- மகாத்மாவும் பெரியாரும் பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர்கள். சல்லிக் காசு வாங்கினாலும் கொடுத்தாலும் அதற்கு கணக்கு வைத்துக்கொள்ளத் தவறியதே இல்லை. இவர்கள் மீது அரசியல் ரீதியாக ஆயிரம் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் இருவரும் பொது வாழ்வில் நேர்மையையும் நியாயத்தையும் கடைப்பிடித்தவர்கள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
- காந்தியடிகள், ஈ.வெ.ரா. ஆகிய இருவரையும் போலவே அப்பழுக்கற்றவர்கள் வ.உ. சிதம்பரம் பிள்ளையும் வ.வே. சுப்பிரமணிய ஐயரும். வ.உ.சி. சிறந்த வழக்குரைஞர் என்பதுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு நீராவிக் கப்பலுக்கும் சொந்தக்காரர். வ.வே.சு. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இருவருமே வாழ்வின் கடைசிக் காலத்தில் துன்பப்பட்ட தமிழறிஞர்கள்.
- சிறைத் தண்டனைக் கொடுமைகளும், வழக்குரைஞர் தொழிலுக்கான சன்னது பறிமுதலும் வ.உ.சி.யை கடுமையாக பாதித்தன. வ.உ.சி.க்கு உதவும் பொருட்டு, தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் நேரடியாகவும், காந்தியடிகள் மூலமாகவும் பண உதவி செய்தனர். குறிப்பாக 347 ரூபாய் 12 அணா திரட்டி வ.உ.சி.யிடம் கொடுப்பதற்காக காந்தியடிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காந்தியடிகள் அப்பணத்தை வ.உ.சி.க்கு தாமதமாகவே அனுப்பி வைத்தார்.
- இருப்பினும் "வ.உ.சி.க்கு பணம் தராமல் காந்தியடிகள் ஏமாற்றி விட்டார்' என்ற கோணத்தில் சர்ச்சை வெடித்தது. தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி "வென் காந்தி விசிடெட் மதராஸ்' என்ற தலைப்பில் "தி ஹிந்து' ஆங்கில நாளேட்டில் 26.1.2003 அன்று ஒரு கட்டுரை எழுதினார். இக்கட்டுரையும், மேலும் பல தரவுகளுடன் அவர் சமீபத்தில் வெளியிட்ட "வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா' என்னும் நூலும், உண்மையை விளக்குகின்றன.
- தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தனக்கு அனுப்பி வைத்த பணத்தைத் தருமாறு வ.உ.சி. பலமுறை காந்தியடிகளுக்குக் கடிதம் அனுப்பினார். காந்தியடிகளோ "பணம் செலுத்தியவர்களின் பட்டியலைக் கேட்டு நேட்டாலுக்கு எழுதுகிறேன். அவர்கள் அனுப்பிய பணமும் தெரியாது, பெயர்களும் தெரியாது. ஆனால் பெற முடியும் என்று நம்புகிறேன்' என்று பதில் எழுதினார் (28-5-1915).
- வ.உ.சி. எழுதிய கடிதத்தில் "பணத்தைத் தாங்கள் அனுப்பி வைத்தால் இப்போதைய எனது இக்கட்டான சூழ்நிலையில் மிக்க உதவியாக இருக்கும். கணக்குப் புத்தகம் கிடைத்த பின் மீதித் தொகையை அனுப்பலாம்' என்று எழுதினார் (31-5-1915). சில மாதங்கள் கழித்து வ.உ.சி. தனக்கு காந்தியடிகள் பணத்தை அனுப்பியதை "ஸ்ரீமான் காந்தியவர்களிடமிருந்து ரூ 347-12-0 வந்தது' எனத் தென்னாப்பிரிக்க நண்பர் வேதியப் பிள்ளைக்குக் கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறார் (4-2-1916) . இந்நிகழ்வு நடைபெற்ற 1915-16 ஆண்டுகளில் காந்தியடிகள் தேசத் தலைவராக உருவெடுக்கவில்லை.
- வ.உ.சி.யிடம் பண விஷயத்தில் காந்தியடிகள் காட்டிய அதே கறாரையும் கண்டிப்பையும், வ.வே.சு. ஐயரிடம் காட்டினார் பெரியார் ஈ.வெ.ரா. இருவரின் நோக்கங்களும், நடந்து கொண்ட முறையும், காரண காரியங்களும், சம்பவங்களும் வேறுபடலாம். ஆனால் உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் பண விஷயத்தில் காந்தியடிகளும் ஈ.வெ.ரா.வும் கண்டிப்புடன் இருந்தனர்.
- சுதேசிக் கல்வியைப் பரப்பும் பொருட்டு சேரன்மாதேவியில் "பரத்வாஜ ஆசிரமம்' என்ற பெயரில் வ.வே.சு. ஐயர் தொடங்கிய குருகுலத்தில் எல்லா ஜாதி மாணவர்களும் பயின்றார்கள். அவரது சொந்த மகன் வ.வே.சு. கிருஷ்ணமூர்த்தியே தனிப் பந்தியின்றிப் பிற மாணவர்களுடன் சமமாகவே அமர்ந்து உணவு உண்டான். ஆனால் நிதி உதவி அளித்தவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு இரு பிராமண மாணவர்களுக்குப் போடப்பட்ட தனிப்பந்தி சர்ச்சைக்கு உள்ளானது.
- அப்போதைய காங்கிரஸில் பிராமணத் தலைமையில் இயங்கிய தீரர் சத்தியமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜி குழுக்களுக்கு எதிராக, பிராமணர் அல்லாத வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் அணி திரண்டனர். படிப்படியாக ஈ.வெ.ரா. காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார். வ.வே.சு. மதிக்கப்பட்டவராக விளங்கினாலும், காங்கிரஸில் எந்தப் பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை.
- காங்கிரஸ் செயலாளர் ஈ.வெ.ரா.வுக்கு காசோலையில் கையொப்பமிடும் அதிகாரமும் இருந்தது. எனவே தனது ஆசிரமத்துக்கு காங்கிரஸ் ஒதுக்கிய பத்தாயிரம் ரூபாயை வாங்க ஈ.வெ.ரா.வை சந்திக்கச் சென்றார் வ.வே.சு. ஐயர். ஈ.வெ.ரா. காந்தியடிகளைப் போல் கணக்குக் கேட்டுக் குறுக்கு விசாரணை செய்தார். காங்கிரஸ் கமிட்டியின் எல்லா நிபந்தனைகளையும் ஆசிரமம் நிறைவேற்றுகிறது என உறுதிமொழி அளித்தால் மட்டுமே காசோலையில் கையொப்பமிடுவேன் என்று கண்டிப்புடன் கூறினார்.
- பண விஷயத்தில் இதுவரை தன்னை யாருமே கணக்குக் கேட்காத நிலையில் ஈ.வெ.ரா. தன்னை சந்தேகப்படுகிறாரே எனக் கோபித்தார் வ.வே.சு. ஐயர். மேலும் அவர் தன்னை அவமதிப்பதாகக் கருதிக் கணக்குக் கொடுக்க மறுத்தார். பத்தாயிரம் ரூபாய் என்பதால்தானே ஈ.வெ.ரா. கையொப்பமிட மறுக்கிறார்? இப்போதைக்கு ஐயாயிரம் போதும். மீதியைப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுடன், காங்கிரஸ் கமிட்டி கூட்டுச் செயலாளரிடம் ஐயாயிரம் ரூபாய் காசோலையைப் பெற்றுக் கொண்டு வ.வே.சு. ஐயர் புறப்பட்டுச் சென்றார்.
- வ.வே.சு. ஐயர், தான் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காததுடன், தன்னைப் புறக்கணித்து விட்டு கூட்டுச் செயலாளரிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கிச் சென்றதை ஈ.வெ.ரா.வால் ஜீரணிக்க முடியவில்லை. வ.வே.சு. ஐயர் உரிய விளக்கம் அளிக்கும் வரை ஆசிரமத்துக்கு நிதி கிடையாது என்றார்.
- காங்கிரஸ் உதவி நின்று போன நிலையில், வேறு வழியின்றி நிதி அளிப்பவர்கள் விருப்பத்துக்கேற்பத் தனிப் பந்தி போடுவது ஆசிரமத்தில் தொடர்ந்தது. இந்நிலையில் வ.வே.சு. ஐயர் ஆசிரமத்தில் பிராமணர்களுக்குத் தனிப் பந்தி போடும் விவரம் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மகன் மூலம் வெளியானது. ஏற்கெனவே கோபத்தில் இருந்த ஈ.வெ.ரா. தனிப் பந்தி விஷயத்தைக் கேள்விப்பட்டு இன்னும் வெகுண்டார். ஆனால் வ.வே.சு. கால மாற்றத்தை உணராமல் அமைதி காத்தார். காந்தியடிகளே நேரடியாக விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டும் பதிலளிக்க மறுத்தார்.
- ஒரு வேளை அப்போதே வ.வே.சு. உரிய பதிலை ஈ.வெ.ரா. அல்லது காந்தியடிகளிடம் அளித்திருந்தால் பிரச்னை பூதாகரமாக வெடிக்காமல் சுமுகமாக முடிந்திருக்கும். தனது மகனுக்கே தனிப்பந்தி இல்லை என்பதையும், பணம் தருபவர்களின் நிர்ப்பந்தங்களுக்கு ஏற்பவே அவர்களது பிள்ளைகளுக்கு மட்டுமே தனிப்பந்தி என்பதையும் விளக்கி இருக்கலாம். ஆனால் தனது நேர்மையை சந்தேகப்படுகிறார்களே என வ.வே.சு. வருந்தினார்.
- காலத்தின் கோலம் விதி மீண்டும் விளையாடியது. பாபநாசம் அருவியில் வ.வே.சு. ஐயர் குடும்பத்துடன் குளிக்கச் சென்ற போது அவரது மகள் கால் இடறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற வ.வே.சு.வும் தண்ணீரில் குதிக்கக் காட்டாற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
- நீண்ட காலமாக வ.வே.சு. ஐயர் மீது ஜாதிப் பாகுபாடு செலுத்திய குற்றச்சாட்டு நிலவும் சூழலில், செப்டம்பர் 2011 "உயிர் எழுத்து' இதழில் மீனா எழுதிய "வ.வே.சு - ஒற்றை வரலாறுகளுக்கு இடையே உருப்பெறும் பன்முகம்' என்ற கட்டுரை கவனம் பெறுகிறது. "வ.வே.சு. எடுத்த நிலைப்பாடு தவறானது என்றாலும் அது மாணவர்களின் பெற்றோருக்கு அவர் அளித்த தனிப்பட்ட உறுதிமொழி சார்ந்தது.
- அதே சமயம் குருகுலத்தில் இனி எந்த ஒரு மாணவருக்கும் தனிப்பந்தி முறையை அனுமதிக்க முடியாது என "தி இந்து' நாளிதழில் வ.வே.சு. அறிக்கையும் வெளியிட்டார்' என்கிறார்.
- "ஜாதி மத பேதம் கடந்தவர் நம் ஐயர். மக்கள் யாவரும் நிகரெனும் கொள்கை உடைவர். சமூக வாழ்க்கையைக் குலைத்துப் பெருங்கேடு விளைவித்து வரும் கொடிய வழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும் என்ற சீரிய எண்ணம் கொண்டவர். இதுகாலை நடந்துவரும் குருகுலப்போர் இவரது சமூகக் கொள்கைகளின் மேல் மக்களுக்குள் ஒருவித ஐயத்தை உருவாக்கி விட்டதென்றாலும், அந்த ஐயப்பாட்டுக்குச் சிறிதும் ஆதாரமில்லை.
- உடன் உண்ணலையும் வேறு ஜாதியார் இல்லங்களில் உணவு எடுத்தலையும் இவர் கைக்கொண்டிருந்தார் என்ற உண்மையை யாமறிவோம்' என வ.வே.சு. அகால மரணம் அடைந்த போது இரங்கல் செய்தியை வெளியிட்டவர் வேறு யாருமல்ல. சாட்சாத் அதே ஈ.வெ.ரா. பெரியார்தான்.
- காந்தியடிகளும் சரி, ஈ.வெ.ரா.வும் சரி தாம் கொடுக்கும் பணம் சரியான நபருக்குத்தான் செல்கிறதா, உரிய நோக்கத்துக்காகத்தான் செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவே கண்டிப்பாக இருந்தனர். வ.உ. சி. விஷயத்தில் காந்தியடிகளும், அதேபோல், வ.வே.சு. விஷயத்தில் ஈ.வெ.ரா.வும், உணர்வுகளுக்கு இடம் தராமல் பிடிவாதம் காட்டினர்.
- பிரச்னைகளைப் பன்முகப் பரிமாணங்களுடன் பார்க்கும் பண்பும், விமர்சனங்களுக்காகப் பங்களிப்புகளைப் புறக்கணித்து விடாத நடுநிலைமையும், மகாத்மாவிடமும் பெரியாரிடமும் இருந்தன.
நன்றி: தினமணி (14 – 09 – 2022)