TNPSC Thervupettagam

போஷண் அபியான் திட்டம்

January 18 , 2020 1822 days 821 0
  • ஊட்டச்சத்து குறைவு இல்லாத இந்தியாவை 2022-க்குள் உருவாக்குவது என்கிற உயரிய இலக்குடன் 2018-இல் தேசிய ஊட்டச்சத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. "போஷண் அபியான்' என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம், இந்தியாவில் வளர்ச்சி குறைவான குழந்தைகள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது. அங்கன்வாடி மையங்களின் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி, கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவை உறுதிப்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

போஷண் அபியான் திட்டம்

  • "போஷண் அபியான்' திட்டம் எதிர்பார்த்த அளவிலான பயனை அளிக்காமல் இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மாறாக, இந்தத் திட்டம் முறையாகவும், முனைப்புடனும் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் பயனளிக்காமல் போயிருக்கிறது என்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. 
  • உலக பசிக் குறியீடு (குளோபல் ஹங்கர் இன்டக்ஸ்), கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் கடுமையான அளவிலான பசிக் கொடுமை காணப்படும் 47 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகிலேயே மிக அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு காணப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவை "வீணாகும் விகிதம்' (வேஸ்டிங் ரேட்) என்று குறிப்பிடுவார்கள். அதில் இந்தியா 20.8% வீணாகும் விகிதத்துடன் முன்னிலை வகிக்கிறது.
  • ஊட்டச்சத்து குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. வறுமை, போதுமான அளவிலான உணவு இல்லாமல் இருப்பது, மரபணு ரீதியிலான குறைபாடு, சுற்றுச்சூழல் காரணிகள், குன்றிய உடல் நலம் உள்ளிட்ட பல காரணிகளைக் குறிப்பிடலாம்.

ஊட்டச்சத்துள்ள உணவு

  • ஊட்டச்சத்துள்ள உணவை கர்ப்பிணிகளுக்கும், பேறுகாலத் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் உறுதிப்படுத்துவதில் அரசியல் தலைமையின் முனைப்பும் முறையான கொள்கை நடைமுறைப்படுத்தலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் "போஷண் அபியான்' எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் இருப்பதற்கு, நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக் காட்டாததுதான் முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது. 
    சாதாரணமாக அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள்  மிகைப்படுத்தப்பட்டவையாகத்தான் இருக்கும்.
  • ஆனால், தேசிய ஊட்டச்சத்து திட்டத்தைப் பொருத்தவரை மிகைப்படுத்தப்படல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதனால், நிர்ணயித்த இலக்கை இந்தத் திட்டம் அடையவில்லை என்பது வெளிப்படுகிறது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்த புள்ளிவிவரங்களை  மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்டார். அப்போதுதான் எந்த அளவுக்கு இந்தத் திட்டம் முனைப்புடன்  செயல்படுத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. 
  • 2019 அக்டோபர் 31-ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்திற்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.4,283 கோடியில், ரூ.1,283.89 கோடிதான் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, வழங்கப்பட்ட தொகையில் 30% மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.9,046 கோடி. அதில் 50% உலக வங்கியும், ஏனைய நிறுவனங்களும் வழங்குகின்றன.

தேசிய ஊட்டச்சத்து திட்ட நிதி

  • மீதமுள்ள 50% மத்திய - மாநில அரசுகள் சரிசமமாகப் பங்கிட்டு வழங்குகின்றன.
    தேசிய ஊட்டச்சத்து திட்ட நிதியை மிக அதிகமாகப் பயன்படுத்தி இருக்கும் மாநிலம் மிúஸாரம். அந்த மாநிலம் பயன்படுத்தியிருப்பது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகையில் 63%. மிகக் குறைவாகப் பயன்படுத்தியிருக்கும் மாநிலம் பஞ்சாப் (0.85%). பெரும்பாலான மாநிலங்கள் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியைச் சரியாகப் பயன்படுத்தவே இல்லை. இதற்கு அரசுத் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், முனைப்பின்மையும்தான் காரணமாக இருக்க முடியும். வறுமையும், இது குறித்த புரிதலும் மக்கள் மத்தியில் இல்லாமல் இருப்பதும் காரணங்கள்.
  • தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் அடிப்படை நோக்கம், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சிக் குறைவு இல்லாமல் இருப்பதைக் குறைப்பது. இப்போதைய நிலையில், இந்த வயதுப் பிரிவினரில் 38.4% குழந்தைகள் வளர்ச்சி குறைந்தவர்களாக இருக்கிறார்கள். 2022-க்குள் இந்த நிலைமையை மாற்றி 25% அளவிலாவது வளர்ச்சிக் குறைவை குறைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. 

பல்வேறு பிரச்சினைகள்

  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு, ரத்த சோகை, எடை குறைவு உள்ளிட்ட பிரச்னைகளை ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் கண்டறிந்து அகற்றுவது மிக மிக அவசியம். இவையெல்லாம்  போதுமான ஊட்டச்சத்து இன்மையால் உருவாகும் பிரச்னைகள். இந்த வயதுப் பிரிவினர் மத்தியில் காணப்படும் மரணங்களில், 68% உயிரிழப்புகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவுதான் அடிப்படைக் காரணம்.
  • இந்தப் பிரச்னையை நீதி ஆயோக் ஓராண்டுக்கு முன்பு எழுப்பியது. நிதி ஒதுக்கீட்டில் 16% தான் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, மாநிலங்கள் எச்சரிக்கப்பட்டன. முனைப்புடன் தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டன. 
    சாதாரணமாக, பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அரசு தவிப்பதுதான் வழக்கம்.
  • வருங்கால இந்தியாவை உருவாக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொண்டு அகற்ற, நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டும்கூட அதைப் பயன்படுத்தாமல் மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவது மன்னிக்க முடியாத குற்றம்.

நன்றி: தினமணி (18-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்