- அண்மைக் காலமாக, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பான செய்திகள் அதிகரித்திருக்கின்றன. கூடவே, போதைப் பழக்கத்தின் விளைவாகஏற்படும் குற்றங்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. உண்மையில், போதைப் பழக்கம் அதிகரிப்பு ஓர் உலகளாவிய பிரச்சினை. பல்வேறு சமூக, கலாச்சாரக் காரணங்களால் மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இந்த அவலத்துக்கான தீர்வுகள் என்ன?
கவலையளிக்கும் போதைப் பழக்கம்:
- 2021இல், 15 முதல் 64 வயதுக்கு உள்பட்டவர்களில் 17 பேரில் ஒரு நபர் போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார் என்று ஐநா போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற அலுவலகம் (UNODC) வெளியிட்ட உலக போதைப்பொருள் அறிக்கை 2023 கூறுகிறது.
- மேலும், 2011இல் 24 கோடியாக இருந்த போதைப் பழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை 2021இல் 29.6 கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் வளர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இது 23% உயர்ந்துள்ளது. அதாவது, உலக மக்கள்தொகையில் 15 முதல் 64 வயதில் 5.8% நபர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்.
- இதில் கஞ்சா (Cannabis) தான் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 21.9 கோடிப் பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்ததாக, ஆம்பெடமைனை (amphetamine) 3.6 கோடிப் பேரும், கோகெய்னை (Cocaine) 2 கோடிப் பேரும், மருத்துவம் சாராத ஓபியாடுகளை (Opioids) 6 கோடிப் பேரும் பயன்படுத்துகிறார்கள். 2021 கணக்கெடுப்பின்படி சுமார் 1.32 கோடிப் பேர் ஊசிகளின் மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திக்கொள்கிறார்கள். இணையவழி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போதைப்பொருள் விற்பனை / கடத்தல் பெருகிவருவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- இந்தியாவில் 16 கோடிப் பேர் மதுபானத்தையும், 3.1 கோடிப் பேர் கஞ்சாவையும், 2.3 கோடிப் பேர் ஓபியாடையும் பயன்படுத்துவதாக, மத்திய சமூக நீதி மேம்பாட்டு அமைச்சகம் 2019இல் வெளியிட்ட இந்தியாவின் போதைப்பொருள் பயன்பாடு-அளவு குறித்த தேசிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
- போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல்ரீதியாகப் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அவர்களுடன் இருப்பவர்களும் / தொடர்பே இல்லாத பிறரும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறித்த புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலை அளிப்பவை.
மாநிலங்களின் நிலவரம்:
- 2022இல் போதைப்பொருள் தொடர்பாகப் பதிவான வழக்குகள் குறித்து 2023 டிசம்பரில் ‘இந்தியாவில் குற்றங்கள் 2022’ (Crime in India) அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, போதைப் பழக்கம் தொடர்பான குற்றங்களில் கேரளம் (26,619 குற்ற நிகழ்வுகள்) முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம் (13,830), பஞ்சாப் (12,442), உத்தரப் பிரதேசம் (11,541) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இப்பட்டியலில் தமிழ்நாடு (10,385) ஐந்தாம் இடத்தில் உள்ளது.
- போதைப்பொருள் தொடர்பாகப் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை, அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் மக்கள்தொகை அதிகம். எனவே, அங்கு வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
- எனவே, ஒவ்வொரு ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை குற்றங்கள் பதிவாகின்றன என்ற அடிப்படையில் பார்த்தால், கேரளம் 74.6 என்ற விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் (40.7), இமாச்சலப் பிரதேசம் (20.4), மிசோரம் (19.9), அருணாசலப் பிரதேசம் (19.7) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- நகரங்களைப் பொறுத்தவரை, போதைப்பொருள் தொடர்பான குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மும்பை முதலிடம் வகிக்கிறது. அங்கு 11,046 குற்ற நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. பெங்களூரு (4,027), கொச்சின் (2,751), இந்தூர் (1,745), கோழிக்கோடு (1,282) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- அதேவேளையில், குற்ற நிகழ்வுகளின் விகிதம் என்ற அடிப்படையில், கொச்சின் தான் முதலிடத்தில் உள்ளது (129.9). இந்தூர் (80.5), கோழிக்கோடு (63.1), மும்பை (60), பெங்களூரு (47.5) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இந்தியாவில் 2022இல் அதிகப்படியான மக்கள்தொகை / குற்ற நிகழ்வுகள் விகிதம் உள்ள ஐந்து மாநிலங்களில், தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அதேபோல், போதைப்பொருள் சம்பந்தமாகப் பதிவான வழக்குகள் / அதிகப்படியான குற்ற நிகழ்வுகள் உள்ள ஐந்து நகரங்களின் பட்டியலிலும் தமிழகத்தின் நகரங்கள் இடம்பெறவில்லை. எனினும், தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் தொடர்பான குற்றச்செயல்கள் தொடரவே செய்கின்றன என்பதை மறுக்க முடியாது.
- போதைப் பழக்கம் அதிகரிப்பதற்கான காரணங்கள்: மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரிக்கப் பல்வேறு காரணங்கள் உண்டு. நகர்ப்புறங்களில் குடும்ப அமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள், குழந்தைகள் மீதான பெற்றோர்களின் கவனக்குறைவு போன்றவை முக்கியக் காரணங்கள்.
- சக மாணவர்கள், சக இளைஞர்களுடன் இணைந்துதான் பொதுவாகப் பலரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இவற்றை ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். இது குறித்துப் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.
- பள்ளி, கல்லூரிகளில் உள்ள நிர்வாகம் / ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது உள்ள அக்கறையின்மை இன்னொரு காரணம். குறிப்பாக, பெரும்பாலான தனியார் கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களின் மதிப்பெண்களில் காட்டப்படும் அக்கறை அவர்களின் நல்லொழுக்கத்திலும், ஒட்டுமொத்த நலனிலும் அதிகம் பிரதிபலிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் பல தனியார் கல்லூரிகளில் விளையாட்டு போன்ற செயல்களுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
- இது தவிர, சமூகத்தில் ஏற்படுகின்ற கலாச்சாரச் சீரழிவும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. குறிப்பாக, நுகர்வுக் கலாச்சாரம் மாணவர்களையும், இளைஞர்களையும் தவறாக வழிநடத்துகிறது. சமூகத்தைப் பற்றியோ, சமூகச் செயல்பாடுகளில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது பற்றியோ சிந்திக்கத் தூண்டுவதில்லை. சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கும் மாணவர்களும், இளைஞர்களும் போதை போன்ற தீய பழக்கத்துக்கு அடிமையாக மாட்டார்கள்.
எப்படித் தடுப்பது?
- போதைப் பழக்கத்தைத் தடுப்பதில் மாநில அரசுகளும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், அவற்றால் மட்டுமே போதைப் பழக்கத்தைத் தடுக்க முடியாது. போதைப் பழக்கம் அதிகரிப்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மட்டும் அல்ல... சமூகப் பிரச்சினை.
- ஒரு மாநில அரசு தன்னுடைய உயர் கல்வித் துறை / பள்ளிக் கல்வித் துறைகளின் மூலமும் சில திடமான முயற்சிகளின் மூலமும் போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும், அதன் மூலம் போதைப்பொருள் பழக்கத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
- இளைஞர்கள் மற்றும் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். அரசுடன் சேர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், நிர்வாகத் துறைகள், சமூக ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு செலுத்தினால் மட்டுமே போதை அரக்கனுக்கு முடிவுரை எழுத முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 04 – 2024)