- இளம்பிள்ளைவாதத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கவலைப்படும்படியான வகையில், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இளம்பிள்ளைவாத நோய் தொடர்பாக ஆய்வுசெய்த நெருக்கடி காலக் குழுவின் பரிந்துரையை அடுத்து இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
போலியோ வைரஸ்
- ‘டைப்-1’ என்றழைக்கப்படும் போலியோ வைரஸ் பற்றியது இந்த எச்சரிக்கை. 2018-ல் 28 பேருக்குத்தான் போலியோ அறிகுறி தென்பட்டது, ஆனால், 2019-ல் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தானில் மட்டும் 128 பேரிடம் போலியோ வைரஸ் டைப்-1 கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கு இருப்பது தெரிந்தது. பாகிஸ்தானிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தானுக்கு இந்த வைரஸ் கடத்தப்பட்டிருப்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சுற்றுப்புறங்களிலும் இந்த வைரஸ்கள் பரவியுள்ளன.
- ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுச் சூழ்நிலையால் போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. எனவே, இந்த வைரஸ் பரவும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கிறது.
மற்ற நாடுகளில்...
- 2018-ல் தலிபான்களின் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் வசித்த 8,60,000 குழந்தைகள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாமல் போனது. 2019-லும் நிலைமை மேம்பட்டுவிடவில்லை. ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு இந்நோய் பரவும் அபாயம் அதிகம். அதேசமயம், நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் இந்நோய்க்கான அறிகுறிகள் வரத் தொடங்கிவிட்டன.
- இதைவிடக் கவலையளிக்கும் இன்னொரு தகவலும் உலக சுகாதார நிறுவனத்தை எட்டியிருக்கிறது. 16 நாடுகளில் தடுப்பூசி போட்ட பிறகும் போலியோ நோய் பரவியிருக்கிறது. ஊசிக்குப் பிறகு போலியோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2019-ல் 249 ஆக இருந்தது. ஊசி போட்ட நாடுகளில் போலியோ பரவியவர்கள் எண்ணிக்கை 30. இப்படி போலியோ டைப்-2 வைரஸ் பரவியிருப்பது கவலை அளிப்பதுடன், இது ஏன் என்றும் புரியவில்லை. தடுப்பூசிக்குப் பிறகு போலியா ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தானில் எந்தப் பதிவுகளும் இல்லை.
விழிப்புணர்வு
- ஆனால், பாகிஸ்தானில் இந்த எண்ணிக்கை 12 ஆக இருக்கிறது. அங்கோலாவில் 86, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 63, நைஜீரியாவில் 18 ஆக உள்ளது.
- நைஜீரியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் போலியோ வைரஸ் இல்லாமலிருந்தது. நைஜீரியா மட்டும் போலியோ இல்லாத நாடாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தால், ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமே போலியோவிலிருந்து விடுதலைபெற்ற கண்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
- தடுப்பூசிகளின் நன்மை அறியாமல், மத நம்பிக்கைகளாலோ, பொய்ப் பிரச்சாரங்களாலோ அவற்றைத் தடுப்பது நிச்சயம் பாதிப்பையே ஏற்படுத்தும். சர்வதேச அளவில் விடப்பட்டுள்ள அபாய எச்சரிக்கைகள் இந்தியாவுக்கும் பொருந்தும். போலியோ பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் வழக்கம்போலத் தொடர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15-01-2020)