TNPSC Thervupettagam

மகளிர் இடஒதுக்கீடு விரைவில் அமலாக்கப்பட வேண்டும்

September 25 , 2023 472 days 312 0
  • நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் மசோதா,நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டிருப்பது பெண்களின் அரசியல் பங்கேற்பை அதிகரிக்க உதவும் என்று நம்பிக்கை அளிக்கிறது.
  • இந்தியாவைவிடப் பின்தங்கிய நாடுகளில்கூட நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற நிலையில், 15% பெண்களோடு உலக சராசரியைக்கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. பெரும்பாலான மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை 10%-ஐத் தாண்டவில்லை. இப்படியொரு மோசமான சூழலில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியிருப்பது வரவேற்கத்தக்கது.
  • எத்தனையோ முறை மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையிலும் 1996இல்தான் முதல் முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் நடுவே முடங்கிப்போனது. 2010இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பலனளிக்கவில்லை.
  • கிட்டத்தட்ட 27 ஆண்டு காலத் தாமதத்துக்குப் பிறகு தற்போது இரண்டு அவைகளும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் கட்சிகளுக்குப் பெண்கள் நலன் மீது இருக்கும் அக்கறையைக் காட்டுவதுபோல் இருந்தாலும்,மறுபக்கம் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பான அரசியல் நாடகம்என்று எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்துள்ளன. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கும் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் கால அவகாசமே இப்படியொரு விமர்சனம் எழக் காரணம்.
  • மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு, தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு அதன் பிறகே இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்படும். மசோதா சட்டமாக்கப்பட 50% மாநிலச் சட்டமன்றங்களின் ஆதரவு தேவை. 2021இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறாததால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே அந்தப் பணி தொடங்கும்.
  • தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சியில் அமரும் கட்சி மிக விரைவாகச் செயல்பட்டு 2025இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தினாலும் அதன் முடிவுகள் 2026இல் வெளியிடப்படும். தொகுதி மறுசீரமைப்புக் குழு தன் முடிவுகளைச் சமர்ப்பிக்க குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்போது 2029 நாடாளுமன்றத் தேர்தலில்கூடப் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
  • மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றால், அவை மாநிலங்கள்வாரியாக ஒதுக்கப்படுவதும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும். மக்கள்தொகை அடர்த்தி, பரவல் ஆகியவற்றைக் கொண்டு பெண்களுக்கான தொகுதிகள் வரையறை செய்யப்படுகிறபோது பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் அதுவும் சர்ச்சையாகக்கூடும்.
  • மகளிருக்கான ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண் களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன; அரசு இதை ஏற்கவில்லை. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதாக இருக்கிறபோதுதான் மகளிர் இடஒதுக்கீடு முழுமையடையும். இல்லையென்றால் முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த பெண்களே அந்த வாய்ப்பையும் பெறக்கூடும்.
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு விரைவான, முழுமையான நியாயம் செய்வதாக இருக்க வேண்டும். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு ஒத்திவைக்கும் நடவடிக்கையாக இது சுருங்கிவிடக் கூடாது. அதுதான் இந்தியப் பெண்களுக்கு அரசு செய்கிற உண்மையான ‘வந்தனம்’.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்