- உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், சாமானிய இந்தியர்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப் படுவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுவரை இரண்டு இந்தியர்கள் போர்முனையில் பலியாகியிருக்கிறார்கள்.
- இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்கள் இதை உறுதிசெய்கின்றன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் சூழ்ச்சிவலையில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும் என்னும் குரல்கள் வலுவடைந்திருக்கின்றன.
- கல்வி, பணிவாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக ரஷ்யாவுக்குச் சென்ற இந்தியர்கள், தந்திரமான முறையில் அந்நாட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு, போர்முனைக்கு அனுப்பப்படுவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
- போர்முனை தவிர்த்த பிற வேலைகளே அவர்களுக்கு வழங்கப்படும் என அங்கு அவர்களை அனுப்பிய பயண ஏற்பாட்டு முகவர்கள் தவறாக வழிநடத்தியிருக்கின்றனர். இந்தியா, ரஷ்யா என இரண்டு நாடுகளிலும் இப்படியான முகவர்கள் செயல்படுகின்றனர்.
- இதையடுத்து டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. போர்முனையிலிருந்து இந்தியர்கள் சிலர் வெளியிட்ட காணொளிகளும் பிரச்சினையின் வீரியத்தை உணர்த்தின.
- ஆவணங்கள் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், கட்டாயப்படுத்தித் தங்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே, சூரத் நகரைச் சேர்ந்த ஹேமல் அஷ்வின்பாய், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஃப்சன் ஆகியோர் போர்முனையில் கொல்லப்பட்டது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
- அவர்களின் சடலங்களைக் கொண்டுவருவதிலும் தாமதம் நீடிக்கிறது. அரசு மேற்கொண்ட பணிகளில் ஏற்பட்ட தாமதமே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது. உண்மையில், தனது தொகுதியைச் சேர்ந்த சிலர் இப்படி ரஷ்யாவின் சூழ்ச்சிவலையில் சிக்கி, உக்ரைன் போர்முனையில் தவித்துவருவதாக ஹைதராபாத் எம்.பி. அசதுதீன் ஒவைசி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்துக்குப் பின்னர்தான் அரசு இப்பிரச்சினையில் தீவிரமாகத் தலையிட்டிருக்கிறது..
- தவிர, எத்தனை இந்தியர்கள் போர்முனையில் சிக்கியிருக்கிறார்கள் என்கிற துல்லியமான தகவலை வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆரம்பத்தில் வெளியிடவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. முகவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பின்னர்தான் குறைந்தபட்சம் 35 இந்தியர்கள் போர்முனையில் தவித்துவருவதாகத் தெரியவந்தது.
- இந்த எண்ணிக்கையும் முழுமையானதல்ல என்றும், 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காசா போர் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் ராணுவத்திலும் இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இவ்வளவுக்கும் இரண்டு நாடுகளுடனும் ஆழமான நட்புறவைக் கொண்டிருக்கிறது இந்தியா. உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷ்யாவை இந்தியா இதுவரை வெளிப்படை யாகக் கண்டிக்கவில்லை. மாறாக, இந்தப் போரைப் பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து சலுகை விலைக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் ஈடுபட்டு, மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கும் இந்தியா உள்ளானது.
- காசா மீதான போரிலும் காசா மக்கள் மீது மனிதாபிமான அக்கறையை வெளிப்படுத்தினாலும் இஸ்ரேலை இதுவரை வெளிப்படையாக இந்தியா கண்டிக்கவில்லை. இத்தகைய சூழலில், இவ்விரு நாடுகள் தொடுத்திருக்கும் போர்களில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி. அரசு இந்தக் கேள்விகளுக்கு முகங்கொடுப்பதுடன், வேறொரு நாட்டுக்காக இந்தியர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்கக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2024)