- இந்திய அரசமைப்புச் சட்ட, நாடாளுமன்ற வரலாற்றில் மூன்று நாள்கள் மிகவும் முக்கியமானவை
1996 செப்டம்பர் 12
- பிரதமர் தேவ கௌடாவின் அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு 81ஆவது திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மக்களவையிலும் மாநிலச் சட்டப்பேரவைகள் அனைத்திலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க அந்த மசோதா வகை செய்தது. ஆனால், மசோதா தாக்கலுக்குப் பிறகு அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
- 2010 மார்ச் 9: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு 108ஆவது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தது. அந்த மசோதா 1996இல் கொண்டுவரப்பட்ட மசோதாவைப் போன்றதே; அது 186:1 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேறியது. அந்த மசோதா மக்களவையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அங்கே நிலுவையில் இருந்தது. 15வது மக்களவை கலைக்கப்பட்ட பிறகு அந்த மசோதாவும் காலாவதியானது.
2023 செப்டம்பர் 18
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு 128வது திருத்தம் கோரும் (மகளிர் இடஒதுக்கீடு) மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தது. மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்று, ஏற்கெனவே தாக்கல் செய்த மசோதாக்களைப் போலவே இதுவும் கோரியது, ஆனால், இதில் மூன்று முன்னெச்சரிக்கை நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி தரும் முன்னெச்சரிக்கை
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலுவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, புதிய சட்டக்கூறு 334ஏ பிரிவின்கீழ் இது அமலுக்கு வந்துவிடும்; எப்போது என்றால், “மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக தொகுதிகள் எண்ணிக்கையை மறுவரையறை செய்து திருத்திய பிறகு, இந்தத் திருத்தத்துக்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகை எண்ணிக்கையை உரிய வகையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, அரசமைப்புச் சட்டத்தின் 128வது பிரிவு அமலுக்கு வரத் தொடங்கி அது தொடர்பான அரசிதழ் அறிக்கைகள் பதிப்பிக்கப்பட்ட பிறகு…”
- மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021லேயே எடுத்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்க முடியாத காரணங்களால் அது தாமதமானது; மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது மிகப் பெரிய, மிக விரிவான நடவடிக்கை என்பதால் அது முழுமையடைந்து மக்கள்தொகைப் பட்டியல் பதிப்பிட இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். அடுத்த மக்கள்தொகைக் கணக்கிடும் நாள் எப்போது என்பதே இப்போது தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது.
- அரசமைப்புச் சட்டக்கூறு 82இன் மூன்றாவது பிரிவின்படி, மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை மாநிலங்களுக்கு இடையில் மறுஒதுக்கீடு செய்யும் செயல் 2026ஆம் ஆண்டு வரைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஒருவருக்கு – ஒரு வாக்குதான்’ என்ற கொள்கை காரணமாக தென் மாநிலங்களும் மேற்கு மாநிலங்களும் தொகுதிகளை இழக்கும், வட மாநிலங்கள் கூடுதல் தொகுதிகளைப் பெறும்.
- சிறந்த கல்வி, சுகாதார வசதிகள், அளவான குடும்பத்தால் ஏற்படக்கூடிய நன்மை குறித்த குடும்ப நலப் பிரச்சாரம் ஆகியவற்றால் மக்கள்தொகை உயர்வைக் கட்டுப்படுத்தியதற்காக – மக்கள்தொகை குறைந்துவிட்டது என்பதையே காரணமாகக் காட்டி – தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்து தண்டிக்கிறார்கள் என்ற அதிருப்தியே தென் மாநிலங்களில் நிலவுகிறது.
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2026இல் வெளியிட்ட பிறகு, தொகுதிகள் மறுவரையறைக்கு விதித்திருந்த தடைகள் விலக்கப்படும் என்றாலும் தொகுதிகள் குறைக்கப்பட்டால், அதனால் இழப்பைச் சந்திக்கும் மாநிலங்கள் அரசியல்ரீதியாக அதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும். தொகுதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்ட பிறகே, தொகுதிகளைப் பிரித்தும் – சேர்த்தும் மேற்கொள்ளும் மறுவரையறை நடவடிக்கைகள் புதிய மறுவரையறைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கை கடைசியாக 2002இல் தொடங்கி ஆறு ஆண்டுகள் நீடித்து 2008 பிப்ரவரி 19இல் முடிந்தது.
- எனவே, வரிசைக்கிரமப்படி இந்த நடவடிக்கை, 2026க்குப் பின் - முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுத்த பிறகு, மக்கள்தொகை தொடர்பாக உரிய தரவுகள் பதிப்பிக்கப்பட்ட பிறகு, மக்களவையில் தொகுதிகள் மறுவரையறை செய்த பிறகு, புதிய தொகுதி வரையறை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அந்த இரண்டின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கை முடிந்த பிறகு, இறுதியாகத்தான் மகளிர் தொகுதி இடஒதுக்கீடு முழுமை பெறும். இதில் ஒவ்வொரு கட்டமும் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இவ்வாறு ‘நிச்சயமற்ற பல நடவடிக்கைகளை நம்பித்தான்’ மகளிர் இடஒதுக்கீடு மசோதா இருக்கிறது. இந்த நடவடிக்கையை முழமையாக எடுத்து முடிக்க 2029ஆம் ஆண்டுக்குப் பிறகுகூட ஆகிவிடும் என்றே அஞ்சுகிறேன்.
பொறுப்பைக் கை மாற்றுதல்
- திட்டமிட்டோ அல்லது தற்செயலாக நடந்துவிட்டதைப் போல பாசாங்கு செய்யவோ, மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வர முடியாதபடிக்கு தடைகளையும் உருவாக்கிவிட்டது மோடி அரசு. இந்தத் தடைகள் அல்லது நிபந்தனைகள் 1996, 2010 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் இல்லை. இந்த அரசு தங்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட நிபந்தனைகளையும் சேர்த்திருக்கிறது என்று பெண்கள் குற்றஞ்சாட்டினால், அதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது.
- இந்த மசோதா தொடர்பாக 2023 செப்டம்பர் 19இல் மூன்று முறை பேசிய பிரதமர், இந்தத் தடைகளைத் தன்னுடைய அரசு எப்படிக் கடக்கப்போகிறது என்று விளக்கவே இல்லை. இந்த முன்நிபந்தனைகள் தொடர்பாக அரசு காக்கும் மௌனம் மிகுந்த அபாய அறிகுறியாகவே இருக்கிறது. அடுத்து வரும் அரசுக்கோ அல்லது அதற்கும் பிறகு ஆட்சிக்கு வரும் அரசுக்கோ இந்தப் பொறுப்பைச் சுமத்தத்தான் மோடி அரசு விரும்புகிறது என்று தெரிகிறது. கூடை நிறைய பழங்களைக் கொடுத்துவிட்டு, நாங்கள் சொல்லும் வரை சாப்பிடக் கூடாது என்று தடுப்பதைப் போலத்தான் இருக்கிறது இந்த மசோதா நிறைவேற்றமும்.
வாக்காளர் பட்டியலே போதும்
- வாழ்க்கையின் பல துறைகளில் மகளிருக்குப் போதிய பிரதிநிதித்துவம் கிடையாது, நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் அவற்றில் அடங்கும். இதற்குக் காரணம் சமூக, பொருளாதார அந்தஸ்துகள்தான். உழைக்கும் வலிமையுள்ள தொழிலாளர்களில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 45.2%தான்; அவர்களில் பெண்கள் எண்ணிக்கை இன்னும் மோசம், 20.6%தான் என்கிறது தொழிலாளர் வேலைவாய்ப்பு குறித்த ஜனவரி-மார்ச் 2023 அறிக்கை. கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதால் அவர்களில் பலருக்கு வேறு வேலைக்குச் செல்வதே இயலாததாகிவிடுகிறது.
- இந்தியாவில் குழந்தைகள் சராசரியாக பள்ளிக்கூடத்தில் செலவிடும் ஆண்டுகள் 7-8 ஆகத்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் விஷயத்தில் இது மேலும் குறைவு. மலரும் பருவத்தில் உள்ள இளம் சிறுமிகளும் பெண்களும் சத்து மிகுந்த உணவு கிடைக்காமல் வறுமை காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் வலிமையிழக்கின்றனர்; 15 வயது முதல் 49 வயது வரையுள்ள பெண்களின் எண்ணிக்கையில் 57% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
- சமூகத்தில் குறைவான அந்தஸ்து, குறைவான வருவாய், குடும்பத்தின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய கடமை ஆகியவை காரணமாக பெண்கள் வீட்டோடு கட்டப்பட்டுவிடுகிறார்கள், எனவே பொது வாழ்க்கைக்கு - அதிலும் அரசியலுக்கு - வருவதற்கு முடியாமல் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தியும் பி.வி.நரசிம்ம ராவும் பெண்களுக்குள்ள தளைகளைக் களையும் வகையில் உள்ளாட்சி மன்றங்களில் 13 லட்சம் இடங்களை மகளிருக்காகவே ஒதுக்கினர்.
- இதை அப்படியே பின்பற்றுவதென்றால் மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை மகளிருக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவை நிறைவேற்றியிருக்க வேண்டும். கடந்த முப்பதாண்டுகளாக மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாகத் தொடர்ந்து பேசப்பட்டு இதன் அமலுக்காக மகளிர் காத்திருக்கிறார்கள், இதை மேலும் தாமதப்படுத்துவது சரியில்லை. இப்போதுள்ள தொகுதிகளில் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டியவை எவை என்று அடையாளம் காண மக்கள்தொகைக் கணக்கெடுப்போ, தொகுதி மறுவரையறையோ எந்த வகையிலும் அவசியமே இல்லை.
வழக்கமான பெயர் நீக்கல்
- சேர்த்தலுக்குப் பிறகு கிடைக்கும் வாக்காளர் பட்டியலே போதுமானது, இதுதான் எல்லா மாநிலங்களிலும் பஞ்சாயத்து மற்றும் நகரமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டக்கூறு 344ஏ என்பது திசை திருப்பவும், மகளிர் இடஒதுக்கீட்டைத் தாமதப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட மறைமுகமான முயற்சியே, இதைக் களைய வேண்டும்.
- இந்தி மொழியில் ஜூம்லா என்றால், தேர்தலுக்காக செய்யப்படும் வெற்று அறிவிப்பு அல்லது நடிப்பு அல்லது ஏமாற்று முயற்சி என்று பொருள்படும். மக்களவைக்கு 2014, 2019 பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவும் பாரதிய ஜனதா பல ஜூம்லாக்களை வெளியிட்டது. இப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் அந்தப் பட்டியலில் சேருகிறது!
நன்றி: அருஞ்சொல் (25 – 09 – 2023)