- பல்லவ அரசன் மகேந்திரவர்ம பல்லவன் 1300 வருடப் பழமையான ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதியுள்ளார். மத்த விலாசப் பிரகசனம் என்றால் ‘கள் குடியன் நாடகம்’ எனப் பொருள்படும் ஒரே ஒரு அங்கம். நான்கே நான்கு காட்சிகளைக் கொண்டது இந்த நாடகம். முதல் காட்சியில் காஞ்சி நகர் வீதியில் சிவ நெறியின் பிரிவுகளில் ஒன்றான காபாலி மதத்தைச் சேர்ந்த சத்திய சோமனன் என்னும் ஒருவன் கள்ளுண்டு போதையில் மயங்கியவனாகத் தன் காதலியோடு களித்துச் சொல்லாடிக் கொண்டுவருகிறான். போதையில் வாய் உளறி, காதலியின் பெயரை மாற்றிச் சொன்னதனால் இருவருக்கும் நடுவே சண்டை சச்சரவு வருகிறது. ‘‘இதற்குக் காரணம் இந்தக் குடிப்பழக்கம்தானே, நான் இதை இன்றோடு விட்டுவிடப் போகிறேன்” என்கிறான் காபாலி. அவளோ “இந்தத் தூய்மையான சமய ஒழுக்கத்தைக் கைவிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டு அவனைத் தொழுது காலில் விழுகிறாள். அவன் அவளை எடுத்து அணைத்து “சிவ சிவா, அரஹரா அரஹரா” என்று முணுமுணுத்துக்கொண்டே, “அருமைக் காதலியே! நீ நன்றாய், அழகாக உடுத்திக்கொள்; நன்றாகக் குடி. உன் மான் விழியால் என்னைப் பார்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இதுதான் “இறைவனை அடைவதற்கான முத்தி நெறி” என்று தன் சமயநெறியின் கோட்பாட்டையும் கூறுகிறான்.
- அதற்கு அவள் “சமணர்கள் முக்தி அடைவதற்கு வேறு வழி அல்லவா சொல்கிறார்கள்” என்கிறாள். அதற்குப் பதிலாக அந்த மதத்தைக் கிண்டல் செய்கிறான் அவன். இந்த முதல் காட்சியிலேயே பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் மதங்களுக்கிடையே நிலவிய வெறுப்பினைக் காட்சிப்படுத்திவிடுகிறார் நாடக ஆசிரியர். சிவ மதத்தைச் சார்ந்த காபாலி மூலம் சமண சமயத்தின் புற ஒழுக்கம் கேலி செய்யப்படுவதோடு காபாலியின் புற ஒழுக்கமும் கேலி செய்யப்படுகிறது. கபாலம் காணாமல் போனவுடன் “ஐயோ! எனக்குக் கேடு வந்துவிட்டதே! என்னுடைய தவமே ஒழிந்ததே! இனி நான் எப்படி ஒரு காபாலியாக முடியும்? ஓ! என்ன துன்பம்!” இப்படிச் சமயம் என்பது அதன் புறக்குறியீடுகளை, சடங்குகளைக் கடைப்பிடிப்பதிலா இருக்கிறது? அதன் தத்துவக் கருத்தாடல் அல்லவா முக்கியம் என்று நாடக ஆசிரியர் இந்தக் காட்சிகள் மூலம் கேள்வி கேட்கிறார்.
மூலப் பிரதி என்னும் கற்பிதம்
- மண்டை ஓட்டைத் தேடிக் காஞ்சிபுரத்தின் தெருவில் செல்லும்போது, “யார் எடுத்து இருப்பார்?” எனக் கேட்கும்போது அதற்கான பதிலில் பௌத்த மதம் விமர்சிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பௌத்தத் துறவி தனக்குள் பேசுவதாக ஒரு காட்சி: “அருட் கடலாகிய நம்முடைய தலைவரான புத்த பகவான் நமக்குச் சில கட்டளைகளை ஏற்படுத்திவிட்டார். அழகான கட்டிடங்களில் தங்கவும், உயர்ந்த படுக்கைகளில் படுத்து உறங்கவும், பகலில் உண்ணவும், மாலையில் இனிய பானங்களை அருந்தவும், ஐந்து வகை மணத்தோடுகூடிய வெற்றிலை போடவும், மென்மையான ஆடைகளை உடுத்தவும் அனுமதி தந்திருக்கிறார். இவற்றை எல்லாம் செய்தவர் பெண்ணையும் மதுவையும் ஏனோ விலக்கி விட்டார்” என எண்ணி, இந்தத் தடையெல்லாம் பின்னால் உருவானதாக இருக்க வேண்டும். அதனால் மூலப் பிரதியைத் தேட வேண்டும் என நினைத்துக்கொள்கிறார்.
- இந்தத் தனிமொழியின் மூலமாகப் பெருவாரியாக இருக்கும் போலி மதவாதிகளைக் கூர்மையான விமர்சனத்திற்கு உட்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாறாத விதிகள் என்றும் மூலப்பிரதிகள் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் கட்டிவிடப்பட்ட புனைவுகளே என்பதையும் சொல்லிவிடுகிறார் நாடக ஆசிரியர். அறிவியலில் சொல்லப்படுவதுபோல, “நிரந்தரமானது என்று ஒன்றும் இல்லை; எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன” என்பதற்கு ஏற்ப எல்லாப் பிரதிகளும் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி எழுதப்பட்ட பிரதிகள்தான். மூலப் பிரதி என்பதே ஒரு மாயைதான் என்கிற ஒரு கருத்தாக்கத்தைப் பல்லவ மன்னவன் அன்றே கொண்டிருந்தான் என்று அறிவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
அமைப்புகள் மீதான விமர்சனம்
- தெருவில் திருவோட்டுக்கான சண்டை முற்றிச் சத்தம் போடும்போது சிவ வழிபாட்டின் மற்றொரு பிரிவான பாசுபத மதத்தினன் அங்கே வருகிறான். அவனும் ஒரு போலி மதவாதிதான். இந்தக் காபாலியுடனும் அந்தப் பெண்ணுடனும் தனக்கு இருந்த முன்பகை காரணமாகத் தன்னிடம் வந்த இந்தத் திருவோட்டு வழக்கு மூலமாகப் பழிதீர்த்துக் கொள்ள அவன் முயலுகிறான். ஆனால், காபாலியின் அபாரமான வாக்குவாதத்தின் முன்னால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது போகிறது. நீதிபதியிடம்தான் நீங்கள் போய் முறையிட வேண்டும் என்கிறான். அப்பொழுது காபாலியின் காதலியாக அறியப்படும் அந்தப் பெண் கூறுவது, இன்றைய வாசகர்களாகிய நம்மையும் வியப்பில் ஆழ்த்திவிடுகிறது: “இவர்கள் மடத்துக்குப் பல சிறு மடங்களில் இருந்து அளவில்லாத பொன் வருவாய் வருகிறது. அதனால் இவர்கள் மடத்தில் பொன் பெருவாரியாய்க் கிடக்கிறது. அதைக் கொண்டு நீதியாளர் வாயை இவர்கள் அடைத்துவிடுவார்கள். நானோ ஓர் ஏழைக் காபாலினுடைய பெண்டாட்டி; எங்கள் சொத்து இந்தப் பாம்புத் தோலும் திருநீறும்தான்; நீதிமன்றத்துக்குப் போவதற்கு எங்களிடம் அவ்வளவு பொன் கிடையாதே, சாமி” என்கிறார்.
- இந்தக் கூற்றின் மூலம் இந்த மதங்கள், கடவுளின் பெயரால் பெரும் பணக்கார நிறுவனமாகி விட்டன என்கிற விமர்சனத்தையும் முன்வைக்கிறது பிரதி. கூடவே சமூகத்தில் பணம்படைத்தவர் X பணம் இல்லாதவர் என்ற பிளவு ஏற்பட்ட பிறகு, நீதிமன்றமும் நீதியும் பணம் இருப்பவர்களுக்கான ஒன்றாகத்தானே ஆகிவிடும் என்ற நடப்பியலையும் சொல்லிவிடுகிறது நாடகப் பிரதி.
மன்னிப்புக் கோரும் காட்சி
- இறுதிக் காட்சியில் குப்பை மேடே ஓடி வருவதுபோல ஒரு பைத்தியம் சம்பந்தமில்லாமல் உளறிக்கொட்டிக்கொண்டு ஓடிவருகிறான். அவன் கையில் ஒரு திருவோடு இருக்கிறது. அது காபாலியின் மண்டை ஓட்டுப் பாத்திரம் என்பது உறுதியாகிறது. மூவரும் சேர்ந்து பைத்தியத்தை ஏமாற்றி மண்டை ஓட்டைக் கைப்பற்றுகின்றனர். காபாலிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. கபாலத்தை மார்போடு தழுவிக்கொள்கிறான்; அது, அவன் காதலிக்கு அந்தி வானத்தில் சந்திரன் புறப்பட்டு வருவதுபோல் இருந்ததாம். பௌத்தத் துறவியை “இப்படி வாரும்” எனக் கூப்பிட்டு பிழை செய்திருந்தால் மன்னிக்க வேண்டும் என்கிறான். பிறகு காதலியோடு போகிற காட்சியோடு நாடகம் முடிகிறது.
- இந்தப் படைப்பின் நோக்கு, தொனி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது எல்லாச் சமயங்களிலும் பெருவாரியாகப் பெருகிக் கிடக்கும் போலிச் சமயவாதிகளைக் கேலி செய்து புறம் தள்ளிவிட்டுச் சமயத்துக்குள் வினை புரியும் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் முயற்சியாகவே இந்தப் பிரதி இயங்குகிறது என்று எனக்குப் படுகிறது. மகேந்திரவர்மன் திருவள்ளுவர்போல் இளங்கோபோல் மதச்சார்பற்றவனாகவே இப்பிரதி மூலம் வெளிப்படுகிறான்.
- இப்படியான ஒரு நாடகப் பிரதி, வாசகனாகிய எனக்குள் ஏற்படுத்திய அழகியல் தாக்கம் மிகப் பெரியது. அதாவது, இதுவரை மகேந்திர பல்லவ மன்னன் குறித்து நம் மனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் அவ்வளவு புனைவுகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி மேதமைமிக்க, அந்த உண்மையான மகேந்திரவர்மன் என்கிற கலைஞனைக் கண்டெடுக்க வேண்டும் என்று எண்ண வைத்துவிட்டது. மதமும் அதன் நடைமுறை சடங்கு சாத்திரங்களும், கடைப்பிடிக்கும் ஆச்சாரங் களும் எப்படி மகத்தான இந்த மனிதர்களைச் சிரிக்கத்தக்க ஒரு சாதாரண வஸ்துவாக மாற்றிப் போட்டுவிடுகின்றன என்பதுதான் இந்த நகைச்சுவை நாடகத்தின் செய்தியாக எனக்குப் படுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 11 – 2023)