TNPSC Thervupettagam

போதையின் பிடியில் சிக்கும் சிறார்

January 13 , 2022 934 days 423 0
  • அண்மையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயக்கமாகிவிட்டதாக என்னிடம் அழைத்துவரப்பட்டான். விசாரணையில், அவன் ஒருவித போதைப் பாக்குக்கு அடிமையாகியிருப்பது தெரிந்தது. அடுத்ததாக, பத்தாம் வகுப்பு வரை படிப்பில் படுசுட்டியாக இருந்த மாணவி, பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளில் பின்தங்கிவிட்டாள் என்ற புகாரோடு வந்தபோது, அவளுக்கும் போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இவ்விரு களநிலவரங்களையும் உறுதிசெய்கின்றன தேசிய ஆய்வுகள்.
  • தேசிய போதைப் பழக்க உளவியல் கழகம் (Addiction Psychiatry Society of India) புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு இணைந்து, டிசம்பர் 10, 11 தேதிகளில், ‘போதைப் பழக்கம் 2021’ எனும் தேசிய மாநாட்டை நடத்தியது. அப்போது விவாதிக்கப்பட்ட களநிலவரங்களில், 2020-ம் ஆண்டு பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட தனிமை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு போன்றவற்றால், போதைப்பொருள் நுகர்வோர் பதிவுகள் 2021-ல் கூடுதலாகியுள்ளன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
  • தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வில், கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகும் இந்தியச் சிறாரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மதுவாலும் அது தொடர்பான பிரச்சினைகளாலும் ஆண்டுக்கு 30 லட்சம் பேரும் நிமிடத்துக்கு 6 பேரும் இறப்பைச் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டில் 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள். சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு களஆய்வில் 9% பேருக்கு மது, கஞ்சா, போதைப் பாக்கு போன்றவற்றின் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலர்களின் கவலை

  • ஆண், பெண், சிறார், பெரியோர் எனப் பாகுபாடில்லாமல் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப்போனவர்கள் தங்கள் உடல்நலனைக் கெடுத்துக்கொள்வதோடு, மனநலனையும் தொலைத்து, நிரந்த நோயாளிகளாகிவிடுவதை நடைமுறையில் காண்கிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்வதோடு, குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சியையும் சூறையாடிவிடுகின்றனர்; குடும்பத்தின் பொருளாதாரம் கரைந்து கடனாளியாகிவிடுகின்றனர்.
  • இந்தப் பழக்கம் நீடிக்கும்போது அவர்கள் உயிருக்கும் உத்தரவாதமில்லை. தற்கொலைக்கான காரணங்களில் போதைப் பழக்கம் முக்கியமானது. அதிலும் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிடும் இந்தப் பழக்கம், அவர்களோடு இணைந்த இளைய சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது; வருங்கால இந்தியாவின் மனித வளம் விரயமாகிவிடுகிறது. ஏதோ ஓர் ஆர்வக் கோளாறாலும், சேரக்கூடாத நண்பர்களின் சேர்க்கையாலும், சில இச்சைகளாலும் தூண்டப்பட்டு இந்தக் கொடூரப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் ஆயிரக்கணக்கான சிறார் திணறுகின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் நிறைய பெற்றோர் பரிதவிக்கின்றனர். இந்தக் கொடுமைக்கு எப்போது தீர்வு என்பதுதான் சமூக ஆர்வலர்களின் பெருங்கவலை.

சமூகத்தின் குறைபாடுகள்

  • போதைப் பழக்கத்துக்குப் பொதுச்சமூகம்தான் இடம் கொடுக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு சிகரெட், மது, புகையிலை எல்லாமே எல்லா வயதினருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அரசின் சட்டவிதிகளின்படி சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பொதுஇடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்கிறது சட்டம். ஆனால், நாட்டில் தெருவுக்குத் தெரு சிகரெட் புகைப்பவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது.
  • இதுவும் சட்டவிதிதான். ஆனால், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறார் கஞ்சா புகைப்பதைக் கேள்விப்படுகிறோம். சட்டப்படி, போதைப்பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது. ஆனால், அது ஏட்டளவில்தான் உள்ளது. தவிரவும், திருமணம், மரணம், பிறந்தநாள், பிரிவு உபசாரம், வார இறுதிச் சந்திப்பு என எல்லா கூடுகைகளிலும் மது உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இப்போது இயல்பாகிவிட்டது.
  • கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் திறம்படச் சமாளித்த தற்போதைய மாநில அரசுகூட மது விற்பனையைத் தடை செய்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கருத்தில் மதுக் கடைகளை மூட யோசிக்கிறது. இம்மாதிரியான சமூகக் குறைபாடுகள் போதைப் பழக்கத்துக்குப் பாதை காட்டுகின்றன என்பதுதான் எதார்த்தம்.

பெற்றோர் கடமை

  • போதைப் பழக்கத்தால் ஏற்படும் கெடுதல்கள் சிறாருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை; பெற்றோர்தான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு முன்பாக சிகரெட் புகைப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
  • பிள்ளைகள் எதிரில் பெற்றோர் சண்டை போடக் கூடாது. போதைப் பழக்கம் உள்ள பிள்ளைகளைத் திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது, மற்றவர்களோடு ஒப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டுமே தவிர, மனம் திருந்த உதவாது. வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்படும் பிள்ளைகள்தான் எளிதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதோடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளில் ஈடுபடவும் துணிகின்றனர்.
  • ஆகவே, பிள்ளைகளைப் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதும், வீட்டில் அவர்களைக் கண்காணிக்க வேண்டியதும் மிக அவசியம். அவர்கள் ஆர்வம் காட்டும் திறமைகளை வளர்த்தால் போதைமனம் திசை மாறும்.
  • அவர்களைப் போதைக் குழிக்குள் தள்ளிய சூத்திரதாரியைக் களைந்தால் திருந்தும் வாய்ப்பு கைகூடும். கடைசி இரண்டு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாலமாக இருந்து உதவ வேண்டியது முக்கியம். சிறாரிடம் போதைப் பழக்கம் இருப்பது தெரிந்தால், உடனடியாக மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டியது மிக முக்கியம்.

அரசு என்ன செய்யலாம்?

  • மாநிலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்றவற்றைக் கண்டறிந்தாலும், பெரும்பாலான மேல்நடவடிக்கைகள் கண்துடைப்பாகத்தான் இருக்கின்றன. சமூகத்தின் இந்தப் பொதுவான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய கடமை காவல் துறையினருக்கு இருக்கிறது. அவர்கள் சமூகப் பொறுப்புடன் சரியான நடவடிக்கைகளைக் காலத்தோடு மேற்கொண்டால், நம் இளைய தலைமுறையை நிச்சயம் காப்பாற்றலாம்.
  • சிறாரின் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போதைத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பை மாவட்ட அளவில் உடனடியாக அமல்படுத்துவதும், அங்கு போதிய மனநல மருத்துவர்களை நியமிப்பதும் அவசரமான அவசியம். உயர்நிலைப் பள்ளிகளில் வருகைதரு மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதைக் கட்டாயமாக்கினால், மாணவர்கள் போதையின் பிடியில் சிக்குவதை ஆரம்பத்திலேயே தடுக்கலாம். அரசு பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசித்து, மாநிலத்தில் மது விற்பனைக்கு மூடுவிழா நடத்த முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால், பல்லாயிரக்கணக்கான சிறாரின் எதிர்காலம் சிதைந்துவிடும்.

நன்றி: தி இந்து (13 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்