- இந்திய அரசின் மிக உயர்ந்த ஐ.சி.எஸ். பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, லண்டன் மாநகரில் பயிற்சியை முடித்த பின்பு, பதவியை ராஜிநாமா செய்து விட்டு, இந்தியாவுக்குத் திரும்புகிறார் இளைஞர் ஒருவர். 1921-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் கப்பலிலிருந்து பம்பாயில் இறங்கிய அவர், அன்று மாலையே அண்ணல் காந்தியடிகளைச் சந்திக்க விரைகிறார்.
- "இந்திய தேச விடுதலைக்காக நான் எந்த தியாகமும் செய்வதற்குத் தயார்' என்று உறுதி அளிக்கிறார் உணர்ச்சிப் பிழம்பான அவர். அண்ணலும் அவரை அரவணைத்துக் கொள்ளுகிறார். அந்த இளைஞர் தான் வங்கம் தந்த தங்கம், விடுதலைக் கொடியை உயர்த்திப் பிடித்த சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.
- அதே ஆண்டு டிசம்பர் மாதம், வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது கல்கத்தா நகரமே ஸ்தம்பித்தது. அதற்காக போராட்டத் தலைவர் போஸுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1924-இல் ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் குண்டு வீச்சுக்குப் பலியான வழக்கில் இரண்டு வருட சிறைவாசம். விடுதலைக்குப் பின் சுபாஷுக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
- 1930-இல் கல்கத்தா மேயராகவும் பதவி வகிக்த்தார் போஸ். வங்காள காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். அப்போது அவருக்கு வயது 34. பண்டித நேருவை விட எட்டு வயது இளையவர்; அண்ணல் காந்தியைவிட 28 வயது இளையவர். தீரத்தாலும், வீரத்தாலும், தியாகச் செயலாலும், தீப்பொறி பறக்கும் பேச்சாலும் மக்கள் தலைவராக உயர்ந்து கொண்டே இருந்தார் சுதந்திரப் போராளி சுபாஷ்சந்திர போஸ்.
- நேதாஜியை சரியாகக் கணித்த காந்திஜி, பட்டை தீட்டப்படாத அந்த வைரத்தைப் பட்டை தீட்டி, முறையாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். ஆகவே அக்டோபர் 1937-இல் நடைபெற்ற சந்திப்பின்போது, "காங்கிரஸ் அக்ராசனர் (தலைவர்) பதவியை நீங்கள் ஏற்றால் நல்லது' என்றார் அண்ணல் காந்தி. அண்ணலின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார் நேதாஜி.
- 1938 பிப்ரவரி மாதம் 19-ஆம் நாள் குஜராத்தில் நடை பெற்ற 51-ஆவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு 51 வெள்ளைக் காளைகள் பூட்டப்பட்ட அழகிய ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் போஸ். பதவியிலிருந்து விலகும் பண்டித நேருவின் வேண்டுகோளை ஏற்று, சுபாஷ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
- நேதாஜி தலைமைப் பதவியில் இருந்த ஓராண்டு காலத்தில், காந்திஜியோடு இணக்கமாகவே செயல்பட்டார். காந்திஜியிடம் அவர், "காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களில், முஸ்லிம் லீக் கட்சியினரையும் ஆட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அதே போல் முஸ்லிம் லீக் பெரும்பான்மை பெற்றுள்ள மாநிலங்களில், ஆட்சிப் பொறுப்பில் காங்கிரûஸ சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்று கோரினார். இந்த ஆலோசனைகள் அண்ணலுக்கு முழு திருப்தி அளித்தன. ஆனாலும் கட்சிக்குள் இருந்த மத, மொழி, பிராந்திய சிந்தனையாளர்கள், "போஸ் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்; மற்றவர் கருத்துக்கு மதிப்பளிப்பதில்லை' என்று குற்றம் சாட்டினர்.
- "பதவி ஏற்ற ஓராண்டு காலத்திற்குள் நான் நினைத்ததை நிறைவேற்ற இயலவில்லை. ஆகவே இரண்டாம் முறையாக 1939-ஆம் ஆண்டு தலைவர் தேர்தலில் நிற்க விரும்புகிறேன்' என்றார் சுபாஷ் போஸ். ஆனால், அதற்கு அண்ணலின் சம்மதத்தைப் பெறவில்லை. இரண்டாம் முறை தொடர்வது அன்று மரபாகவும் இல்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் இதனை ஏற்கவுமில்லை.
- 1939 ஜனவரி 29 அன்று தேர்தல் நடந்தது. சுபாஷ்சந்திர போûஸ எதிர்த்து நின்றவர் காந்தியவாதியான பட்டாபி சீத்தாராமையா! போஸ் பெற்றது 1,580 வாக்குகள்; பட்டாபி பெற்றதோ 1,375 வாக்குகள். தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற சுபாஷ் போஸுக்கு ஏற்கெனவே இருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். போஸ், "அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருந்தாலும் அண்ணல் காந்திஜியின் நம்பிக்கையைப் பெற நான் தவறினால் அதனைத் தோல்வியாகக் கருதுவேன்' என்றார்.
- இந்த இக்கட்டான சூழலில், காந்திஜியை சந்தித்தார் போஸ். அப்பொழுது அண்ணல் "எதிர் அணியில் இருப்பவர்களைச் சேர்த்தால், உங்கள் செயலுக்கு தடையாக நிற்பார்கள்; ஆகவே உங்களுக்கு நம்பிக்கை உள்ள, உங்களுக்கு இணக்கமாகச் செயல்படுபவர்களையே நீங்கள் நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நிதானமாகச் செயல்படுங்கள். இதுவே எனது ஆலோசனை' என்றார்.
- காந்திஜியின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை; காங்கிரúஸô ஒத்துழைக்கத் தயாராக இல்லை. இந்த இக்கட்டான சூழலில் சுபாஸ் போஸ் தலைவர் பதவியை 29.4.1939 லிஅன்று ராஜிநாமா செய்தார்.
- தன் திட்டத்தை காங்கிரஸ் மூலம் நிறைவேற்ற முடியவில்லை என்பதால், "பார்வர்ட் பிளாக்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார் போஸ். பின்பு 1940 ஜூன் 13 அன்று போஸ், காந்தியை சந்தித்து, "உங்கள் வழியில் சாதிக்க முடியாததை என் வழியில் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்' என்றார். "நல்லது' என்றார் காந்தி.
- "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று போஸ் கேட்க, "போஸ்! நீங்கள் நினைப்பதுபோல், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தரமுடியுமானால், உங்களை முதலில் வாழ்த்துவது நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை! நீங்கள் செல்லும் வழி, ஆயுதப் போர்முறை தவறானது. இதனை சுட்டிக் காட்ட வேண்டியது என் கடமை' என்றார் காந்தி.
- அண்ணல் காந்தி அரசுக்கு எதிராக போராட்டம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்பொழுது போஸ் 23.12.1940 அன்று அண்ணல் காந்திஜிக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் "இந்திய சுதந்திரத்துக்காக நீங்கள் தொடங்கும் எந்தப் போராட்டத்திற்கும் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்' என்று குறிப்பிட்டார்.
- அதற்கு அண்ணல் காந்தியடிகள், "மிக்க மகிழ்ச்சி. நீங்கள் முழுமையாக உடல்நலன் பெற வேண்டும். இந்திய தேசத்தில் உணர்வுபூர்வமாகச் செயல்படும் அரிய தலைவர் நீங்கள் என்பதை நான் அறிவேன்' என்று பதில் எழுதினார்.
- 1943 அக்டோபர் 2 அன்று காந்திஜியின் 75-ஆவது பிறந்தநாளன்று, பாங்காங் நகர வானொலியில் "இந்திய மக்களாகிய நாம் அனைவரும் அண்ணல் காந்தியை வணங்குவோம். அவர் நடத்தி வரும் விடுதலைப் போரில் வெற்றி பெற வாழ்த்துவோம்; அவ்வெற்றி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்' எனப் பேசி வாழ்த்தினார் சுபாஷ் போஸ்.
- நேதாஜி வெளிநாட்டில் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளுக்கு - காந்தி, நேரு, ஆசாத் என்றுதான் பெயர் சூட்டினார். தான் நடத்தும் விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர்கள் காந்தி, நேரு, ஆசாத் ஆகியோர்தான் என்பதை இந்தியாவுக்கும் உலகுக்கும் அதன் மூலம் அறிவித்தார் போஸ்.
- இந்திய தேச ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று தேசியக் கொடியை அந்நிய மண்ணில் ஏற்றிப் பேசிய போது (ஆகஸ்ட் 4, 1944) "மகாத்மாஜி! எங்கள் தேசப் பிதாவே! இந்திய தேச விடுதலைக்காக ஓர் புனிதமான போரைத் தொடங்கியிருக்கிறேன்! அதில் வெற்றிபெற எங்களை வாழ்த்துங்கள்' என்று தழுதழுத்த குரலில் உரை நிகழ்த்தினார்.
- 12.2.1946 அன்று வெளிவந்த "ஹரிஜன்' இதழில், "போஸின் தேசபக்தி எவருக்கும் குறைந்தது அல்ல; அவரது ஒவ்வொரு அசைவிலும், செயலிலும் துணிவு பிரகாசிக்கிறது. அவரது லட்சியம் மிக உயர்ந்தது. ஆனால் அதில் வெற்றி பெற இயலவில்லை.
- அவரது லட்சியத்தை நாம் ஏற்போம்; அமைதியான வழியில் போராடுவோம். அவரிடம் நிரம்பி வழிந்த தேசபக்தி, தியாக உணர்வு, உள்ள உறுதி, கடமை உணர்வு, ஜாதி, மத, மொழி, பிராந்திய பேதங்களைக் கடந்த ஒற்றுமை ஆகியவற்றைப் படிப்பினையாக எடுத்துக் கொள்வோம். அவரது லட்சியத்தை நிறைவேற்றுவோம்' என்று அண்ணல் எழுதினார்.
- நேதாஜி மறைந்துவிட்டார் என்ற செய்தியை மகாத்மா ஆரம்பத்தில் நம்ப மறுத்தார். "அவர் திரும்ப வருவார். என்னோடு இணைந்து பணியாற்றுவார். தான் ஏற்ற இலட்சியத்தை நிறைவேற்றுவார். என் உள் உணர்வு அப்படித்தான் சொல்கிறது" என்றார் காந்திஜி.
- சில நாட்களில் சுபாஷ் போஸ் மறைந்துவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்த போது, அண்ணல் "நான் ஏற்கனவே சொன்னதை மறந்து விடுங்கள். என் எண்ணம் பொய்த்துவிட்டது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இறைவனின் சித்தம் அதுதான் என்றால் நாம் என்ன செய்ய முடியும்' என்றார்.
- எவருடைய பிறந்தநாளையும் நினைவில் வைத்துக்கொள்ளாத காந்திஜி நேதாஜியின் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்தார். குறிப்பாக தான் இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்னால் 23.1.1948 அன்று நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அண்ணல் "இன்று சுபாஷ்சந்திர போஸின் பிறந்த தினம். இதனை அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
- சுபாஷ் நீடு இணையற்ற தேசபக்தர். தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்தவர். அவர் ஓர் போர் வீரர் அல்ல; ஆனால் ஒரு பெரிய ராணுவப் படையின் தளபதி. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே எதிர்த்துப் போராடினார். அவரது படையில் அனைத்து மதத்தினரும் இருந்தனர்.
- அவரது பார்வையில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றே. அனைவரும் சரிநிகர் சமமானவர்களே! அத்தகைய சுபாஷ் போûஸ நினைவு கொள்வோம். அவர் வழியில் ஒற்றுமையாகச் செயல்படுவோம்' என்றார். அதுவே மாவீரன் சுபாஷ்சந்திர போஸுக்கு மகாத்மா செலுத்திய இறுதிப் புகழ் அஞ்சலி உரையாக அமைந்தது.
- மகாத்மா, மாவீரன் நேதாஜி ஆகிய இருபெருந்தலைவர்களின் இலட்சியம் ஒன்றே. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றுபட்ட இந்தியாவே அவர்கள் கண்ட கனவு! அவர்கள் கனவை நனவாக்குவதே ஒவ்வொரு இந்தியனின் தலையாய கடமை!
- இன்று (ஜன. 23) நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தநாள்.
நன்றி: தினமணி (23 – 01 – 2023)