TNPSC Thervupettagam

போபால்களுக்கு முடிவே கிடையாதா?

May 13 , 2020 1708 days 777 0
  • ஒரு தலைமுறைக் காலகட்டத்தைக் கடந்துவிட்டாலும், இந்தியாவில் தொழிலகப் பாதுகாப்புச் சூழல் கொஞ்சமும் மேம்படவில்லை; சுற்றுச்சூழல் – மனித உயிர்கள் மீதான அக்கறை, சட்டப் புத்தகங்களைத் தாண்டி இன்னமும் நம் கலாச்சாரத்தில் ஊடுருவவில்லை என்பதையே விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு வெளிப்படுத்துகிறது.
  • விசாகப்பட்டினத்தின் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் மே 7 அன்று ஏற்பட்ட ஸ்டைரீன் விஷ வாயுக் கசிவு 1984-ல் போபாலில் நடந்த கசிவைப் போலவே நடந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
  • போபால் கசிவு 2,200-க்கும் மேற்பட்டோரின் உயிரை உடனடியாகக் குடித்தது; 16,000 பேர் அடுத்தடுத்த வாரங்களில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்கள்; பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தரை லட்சத்துக்கும் மேல்.
  • கடந்த காலங்களில் நாம் சந்தித்த அந்த மிகப் பெரும் விபத்திலிருந்து எந்தப் பாடத்தையுமே கற்றுக்கொள்ளவில்லை. போபாலில் மூடியிருந்த தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியபோது, அங்கு கலன்களில் அடைக்கப்பட்டிருந்த ‘மீத்தைல் ஐசோசயனேட்’ என்னும் மோசமான விஷ வாயு காற்றில் பரவியதாகச் சொல்லப்பட்டது.

விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு

  • இப்போது விசாகப்பட்டினத்திலும் அதே போன்ற வேறு ஒரு காரணம்தான் சொல்லப்படுகிறது. இரண்டு சம்பவங்களிலுமே தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினருடன் தொழிற்சாலையைச் சுற்றியே வசித்திருக்கிறார்கள்.
  • விசாகப்பட்டினம் தொழிற்சாலையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள், கலன்களில் சேகரித்து வைக்கப்பட்ட விஷ வாயு இரவு 2.30-க்குத் தொடங்கி காலை 6.30 மணி வரையில் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
  • போபாலில் நடந்ததுபோலவே விசாகப்பட்டினத்திலும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. விஷ வாயுக் கசிவின் காரணமாக 11 பேர் இறந்திருக்கிறார்கள். ஏராளமான கால்நடைகளும் இறந்திருக்கின்றன.
  • ஆலையைச் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கம்போல இழப்பீடுகளைக் கொடுத்து விஷயத்தை முடித்துவிடுவதற்கான சமிக்ஞைகளே தென்படுகின்றன.
  • விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம். ஆண்டுக்கு 27,000 பேர் தொழிற்சாலை விபத்துகளில் இறக்கிறார்கள் அல்லது காயமடைகிறார்கள். ஆனால், அரசு இதை ஒரு பெரிய விஷயமாகப் பார்க்காததால், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்துக்கு வெளியே ஆலை நிர்வாகத்துடன் பேசி, இழப்பீட்டைப் பெறுவதே தீர்வாக இருக்கிறது.
  • ஆலையின் பொறுப்பு, அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு, நீதித் துறையின் நடவடிக்கைகள் என்று யாவும் தம் கடமைகளிலிருந்து வெளியேறிவிடுகின்றன.
  • ஆக, லாபத்துக்காக உயிர்களைப் பலியிடும் கலாச்சாரம் தொடர்கிறது. ஒரு குடியரசு நாட்டில் இவ்வளவு பொறுப்புக்கெட்டதனம் கொடூரம். இது இனியும் தொடர்வது ஜனநாயகத்துக்கு இழுக்கு!

நன்றி தி இந்து (13-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்