TNPSC Thervupettagam

மகளிர் உரிமைத் தொகை தேவைதான்

March 31 , 2023 486 days 872 0
  • மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கான திட்டங்கள் பெரும்பாலும் பெயரளவுக்கே இருந்துவரும் நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருப்பது பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
  • பெண்களுக்காக அரசு இதுவரை அறிவித்திருக்கும் நலத் திட்டங்கள் என்னென்ன, அவற்றின் தேவை என்ன என்பது குறித்து எவ்வித அக்கறையும் புரிதலும் இல்லாதவர்களைக்கூடப் பேசவைத்திருப்பதுதான் இந்த அறிவிப்பின் வெற்றி. பட்ஜெட்டில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி, அதன் போதாமை போன்றவை குறித்த விவாதத்தைப் புறந்தள்ளிவிட்டு, பெண்களுக்கு மாதந்தோறும் ஏன் ஆயிரம் ரூபாயைத் தர வேண்டும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
  • அரசே சொல்லியிருப் பதுபோல இது ‘மகளிர் உரிமைத் தொகை’. வீடு, சமூகம், மாநிலம், நாடு என ஒவ்வொரு அலகும் பிசிறின்றி இயங்குவதற்கு உயவுப் பொருளாகப் பெரும் பங்காற்றி வரும் பெண்களின் இருப்புக்கு இதைவிடப் பன்மடங்கு நிதியை அரசு அளிக்க வேண்டும் என்கிறபோதும், இதைக் குறைந்தபட்ச அங்கீகாரமாகக் கருதலாம். பொருளீட்டுகிற வேலைகளில் ஆண்கள் ஈடுபடுவதால் ஆண்களின் உழைப்பு மேன்மையானது, வருமானமில்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு மலிவானது என்கிற பிற்போக்குச் சிந்தனைதான் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளைக்கூடச் சலுகையாகப் பாவிக்கத் தூண்டுகிறது.
  • சமையல், வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலன், வீட்டு நிர்வாகம் எனக் குடும்பத்துக்குள் பெண்கள் செய்கிற அடுக்கடுக்கான வேலைகளுக்கு நாம் என்ன ஊதியம் தருகிறோம்? இவற்றோடு பிள்ளைப்பேறு, அது தொடர்பான உடல் - மன நலச் சிக்கல்களுக்கும் பெண்கள் ஆளாகிறார்கள். இவ்வளவுக்கும் நடுவில் வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு வீடு - வேலை என இரட்டைச் சுமையாகிவிடுகிறது. இப்படி முதுகொடிய வேலை செய்யும் பெண்களின் வருமானமில்லாத உழைப்பைக் கணக்கில்கொள்ளும் வகையில் அரசு வழங்கும் சிறு தொகைக்குத்தான் நாம் ஆயிரம் கேள்விகளைக் கேட்கிறோம்.

பொருளாதாரச் சுதந்திரம்

  • பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் தேவை எனப் பெண்ணியவாதி கள் காலம்காலமாக வலியுறுத்திவரும் கோரிக்கையின் சிறு முன்னகர்வாகவும் இந்த அறிவிப்பைப் பார்க்கலாம். “மத்திய அரசு சமையல் சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏற்றியிருக்கும் சுமையையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க பெண்களுக்கு இந்தப் பணம் உதவும்” என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • உண்மையில் இந்த உரிமைத் தொகையை வைத்து ஒரு சிலிண்டரைக்கூட வாங்க முடியாது. அப்படியொரு சிறு தொகை பெண்களின் கரங்களை நேரடியாகச் சென்றடைவதில்கூட இங்கே பலருக்கும் விருப்பமில்லை. காரணம், பெண்களின் உழைப்புக்கும் இருப்புக்கும் நாம் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததே இல்லை. உதாரணத்துக்கு, விவசாயப் பணிகளில் பெரும்பான்மையான வேலைகளைப் பெண்கள்தாம் செய்கிறார்கள். இருந்தபோதும் அவர்கள் விவசாயிகள் இல்லை, அவர்களின் உழைப்புக்கு ஆண்களுக்கு நிகரான வருமானமும் இல்லை. இப்படி வீட்டிலும் வெளியிலும் வருமானமின்றி உழைக்கும் பெண்களுக்குச் சேரவேண்டிய தொகை தான் இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’.
  • ஆயிரம் ரூபாயில் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்து விடுவார்களா என்றால் இல்லை. ஆனால், தங்கள் கைகளை நேரடியாக வந்து சேரும் இந்தப் பணம் பெண்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையைத் தரும். தங்கள் சிறு செலவுக்காக யார் கையை யும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிராத நிமிர்வைத் தரும். பெண்களுக்கென்று தமிழக அரசு செயல்படுத்திவரும் ‘கட்டண மில்லாப் பேருந்து’ திட்டம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
  • அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது எதையும் அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே பார்க்கும் பலர் நக்கலும் நையாண்டியுமாகக் கருத்துச் சொன்னார் கள். பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல பத்து ரூபாய்கூட இல்லாத பெண் களுக்குத்தான் தெரியும் ‘கட்டணமில்லாப் பேருந்து’ திட்டத்தின் அவசியமும் தேவையும். இன்று லட்சக்கணக்கான பெண்கள் அந்தத் திட்டத்தில் பயன்பெற்றுவருவதைவிட அவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் தாங்கள் நினைத்த நேரத்தில் பயணப் படுவது சிறு விடுதலைதானே.

தகுதியும் வரையறையும்

  • மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரி வித்துள்ளார். தேர்தல் பரப்புரையின்போது ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும்’ என்று சொல்லப்பட்டாலும் தற்போது ‘தகுதி வாய்ந்த’ குடும்பங்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை என அரசின் ஏதோவொரு உதவித்தொகையைப் பெறுவோர் இந்தத் திட்டத்துக்குள் வருவார்களா என்பது குறித்தும் தெரியவில்லை.
  • வீட்டுப் பணிகள் முழுவதையும் கவனித்துக் கொள்வதன் மூலம் சமூகப் பங்களிப்பு செய்துவரும் பெண்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெறத் தகுதியானவர்கள் என்கிறபோதும், தீர்க்கமான வரையறை தேவை. வருமான வரி செலுத்துகிற அளவுக்குச் சம்பாதிக்கிற பெண்கள் தவிர மற்ற அனைவரையும் இந்தத் திட்டத்தில் இணைத்தால் அது திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும். ஒதுக்கப் பட்ட நிதியைப் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகத்தான் பெரும்பாலான திட்டங்கள் இருக்கின்றன. அப்படியல்லா மல் பயனாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்வதும் அவசியம். அடுத்த நிதியாண்டிலாவது அரசு இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

ஊழலுக்கு வேண்டாமே இடம்

  • திட்டத்தை வகுப்பதைவிட அதைச் செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை. அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் பெருவாரியான மக்கள் நியாயமான முறையில் பயன்பெற முடியாத அளவுக்கான வரையறைகளைக் கொண்டுள்ளன. அரசு விதித்திருக்கும் வரையறைகள்படி பார்த்தால் மிகச் சிலரே சம்பந்தப்பட்ட திட்டங்கள் மூலம் பயனடைவர். இதுபோன்ற சூழலில் லஞ்சமும் ஊழலும் இடைத்தரகர்களுமாக அந்தத் திட்டம் கேலிக்குரியதாகிவிடுகிறது அல்லது தகுதிவாய்ந்த பயனாளர் அதைப் பெற முடியாமல் போகிறது. மக்கள் பணம் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறபோது அரசுத் திட்டங்கள் குறித்த நம்பிக்கையின்மை மக்களிடையே எழுகிறது. இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.
  • மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் பெண்களுக்கான சிறப்புத் திட்டம் என்பதால் அதைச் செயல்படுத்துவதில் அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும். தகுதியை வரையறை செய்வதிலும் தகுதிவாய்ந்தவர்களை அடையாளம் காண்பதிலும் வெளிப்படைத்தன்மையும் பரவலாக்கமும் வேண்டும். பணம் பயனாளியைச் சென்றடைகிற வழியில் எந்தவொரு இடத்திலும் ஊழலுக்கு இடமில்லாத வகையில் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
  • அதற்கான எல்லாக் கட்டமைப்புகளும் அரசிடம் இருப்பதால் தனிப்பட்ட லாபத்துக்கோ அடுத்த தேர்தலைக் கணக்கில்வைத்தோ யாரும் செயல்பட்டுவிடாத கவனமே இந்தத் திட்டத்தின் மீதான மதிப்பை மக்களிடம் ஏற்படுத்தும். பெண்களுக்கு ஆயிரம் ரூபாயைத் தருவதுடன் நின்றுவிடாமல் அவர்களது சமூகப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவது, அனைத்து நிலைகளிலும் அவர்களுக்குச் சம ஊதியத்தை உறுதிப்படுத்துவது, அவர்கள் வெளியூர்களில் பாதுகாப்பாகத் தங்கிப் பணிபுரியும் வகையில் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற வற்றையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்