TNPSC Thervupettagam

போதைப் பொருள் மாஃபியா: மெக்சிகோ கடந்து வந்த பாதை

July 2 , 2024 193 days 197 0
  • உலக நாடுகள் ஆர்வத்துடன் கவனித்துவந்த இரண்டு் அரசியல் நிகழ்வுகள் ஜூன் முதல் வாரத்தில் நிகழ்ந்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான மெக்சிகோ நாட்டின் அதிபரைத் தேர்வு செய்வதற்காக ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அதிபர் தேர்தலும், இந்திய மக்களவைத் தேர்தலும் ஜூன் முதல் வாரத்தில் முடிவடைந்தன. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும், மெக்சிகோ நாட்டின் அதிபராக கிளாடியா ஷீன்பாமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் பெண் அதிபர்:

  • மெக்சிகோவில் வாக்களிக்கும் உரிமையின்றிப் பல தேர்தல்களைப் பெண்கள் கடந்துவந்த நிலையில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 1953இல் வழங்கப்பட்டது. பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், அரசாங்கத்தின் அனைத்துப் பொறுப்புகளிலும், குறிப்பாக மாநில, நகராட்சித் தேர்தல்களிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசமைப்புத் திருத்தச் சட்டம் மெக்சிகோவில் 2019இல் கொண்டுவரப்பட்டது.
  • மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையானவர்களாக (78%) வசித்துவரும் நிலையில், முதல் பெண் அதிபராகச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிளாடியா ஷீன்பாம் வெற்றி பெற்றுள்ளார். அடிப்படையில், சுற்றுச்சூழல் அறிவியலாளரான ஷீன்பாம், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று இந்த வெற்றியை அடைந்திருக்கிறார்.

நம்பிக்கையளித்த வாக்குறுதிகள்:

  • வழக்கமாக எல்லா நாடுகளின் அரசியல் தலைவர்களாலும் வழங்கப்படும் வாக்குறுதிகளான வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பின்மையை அகற்றுதல் போன்றவற்றை ஷீன்பாமும் தனது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். ஆனால், அவை மட்டும் அவரது வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை.
  • அவர் அறிவித்த ஏனைய தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. அதிகளவில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள், பெண் கொலைகள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் சர்வதேச மாஃபியாக்களின் வன்முறைச் செயல்கள், அரசுத் துறை அதிகாரிகளிடையே நிலவிவரும் கையூட்டுக் கலாச்சாரம் ஆகியவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள், பெரும்பான்மையான வாக்காளர்களின் நம்பிக்கையை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன.
  • 13 கோடிக்கும் சற்றுக் குறைவான மக்கள்தொகை உடைய மெக்சிகோ நாட்டில் 2022இல் 32,223 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2015இல் 427 பெண்கள் கொல்லப்பட்ட நிலையில், 2021இல் இந்த எண்ணிக்கை 1,004ஆக இரண்டு மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது

மெக்சிகோவில் வசித்து வரும் பெண்கள்

  •  15 வயதுக்கும் மேற்பட்ட சிறுமிகளில் 70% பேர் வன்முறையுடன் கூடிய குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று 2022இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • அந்த ஆண்டில், மெக்சிகோவில் நிகழ்ந்த 2.7 கோடி குற்றங்களில் 92% குற்றங்கள் காவல் நிலையங்களில் தாக்கல் செய்யாமலோ அல்லது காவல் நிலையங்களில் தாக்கலாகி, உரிய புலன் விசாரணை மேற்கொள்ளாமலோ இருந்துள்ளன எனவும் அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

போதை மாஃபியாக்கள்:

  • மெக்சிகோவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவருவதற்கும், அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் நிகழ்வதற்கும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறை /நீதி பரிபாலனம் செய்யும் நீதித் துறை செயலிழந்து இருப்பதற்கும் பரவலாக நிலவிவரும் கையூட்டும், போதைப் பொருள் மாஃபியாக்களின் ஆதிக்கமும்தான் காரணம் என்பதை மக்கள் உணர்ந்தனர்.
  • அதன் விளைவாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக மெக்சிகோவில் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த பி.ஆர்.ஐ. கட்சியைப் புறக்கணித்துவிட்டு, ஷீன்பாமை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தத் தேர்தலில் மேயர், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிட்ட 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்களைப் போதை மாஃபியாக்கள் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • போதைப் பொருள் மாஃபியாக்கள் ஆதிக்கம் செலுத்திவரும் நாடுகளுள் ஒன்றான மெக்சிகோ நாட்டில் 150க்கும் மேற்பட்ட மாஃபியா குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. இவர்கள் கோகெய்ன், ஓபியம், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் மட்டுமின்றி, செயற்கையாகத் தயாரிக்கப்படும் போதைப் பொருள்களான மெத்தம்பேட்டமைன், ஃபென்டானில் போன்றவற்றையும் உலக நாடுகள் பலவற்றில் கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
  • இவர்களின் செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுவரும் அமெரிக்கா, இவர்களின் ஆதிக்கத்தைத் தடுத்துநிறுத்தும் முயற்சியில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவருகிறது. இம்முயற்சியின் விளைவாக, போதைப் பொருள்கள் கடத்துவதற்காக மெக்சிகோ-அமெரிக்க எல்லைப் பகுதியில் போதை மாஃபியாக்கள் அமைத்திருந்த ரகசிய சுரங்கப் பாதை 2006இல் கண்டறியப்பட்டது.

இந்தியாவுக்கான எச்சரிக்கை:

  • மெக்சிகோவைப் போன்று, சர்வதேசப் போதைப் பொருள் மாஃபியா குழு தற்போது இந்தியாவில் இல்லை என்றாலும், செயற்கை போதைப் பொருள்களைத் தயாரிக்கத் தேவைப்படும் வேதியியல் பொருள்கள் மெக்சிகோ, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுவதை 2022இன் அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
  • மேலும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. 10 முதல் 17 வயதுடைய 1.58 கோடி சிறார் இந்தியாவில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் தொடர்ந்து பிடிபட்டுவருகின்றன.
  • போதைப் பொருள் பயன்படுத்தும் கலாச்சாரம் நம் நாட்டில் வேகமாகப் பரவிவருகின்ற அபாயத்தை இவை வெளிப்படுத்துகின்றன. மெக்சிகோவைப் போல் சிக்கலான நிலைமைக்கு நம் நாடும் செல்லாமல் இருக்க, விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்