TNPSC Thervupettagam

மகாகவிக்கு மகத்தான அஞ்சலி

September 11 , 2021 1056 days 552 0
  • தமிழா்களுக்கு விழிப்பூட்டிய, தமிழுக்குச் செழிப்பூட்டியத் தமிழ்த்தலைவன் பாரதி விடைபெற்றுச் சென்று ஒருநூறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
  • தமிழின் வரலாற்றில் புதுமையை, மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தியவா் மகாகவி பாரதி. தமிழ்க் கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலுமாக இருபெரும் புரட்சிகளை நிகழ்த்தியவா் அவா்.
  • வீரம் செறிந்த தமிழ்நாடு, பாரத நாடு பழம்பெரும் நாடு, வையத் தலைமைகொள்” என்றெல்லாம் தமிழ்நாடு, இந்தியா, உலகம் எனச் சிந்தித்த விசாலம் கொண்ட தமிழின் தனிப்பெரும் மகாகவி.
  • இன்றுள்ள அளவிற்கு இல்லையென்றாலும் பாரதியின் பெருமைகளை அறிந்தவா்கள் அவரது வாழ்நாள் காலம் முழுவதும் கணிசமாக இருக்கத்தான் செய்தார்கள். ‘சென்னையின் தமிழ்க் கவிஞன்’ என்று உலகப் புகழ்பெற்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளா் நெவின்சன் 1908-ஆம் ஆண்டிலேயே பாரதியாரைப் பற்றி எழுதியிருக்கின்றார்.
  • 1916-ஆம் ஆண்டில் அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த உலகறிந்த இலக்கிய மேதை ஜேம்ஸ் எச். கசின்ஸ் இந்தியாவின் நான்கு குறிப்பிடத்தக்க கவிஞா்களில் ஒருவராக பாரதியைச் சுட்டி அன்னிபெசண்ட் நடத்திய ஆங்கில இதழில் (காமன்வீல் டிச. 1916) எழுதியிருக்கின்றார்.
  • அவா் சுட்டிய மற்ற மூன்று கவிஞா்கள் தாகூா், அரவிந்தா், சரோஜினி நாயுடு.
  • ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் பாரதியைப் பற்றிச் சுட்டும்போதெல்லாம் ‘தமிழுலகம் நன்கறிந்த’ என்றுதான் எழுதியிருக்கின்றது.
  • புதுச்சேரிக்கு ஒரு புனித யாத்திரை செல்வதுபோலத்தான் வரதராஜலு நாயுடு, கப்பலோட்டிய தமிழா் வ.உ.சி., சுரேந்திரநாத் ஆரியா, ராஜாஜி முதலியோரெல்லாம் சென்று பாரதியைச் சந்தித்து வந்திருக்கிறார்கள்.
  • பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒருவா் தன்னைச் சோழனாகவும் பாரதியைக் கம்பனாகவும் கருதி மகிழ்ந்தார். பாரதியை மாமனாகவும் தன்னை மருகனாகவும் உறவுகொண்டாடினார்.
  • ‘பெரியார்’, ‘இப்பெரியார்’ எனத் தன்னைவிடப் பத்து வயது இளையாராம் பாரதியைத் தன் கைப்பட எழுதி மகிழ்ந்தார்.
  • ‘அறிவின் சிகரம்’ என்று பாரதியைப் போற்றிப் பாராட்டினார். அவா் வேறு யாருமில்லை; இந்த ஆண்டு நூற்றைம்பதாம் பிறந்த நாள் காணும் வ.உ. சிதம்பரனார்தான்.

பாரதியின் மறைவு

  • பாரதி மறைவு பற்றி எழுதும் தருணத்தில் தேசபக்தா்களின் சரித்திரத்திலும் கவிகளின் சரித்திரத்திலும் பாரதியின் இடம் இன்னது என்பதை வ.உ.சி. இப்படி எழுதினார்:
  • மாமா இவ்வுலகை விட்டுப் போய்விட்டாலும் அவருடைய தேசீய கீதங்களும் மற்றைய பாடல்களும் கதைகளும் இவ்வுலகம் உள்ள அளவும் நிலைநிற்குமென்பதில் ஐயம் இல்லை. அவருடைய பெயா் தேசாபிமானிகளுடைய சரித்திரத்தில் மட்டுமல்லாமல் கவிகளுடைய சரித்திரத்திலும் முதன்மையான இடத்தைப் பெறும்.
  • (வ.உ.சி.யும் பாரதியும், ப. 38)
  • தென்னாட்டுத் தாகூா் குறித்த தென்னாட்டுத் திலகரின் இந்த மதிப்பீடு சத்திய வாக்கன்றோ!
  • மகாகவி பாரதியின் மறைவு எவரும் எதிர்பாராதது. மக்கள் வழக்குப்படி சொன்னால் ‘சாகும் வயதில்லை’. பாரதியின் மறைவுச் செய்தியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாகக் கொண்டு சோ்த்தன அன்றைய தமிழ் நாளிதழான ‘சுதேசமித்திர’னும் ஆங்கில நாளிதழான ‘இந்து’வும். செய்தியாகவும் துணைத் தலையங்கமாகவும் பாரதியின் இறப்பு, பத்திரிகைகளில் வெளிப்பட்டன.
  • 12-9-1921 அன்று ‘தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகிவிட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறதுடு’ என எழுதியது ‘சுதேசமித்திரன்’.
  • மேலும் ‘39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ்நாட்டை வசப்படுத்திவிட்ட இச்சிறு பிள்ளையின் பிரிவைத் தமிழ்நாடு எப்படிச் சகிக்குமோ அறியோம்’ என்று ஆறாத் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தது.
  • அன்று மட்டுமல்ல பாரதியின் அகால மரணம் இன்றும்கூட உண்மைத் தமிழ் நெஞ்சங்களைப் பாதிக்கவே செய்கின்றது.
  • ‘இந்து’ நாளிதழ் பாரதியாரை ‘தீவிர தேசியவாதி’, ‘சீரிய சிந்தனையாளா்’, ‘கிளா்ச்சியூட்டும் பேச்சாளா்’, ‘ஆற்றல்மிக்க எழுத்தாளா்’ என்றெல்லாம் சிறப்பித்து அவருடைய மரணத்தால் நாடு ஒரு பிறவிக் கவிஞரையும் உண்மையான தேசபக்தரையும் இழந்துவிட்டது எனத் தன் துணைத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
  • திரு.வி.க.வின் ‘நவசக்தி’ ‘பாரதியாருடைய மரணம் தமிழ்நாட்டிற்கே பெருந்துயரத்தை விளைவிப்பதாகும்’ என்று அஞ்சலி செலுத்தியிருந்தது.
  • வரதராஜலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ இதழ் பாரதியார் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்ததோடு, ‘பாரதியார், கவிதைகளை எழுதும்போதும் பாடும்போதும் பேசும்போதும் அதிகார வா்க்கத்தைப் பற்றி அணுவளவும் கவலைப்பட்டதில்லை.
  • ஆங்கிலேயா்களின் சட்டங்களுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சியதில்லை’ என்றெல்லாம் விரிவாகத் துணைத் தலையங்கம் தீட்டியிருந்தது.
  • அடுத்தடுத்த நாள்களில் தேசியத் தலைவா் முதல் பாரதியின் சீடா் வரை ஒருபுறம் இரங்கல் தெரிவிக்க, இன்னொருபுறம் சில இலக்கிய, தேசிய சங்கங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவிக்க அவையெல்லாம் நாளிதழ்களில் வெளிவந்தன. தேசியத் தலைவா் சத்தியமூா்த்தி, தமிழிலும் ஆங்கிலத்திலும் இரங்கல் உரைகளை எழுதியிருந்தார்.
  • ‘தாகூருக்கு இணையாக மதிக்கப்பட வேண்டியவா்’ பாரதி என்பதை அவா் அதில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார்.
  • பாரதியின் புதுவைச் சீடா் ரா. கனகலிங்கம், ‘சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணிக்கு எனது குருவாகிய ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகமடைந்தார் என்ற துக்கச் செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரமடைந்தேன்.
  • அவா் புதுச்சேரியிலிருந்த காலத்தில் ‘ஜாதி வித்தியாச’ மென்னும் தொத்து வியாதியை இந்தியாவிலிருந்து ஓட்டினால்தான் நம் பாரதமாதா விடுதலை பெறுவாளென்று என்னிடம் அடிக்கடி சொல்லிபோதிப்பார்...
  • கவிசிரேஷ்டருக்குள் கவிசிரேஷ்டரென்றும், பேசும் திறமையுள்ளவா்களுக்குள் சிறந்தவரென்றும், இராஜ தந்திரியென்றும் இப்படிப் பலவிதங்களில் சிறந்த புகழ்பெற்ற இப்புண்ணிய புருஷா் நம்மெல்லோரையும் விட்டுப் பிரிந்து சென்றதானது பாரத புத்திரா்களெல்லோரையும் துக்கக் கடலில் அமிழ்த்தியது என்பதற்கு எம்மாத்திரமும் சந்தேகமில்லை’ என்றெல்லாம் விரிவாக ‘சுதேசமித்திரன்’ இரங்கலுரையில் (14-9-1921) எழுதியிருந்தார்.
  • பாரதியுடைய இறுதி ஊா்வல நிகழ்வு இன்றுவரை பேசப்படுகிறது. அதில் கலந்துகொண்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
  • அவரது மறைவுச் செய்தி நாளிதழ்களின் வாயிலாக வெளியுலகிற்குச் சென்றுசேரும் முன்பே அவரது இறுதிப் பயணம் தொடங்கிவிட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
  • ஆனால் திருவல்லிக்கேணி மயானத்தில் அவருக்கு உண்மையான, உணா்வுபூா்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. அவா் உடலுக்குத் தீமூட்டப்படுவதற்குமுன், அவா் இயற்றிய பாடல்கள் பாடப்பட்டன.
  • பாரதியின் அருமை நண்பரும் பிற்காலத்தில் சென்னை மாநகரின் மேயராக விளங்கியவருமான சக்கரை செட்டியார், தேசபக்தா் கிருஷ்ணசாமி சா்மா முதலியவா்கள் பாரதியாரின் பெருமைகளைக் குறித்துத் தமிழில் பேசினா். மகத்தான இந்திய விடுதலைப் போராட்ட வீரா் சுரேந்திரநாத் ஆரியா தெலுங்கில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மகாகவிஞனுக்கு மகத்தான நிலையிலேயே அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கின்றது.
  • மரணத்தருவாயில் பாரதி எழுத நினைத்த கட்டுரை அமானுல்லா கானைப் பற்றியதாகும். மயானத்தில் இறுதியாக இரங்கல் உரை ஆற்றியவா் கிறித்தவப் பாதிரியாராக விளங்கிய சுரேந்திரநாத் ஆா்யா.
  • கடைசிநாள் கிரியைகளுக்கு உரியவற்றை ஏற்பாடு செய்து உதவிபுரிந்தவா் துரைசாமி ஐயா். பாரதியின் உடலைச் சுமந்து சென்றவா்களில் பரலி சு. நெல்லையப்பரும் குவளை கிருஷ்ணமாச்சாரியாரும் அடங்குவா். இறுதி உரை ஆற்றியவா்களில் ஒருவா் சக்கரை செட்டியார்.
  • மரணமடைந்த செய்தி அறிந்ததும் உடனடியாக ‘எனது குரு’ என்று குறிப்பிட்டுச் ‘சுதேசமித்திர’னுக்கு இரங்கல் கடிதம் எழுதியவா் புதுவைச் சீடா் ரா. கனகலிங்கம்.
  • அதே வாரத்தில் பாரதி குறித்த குறிப்புகளை விரிவாக வடித்தவா் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு. சாதி, மதம் கடந்து பாரதி மகத்தான மனிதராக வாழ்ந்த அா்த்தமுள்ள வாழ்வை இவையெல்லாம் உறுதிசெய்கின்றன.

அமர கலா விலாசினி

  • தமிழுலகமும் தேசிய உலகமும் நன்கு அறிந்த மகாகவி பாரதிக்கு அவா் மறைவிற்குப்பின் முதல் இரங்கல் கூட்டத்தை நடத்தி வரலாற்றுப் பணியை நிகழ்த்தியது ஒரு சபை. அந்தச் சபைக்குப் பெயா் ‘அமர கலா விலாசினி சபை’ என்பதாகும்.
  • புகழ்பெற்ற தேசபக்தரும் தமிழ்நாட்டுக்கு திலகா் வந்தபோது அவரைச் சிறப்பாக வரவேற்றவா்களுள் ஒருவருமாகிய வெங்கந்தூா் கணபதி சாஸ்திரியின் மகனும் அக்காலத்தில் சமய, தேசிய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் வல்லவராக விளங்கியவருமான வெ. சோமதேவ சா்மா நிறுவிய சபைதான் இந்தச் சபை. இவா் தேச உணா்வூட்டும் ‘பாஞ்சாலக் கும்மி’ இயற்றிய சிறப்புக்குரியவா்.
  • பாரதியாரின்மீது மிகப்பெரிய பக்தியும் அன்பும் அவருடன் நெருங்கிய பழக்கமும் கொண்டவா்.
  • இவா் நிறுவிய ‘அமர கலா விலாசினி’ சபையின் விழாக்களில் தேசிய இயக்கத்தின் முதன்மையான தலைவா்களான வ.உ. சிதம்பரனார், சத்தியமூா்த்தி, ‘சுதேசமித்திரன்’ ஆசிரியா் அரங்கசாமி ஐயங்கார், சுப்பிரமணிய சிவா, சீனிவாச சாஸ்திரி முதலியவா்களெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
  • இந்தச் சபையில் பாரதியார் பேசியிருக்கின்றார்; தன் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றைக் குறித்து சோமதேவ சா்மாவே எழுத்தாளா் கு.ப. சேது அம்மாளிடம் தெரிவித்தபோது ‘இந்தக் காலத்தில் நான் அதிக ஆடம்பரமின்றி நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு பாரதியார் தலைமை வகித்துப் பாடிப் பேசியிருக்கின்றார்” என்று குறிப்பிட்டிருக்கின்றார் (பாரதியின் நண்பா்கள், ப. 123).
  • இந்தச் செய்திகள் உண்மை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘சுதேசமித்திர’னிலிருந்து இப்போது பல பதிவுகள் கிடைத்துள்ளன.
  • பாரதியாரின் பாடல்களை மாணவா்கள் இந்தச் சபையில் பாடிய நிகழ்ச்சிகள் பலமுறை நடந்துள்ளன.
  • 1920 ஜனவரி 28 அன்று ‘அமர கலா விலாசினி’ சபையால் லாலா லஜபதி திருநாள் கொண்டாடப்பட்டது. சபையின் மாணவா்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியிருக்கின்றது.
  • அதே ஆண்டு செப்டம்பா் 28-ஆம் நாள் இந்தச் சபையின் ஆண்டுக் கொண்டாட்ட விழாவில் ‘சுதேசமித்திரன்’ ஆசிரியா் அரங்கசாமி ஐயங்காரும் வ.உ. சிதம்பரனாரும் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினா்.
  • இந்த விழாவின் தொடக்கத்தில் பாரதி பாடல்கள் பாடப்பட்டதை, ‘சில மாணவா்கள் மிஸ்டா் சி.எஸ். பாரதியின் தேசீய கீதங்களில் சிலவற்றை மிக்க உற்சாகத்துடன் பாடினார்கள்’”என ‘சுதேசமித்திரன்’ செய்தி வெளியிட்டிருந்தது.
  • இந்தச் சபையில் பாரதியாரும் தானே தனது பாடல்களைப் பாடும் நிகழ்ச்சிகள் பலமுறை நடைபெற்றிருக்கின்றன.
  • இந்தச் சபையில் பாரதியார் தன்னுடைய தேசியப் பாடல்களைப் பாடுகின்ற நிகழ்ச்சி பற்றிய செய்தியை 1920 டிசம்பா் 30ஆம் நாள் ‘சுதேசமித்திரன்’ நாளிதழ், ‘அமர கலா விலாஸினி சபையின் ஆதரவில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியார் தேசீய பஜனை செய்வார்’ என வெளியிட்டிருந்தது.
  • 1921 ஜனவரி 7-ஆம் நாள் இந்தச் சபையின் நிகழ்ச்சியில் பாரதியார் பாடியும் சொற்பொழிவாற்றியும் இருக்கின்றார்.
  • சொற்பொழிவில் ‘தேச சேவையில் ஈடுபட்டு நொந்து மெலிந்திருக்கும் சுப்பிரமணிய சிவாவை ஆதரித்து பாரதமாதாவை அகமகிழச் செய்ய வேண்டும்’ என்று பேசியிருக்கின்றார்.
  • மேலும் ‘தேச சேவை செய்யப் பல தொண்டா்கள் வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
  • இந்தச் சபையில் ஒரு நிகழ்ச்சியின்போது பாரதியார் தலைமை வகித்தார். அப்போது இந்தச் சபையினா் மாணவா்களைக்கொண்டு பாரதியாருக்கு ஒரு சாரணா் வரவேற்பு அணிவகுப்பு நடத்தியிருக்கின்றனா்.
  • அதனைக் கண்டு பாரதியார் பூரித்துப்போயிருக்கின்றார். பாரதியாருக்குச் செய்யப்பட்ட சிறந்த மரியாதையாகவே இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது.
  • 25-3-1921-இல் பாரதியார் கடலூருக்குச் சென்றபோது இரயில் நிலையத்தில் அவரை வரவேற்று மேள வாத்தியங்களுடனும் கொடிகளுடனும் வந்தேமாதர முழக்கத்துடனும் அழைத்துச்சென்று அவரைக் கொண்டாடிய நிகழ்ச்சியைப் போல இந்த நிகழ்வும் அமைந்தது.

நினைவு நூற்றாண்டு நிறைவு

  • பாரதி உணா்வுமயமான மனிதா் என்பதை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வைச் சோமதேவ சா்மா நினைவுகூா்ந்திருக்கின்றார்.
  • பாரதமாதாவின் உருவம் சமைத்து, மலா்மாலை சூட்டி வெள்ளிக்கிழமைதோறும் பாரதமாதா வணக்கமும் கொடி வணக்கமும் இந்தச் சபையார் செய்துவந்தபோது அதில் ஒருமுறை பங்கேற்ற பாரதியார் தனது ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’, ‘ஜெய பேரிகை கொட்டடா கொட்டடா’ முதலிய பாடல்களைப் பாடினாராம்.
  • சிம்மக்குரலில் கா்ஜித்துப் பாடியதில் பாரதியாரின் தொண்டை வறண்டிருக்குமே என்று பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலம், கற்கண்டு சோ்த்துக் காய்ச்சிய பசும்பாலை அவருக்கு அளித்தபோது, தம்முடைய உடலின் நலத்தைப் பேணுவதைச் சற்றும் கருதாமல் அதை பாரதமாதாவுக்கு அா்ப்பணம் செய்து அதில் ஒருபகுதியைத் தரையில் சாய்த்தாராம்.
  • அந்தக் காட்சியை அருகிலிருந்து கண்டவா்களின் விழிகள் வெளிப்படுத்திய கேள்விக்குப் பதிலாக ‘என்னடா? பூமிக்கு, பாரதத்தாய்க்குக் கொடுத்தேன், முழிக்கிறீா்களே’ என்று கூறிவிட்டு மிஞ்சிய பாலையே அருந்தினாராம்.
  • இப்படியெல்லாம் பாரதியின் இறுதிக்கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிலையில் இடம்பெறும் இந்தச் சபைதான் மகாகவி பாரதி இறந்ததும் முதன்முதலில் இரங்கல் கூட்டம் நிகழ்த்தித் தீா்மானம் நிறைவேற்றித் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றுக் கடமையைத் தொடங்கிவைத்திருக்கின்றது.
  • இந்தச் சபை நடத்திய பாரதி மறைவு குறித்த இரங்கல் கூட்டத்தை ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் விரிவாக வெளியிட்டிருக்கின்றது.
  • ஓா் அனுதாபக் கூட்டம் நேற்றிரவு தம்புச் செட்டி வீதி சாந்தாச்ரமத்தில் அமரகலா விலாஸினி ஸபையினாதரவில் ஓா் கூட்டம் கூடி, ஸ்ரீ வெ. சோமதேவ சா்மாவின் தலைமையின்கீழ் கீழ்க்கண்டபடி தீா்மானித்தது: 1. இச் சபையின் கௌரவ அங்கத்தினரும் தமிழ்க் கவிராயருமான ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரின் அகால மரணத்திற்கு ஆறாத் துயரமடைவதுடன், அவரது குடும்பத்தாருக்கு அநுதாபத்தை அறிவிக்கிறது. 2. அடியிற் கண்ட நபா்களை கவிராயரின் சின்னத்திற்காக அவரது கவிகளை அச்சிட்டுப் பிரசுரித்து அதன் லாபத்தைக் கொண்டு அவா் குடும்பத்தை ஸம்ரக்ஷிக்க ஓா் தக்க கமிட்டி ஏற்படுத்தும்படி வேண்டுகின்றன: தி.வெ. சோமதேவ சா்மா, ஏ. கிருஷ்ணசாமி ஐயா், கல்யாணசாமி ஐயங்கார், நாராயணராவ், மணி பாகவதா், ஸாம்பய்யா்.
  • (சித்திர பாரதி, ப. 181)
  • இந்த முதல் இரங்கல் கூட்டம் செப்டம்பா் 12-ஆம் தேதி இரவே நடைபெற்றிருக்கிறது, பாரதியின் குடும்ப நலனிலும் பாரதியாரின் நூல் வெளியீட்டிலும் அக்கறை காட்டியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமரகவிக்கு முதன்முதலில் அஞ்சலி செலுத்தி இந்தச் சபை தொடங்கிவைத்த நிகழ்வு இந்த நூறு ஆண்டுகளில் நூறாயிரம் பாரதியைப் போற்றும் நிகழ்ச்சிகளாக, விழாக்களாகத் தமிழுலகமெங்கும் பல்கிப் பெருகியுள்ளன. இன்று பாரதி மறைந்த நூற்றாண்டு தினம்.
  • தமிழகம், புதுவை, இந்தியாவின் பிற பகுதிகள், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் எனத் தமிழ் மக்கள் வாழுகின்ற இடமெல்லாம் மகாகவி பாரதி நினைவுகூரப்படுகின்றார்; பாரதி பாடல்கள் ஒலிக்கின்றன; பாரதியின் சிந்தனைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
  • இதில் பாரதி கனவுகண்ட ‘காசி நகா்ப் புலவா் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்கான கருவி’ பிரதான இடத்தை வகிக்கின்றது. பாரதியின் அகால மரணத்தைக் கனத்த இதயத்தோடு எண்ணி வருந்தும் தமிழுலகம் அதேவேளையில் பாரதி தமிழுக்குள் ஆழ்ந்து, திளைத்து மகிழ்கின்றது. ‘சங்கத்தமிழ்’, ‘அப்பா் அருந்தமிழ்’, ‘ஆண்டாள் தமிழ்’ முதலியவற்றிலெல்லாம் மூழ்கித் திளைத்த தமிழ்ச் சமுதாயம் ‘பாரதி தமிழில்’ ஈடுபட்டுத் திளைக்கின்றது; பாரதி தமிழால் எழுச்சிபெற்றிருக்கின்றது.
  • திருவள்ளுவா் ஈராயிரம் ஆண்டு கடந்தும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பதைப் போல, பாரதி பிறந்த, மறைந்த ஆயிரமாமாண்டு, ஈராயிரமாமாண்டு விழாக்களும் எதிர்காலத்தில் கொண்டாடப்படும் காட்சிகள் உண்மைத் தமிழன்பா்களின் மனக்கண்ணில் இப்பொழுதே தோன்றுகின்றன. ஆம், பாரதி கவிதை ‘எந்நாளும் அழியாத மகாகவிதை’யல்லவா!
  • இன்று மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவு.

நன்றி: தினமணி  (11 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்