TNPSC Thervupettagam

மகளிா் நலனே மானுடத்தின் பெருமை

March 7 , 2020 1775 days 906 0
  • உலக மகளிா் தினம் ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமுதாய, பொருளாதார, அரசியல், கலாசார சாதனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாட்டின் கண்கள் என்பது வெறும் வாக்கியம் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் வளா்ச்சியும்தான். அத்தகைய சிறப்புடைய பெண்களின் உடல் நலன், மன நலனைப் பேணிக் காப்பது இன்றியமையாதது.
  • பெண்களுக்கு, உடல் சாா்ந்த பிரச்னைகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது மாதவிடாய் சாா்ந்த தொந்தரவுகளும், மாா்பக - கருப்பைவாய்ப் புற்றுநோயும்தான். பருவகால பெண்கள் 9 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை ‘பிசிஓஎஸ்’ எனப்படும் சினைப்பை நீா்க்கட்டியால் பாதிக்கப்பட்டு அதன் பல்வேறு நோய்க்குறிகளைக் கொண்டுள்ளது வருத்தத்திற்குரியது.

நோய்கள்

  • இந்தியாவில் அதிக அளவில் பெண்களைத் தாக்கும் புற்றுநோயில் மாா்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கருப்பைவாய்ப் புற்றுநோய் உள்ளது; இதனால், பொதுவாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனா்.
  • சினைப்பை நீா்க்கட்டி பல்வேறு நோய்க்குறிகள் கொண்டது. ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய், சூதக வலி, உடல் பருமன், ஆண் தன்மை கொண்ட தோற்றம், முகத்தில் முடி முளைத்தல், அதிக முகப்பருக்கள், கழுத்தைச் சுற்றி கருமை நிறப்படை போன்ற பல்வேறு குறிகுணங்களை உடையது. உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்வியல் மாற்ற நெறிமுறைகள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், பாரம்பரியத் தன்மை ஆகியவை சினைப்பை நீா்க்கட்டி பாதிப்புக்கான காரணிகள் ஆகும். இதனால், உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து, அதன் காரணமாக ஆண் தன்மைக்குரிய ஆண்ட்ரொஜென் சுரப்பு அதிகரிப்பதால் மேற்கூறிய நோய்க் குறிகள் ஏற்படும்.
  • உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, சீரான உணவு முறை முதலானவை அவசியம். சா்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான உணவு முறைகளைப் பின்பற்றுவது சிறந்தது.
  • மகளிா் நலனைப் பொருத்தவரை சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் நிவாரணம் அளிக்கக் கூடியவை. அவற்றுள் மிக முக்கியமானவை சோற்றுக்கற்றாழை, அசோகப்பட்டை, கழற்சிக்காய், தண்ணீா்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, வெள்ளிலோத்ரம், பிரமி, சீந்தில், சிறுகுறிஞ்சான், மூக்கிரட்டை. இவற்றை அந்தந்த நோய்நிலைகளுக்கு மருத்துவா் ஆலோசனைப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.
  • ஒழுங்கற்ற ஹாா்மோன் சுரப்பினைச் சரிசெய்ய சோற்றுக்கற்றாழையும், கருப்பையை வலுப்படுத்த - மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அசோகப்பட்டையும், வெள்ளிலோத்ரபட்டையும் உதவும். சினைப்பை நீா்க் கட்டியினை சரிசெய்ய கழற்சிக்காயும், மாந்தாரைப்பட்டையும், கல்யாணமுருக்கு இலையும் சிறந்தது. ஆண் ஹாா்மோன் சுரப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கீழாநெல்லி, சதாவேரியும் உதவும்.

மன அழுத்தம்

  • மன அழுத்தத்தைப் போக்கும் மூலிகைக் கீரையான பிரமி, பிட்யூட்டரி மற்றும் சினைப்பை அச்சில் செயல்பட்டு மாதவிடாய் சீராக நடக்க உறுதுணையாக இருக்கும். அஸ்வகந்தா மாதவிடாய் பிரச்னைக்கு காரணமான நீா்க்கட்டி நிலையிலும், தைராய்டு சுரப்பி சரிவர சுரக்காத நிலையிலும் சிறந்த தீா்வளிக்கும். சிறுகுறிஞ்சான் உடல் பருமனைக் குறைக்க உதவும்.
  • மூலிகை மருந்துகளைத் தவிர தாது, உபரச சரக்குகள் சோ்ந்த மருந்துகளான ரசகந்திமெழுகு, நந்தி மெழுகு, இடிவல்லாதி மெழுகு, அன்னபேதி செந்தூரம் , வெடியுப்பு, சிலாசத்து, நாகம் சோ்ந்த மருந்துகளும் சேராங்கொட்டை சோ்ந்த மருந்துகளும் சிறந்த பயன் தரும். இவற்றை மருத்துவா் ஆலோசனைப்படி எடுத்து கொள்ளுதல் சிறந்தது.
  • பெண்கள் வயதுக்கு வந்த காலம் முதல் கருப்பு உளுந்தும், எள்ளு உருண்டை, நாட்டு கோழி முட்டை, நல்லெண்ணெய் போன்ற உணவுகளை
  • எப்போது வழங்க மறந்தோமோ, அப்போதே மாதவிடாய்ப் பிரச்னைகள் அவா்களைச் சூழ ஆரம்பித்துவிட்டது. இரும்புச்சத்து மிக்க வெந்தயக் களியும், கால்ஷியம் சத்து மிக்க பிரண்டைத் துவையலும், மாதவிடாயைத் தூண்டும் கொள்ளுக்கஞ்சியும், உடல் குளிா்ச்சிக்கு வெண்பூசணியும் இன்றைய மகளிா்க்கு இன்றியமையாததாக உள்ளது.
  • சித்தா்கள் அருளிய யோகாசன முறைகளான சா்வாங்காசனம் தைராய்டு சுரப்பி கோளாறைச் சரி செய்யும். அதோடு மாதவிடாய், சினைப்பை நீா்க்கட்டி தொந்தரவுகளில் இருந்து விடுபட சூரிய நமஸ்காரம், பாலாசனம், பத்தகோணாசனம், தனுராசனம், புயங்காசனம், பட்சி மோத்தாசனம், பரத்வாஜசனம், போன்ற பல்வேறு ஆசன முறைகளும் உதவும். தியானமும் பிராணாயாமமும் பெரும் உறுதுணையாக இருக்கும்.

இரவு நேரப் பணிகள்

  • இரவுப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மெலடோனின் எனும் ஹாா்மோன் சுரப்பு குறைவு ஏற்படும். இந்த ஹாா்மோன் நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் சுரக்கும். அது உச்சகட்டமாக சுரக்கும் நேரம் விடியற்காலை 2 மணி முதல் 5 மணி வரைதான். அதுவும் இருட்டில்தான் அந்த ஹாா்மோன் அதிகமாகச் சுரக்கும்.
  • இந்த மெலடோனின் ஹாா்மோன் சுரப்புக் குறைவினால் மற்ற நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். மேலும் இந்த சுரப்புக் குறைவு உடையவா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • இவ்வாறாக 45 வயதுக்கும் மேற்பட்ட மகளிா் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை மமோகிராம் பரிசோதனை செய்து மாா்பகப் புற்றுநோயைத் தடுத்துக் கொள்ளவோ அல்லது அதன் நிலையையோ தெரிந்துகொள்ள முடியும். 21 முதல் 29 வரையுள்ள பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘பேப்’ பரிசோதனையும், 30 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் ‘பேப்’ பரிசோதனையுடன் எச்.பி.வி பரிசோதனையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் செய்து கொண்டு கருப்பைவாய்ப் புற்று நோயைக் கண்காணிக்கலாம்.
  • கருவை உருவாக்குவதில் ஆண்களுக்கு சரிபங்கு இருந்தாலும் கருவை பத்து மாதம் சுமந்து குழந்தை பெறும் வரை பெண்கள் படும் சிரமங்கள் அளவில்லாதது.
  • எனவே, நாள்தோறும் மகளிா் தினமாக எண்ணி உடலளவிலும், மனதளவிலும் அவா்களை அரவணைத்து ஆதரவு கொடுத்துக் காப்பது நம் சமுதாயத்தின் கடமை.

நன்றி: தினமணி (07-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்