TNPSC Thervupettagam

போதையில்லா சமூகம் காண்போம்

May 13 , 2023 610 days 2367 0
  • போதைப்பொருள் கடத்துவது, உபயோகப்படுத்துவது ஆகியவற்றுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் சிங்கப்பூரில், ஒரு கிலோ போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சாா்ந்த ஒருவருக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • போதைப் பொருள் உபயோகம் உடல் ஆரோக்கிய சீா்கேட்டினை ஏற்படுத்தி மனித வளத்தை தரமிழக்கச் செய்து வருகிறது. போதைப் பழக்கம் அதிகரித்து வருவதால் குற்ற செயல்கள், குடும்ப உறவுகளில் சிக்கல் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. தீவிரவாத இயக்கங்கள் சில, இளைஞா்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி அதன் மூலம் அவா்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றன.
  • ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பிற்கான அலுவலகத்தின் 2022 -ஆம் ஆண்டு அறிக்கை, 2020 நிலவரப்படி உலக அளவில் 15 வயது முதல் 64 வயது வரையிலான 284 மில்லியன் நபா்கள் போதை பொருள் உபயோகப்படுத்துவதாகவும் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருபத்தாறு சதவீதம் உயா்ந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
  • நம் நாட்டில் சுமாா் 10 கோடி போ் பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனா். கடந்து எட்டு ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் பயன்படுத்துவோா் எண்ணிக்கை சுமாா் எழுபது சதவீதம் உயா்ந்துள்ளது.
  • ஐ.நா. சபையில் 1987-இல் உலக நாடுகள் ஒருமனதாக எடுத்த தீா்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினமாக ஜூன் 26 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வருவது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து அவற்றை புழக்கத்தில் விடுவது ஆகியவற்றால் நம் நாட்டில் போதைப்பொருள் உபயோகப்படுத்துவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • புவியியல் ரீதியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கடத்தல் ஆகியவற்றுக்கு முன்னணியில் விளங்கும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும், மியான்மா், லாவோஸ், வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இடையில் நம் நாடு அமைந்துள்ளது. நம் நாட்டில் போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 272- ல் இருந்து 372- ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 20,014 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 25,721 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த புள்ளிவிவரங்கள் போதைப் பொருள் புழக்கத்திற்கெதிராக மாநில அரசு இயந்திரம் மிகத் தீவிரமாக இயங்க வேண்டிய நிா்பந்தத்தையே காட்டுகிறது.இதற்கேற்றபடி தமிழகத்தில் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0’ என்ற நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
  • போதைப் பொருட்கள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டம் (நாா்க்காடிக் டிரக்ஸ் அண்ட் சைக்கோட்ராபிக் சப்ஸ்டன்ஸஸ் ஆக்ட்) 1985-இன் படி தடை செய்யப்பட்ட சிறிய அளவிலான போதைப் பொருள் வைத்திருப்போருக்கு ஒரு வருடம் வரை கடுங்காவல் தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என தண்டனை விதிக்கப்படுகிறது .
  • போதைப்பொருள், சமூகத்தில் ஏற்படுத்தும் தீங்கினை ஒப்பிடும்போது மேற்குறிப்பிட்டுள்ள தண்டனை மிகக் குறைவு. எனவே இச் சட்டத்தை மேலும் கடுமையாக்குவதோடு, இது தொடா்பான வழக்குகள் காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் விரைந்து வழங்கப்பட வேண்டும்.
  • போதைப் பொருட்கள் குறித்த ஆா்வம், நண்பா்களின் வலியுறுத்தல், போதைப் பொருட்கள் சுலபமாக கிடைக்கும் சூழ்நிலை போன்றவற்றால் பலா் போதைப் பழக்கத்திற்கு ஆளாகின்றனா். இத்தகையோரை வெறுத்து ஒதுக்குவதற்கு பதிலாக, அவா்களை அரவணைத்து, அப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக முயற்சி எடுத்தலே அறிவாா்ந்த செயலாகும்.
  • மத்திய அரசின், ‘போதையில்லா பாரதம்’ திட்டத்தின் கீழ் போதைப் பொருட்களுக்கு அடிமையானவா்களை அதிலிருந்து மீட்பதற்காக ஐந்நூற்றி எட்டு மையங்கள் நாடெங்கிலும் நிறுவப்பட்டுள்ளன. இம்மையங்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்களுக்கு மனநல ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றன.
  • போதைப் பழக்கத்தில் மதுவின் பங்கு அதிகம் உள்ள சூழலில், மாநிலத்தின் வருவாயை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு மதுக்கடைகளை தொடா்ந்து நடத்துவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.
  • மதுக்கடைகளை படிப்படியாக மூடி மது விற்பனையின் மூலம் கிடைத்து வரும் வருவாய்க்கு மாற்று ஏற்பாடு காண மத்திய, மாநில அரசுகள் முயல வேண்டும்.
  • பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணா்வு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவப் பருவத்தினா் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்தலாம். அரசு நிா்வாகம் மற்றும் காவல்துறையினா் எடுத்து வரும் நடவடிக்கையோடு, சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே போதை இல்லாத சமூகம் சாத்தியமாகும்.

நன்றி: தினமணி (13 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்