போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
  • போதைப் பொருள்களைக் கடத்தினால் சொத்துகள் முடக்கம் என்கிற அறிவிப்பு, அப்பொருள்களைக் கடத்துவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி, கடத்தலை கைவிடச் செய்ய வழிவகுக்கும். டிஎஸ்பி தலைமையிலான நுண்ணறிவுப் பிரிவு என்பது, போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை கூடுதல் தீவிரத்துடன் கண்டறிந்து தடுக்க உதவும்.
  • தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கடந்த 10 ஆண்டு காலத்தில் ரூ.38 கோடி மதிப்பில் 952 டன் அளவிலான குட்கா, பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன; திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை ரூ. 9 கோடி மதிப்பிலான 152 டன் குட்கா, பான் மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள் மீது கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமாா் ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது அரசு அளித்துள்ள புள்ளிவிவரம்.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை போதைப் பொருள்கள் நமது மாநிலத்தில் தயாரிக்கப்படவில்லை, வெளிமாநிலங்களிலிருந்தே இங்கு கடத்தி வரப்படுகின்றன என்று அரசு தெளிவாகச் சொல்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவே இவ்வளவு இருக்கும்போது, விற்பனையான, இன்னும் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதைப் பொருள்களின் அளவை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது.
  • வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தனிக் குழுக்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப் பொருள்களை விற்பனை செய்வது காவல்துறையினருக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதைத் தடுக்க போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் ‘சைபா் செல்’ தனியாக ஏற்படுத்தப்படும் என்கிற அரசின் முடிவு சரியானது.
  • போதைப் பொருள் அதனைப் பயன்படுத்தும் தனிமனிதா்களுக்கு மட்டும் தீங்கிழைப்பதல்ல. அது மிகப்பெரும் சமூகப் பிரச்னையாகவும் தற்போது மாறி வருகிறது. பெரும் குற்றங்களைச் செய்யவும் போதைப் பொருள் ஊக்கமளிக்கிறது.
  • சிறாா்கள்கூட மது, குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. சில இடங்களில் பள்ளி மாணவிகள்கூட மது அருந்தும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை கனக்கச் செய்தது.
  • 1987-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபை அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் போதைப் பொருள்களுக்கு எதிரான தினமாக ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வையும் ஐ.நா. ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் போதைப்பொருள் இன்று அழிக்க முடியாத தீயசக்தியாக வளா்ந்து நிற்கிறது.
  • இந்த சூழலில் போதைப் பொருள்களின் தீமை குறித்து மாணவா்களுக்கு இளம் வயதிலேயே விளக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் உள்ளது. என்றாவது ஒருநாள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுப்பதுடன் நிறுத்தி விடாமல், போதைப் பொருள்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.
  • பேருந்துகள், ரயில்கள், சரக்கு வாகனங்கள் என போதைப் பொருள்கள் கடத்திவரப்படும் வாய்ப்புகள் அனைத்தையும் தடுக்க காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை சோதனைச்சாவடிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் போன்றவற்றை அலட்சியத்துடன் அனுமதிப்பது இப்போதும் நடந்து வருகிறது. அதுபோல அல்லாமல் போதைப் பொருள்கள் கடத்தப்படும் வாகனங்கள் குறித்து உண்மையான சோதனை அவசியம்.
  • இந்த வேளையில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கவும், பள்ளி மாணவா்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

நன்றி: தினமணி (16 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்