TNPSC Thervupettagam

மகிழ்ச்சி முதலாளித்துவத்தின் வாக்குறுதியா?

December 26 , 2019 1844 days 813 0
  • நமது விருப்பாற்றலில் விழும் முட்டுக்கட்டையே துன்பம். ஜெர்மானியரான ஷோபான்ஹெய்ர் இவ்வாறு சொன்னார். புத்தருக்கு ஏறக்குறைய 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு துன்பத்தை மனித வாழ்வின் ஒரே யதார்த்தமாக, பிரதானக் குறிக்கோளாக முன்வைத்தவர் அவர் ஒருவரே. ஆனால், புத்தர் துன்பத்தைச் சிந்தித்து அதிலிருந்து விடுபடக்கூடிய வழியையும் பரிந்துரைத்தார். ஷோபன்ஹெய்ர் யதார்த்தவாதி, எந்த ஒரு வழியையும் பரிந்துரைக்கவில்லை.
  • அவருடைய நாகார்ஜுனரான நீட்ஷே, இன்பம் என்பது வலியின் விலகல் என்றார். அதாவது, துன்பமும் அதனால் உண்டாகும் வலியும் சற்றே விலகுவதே இன்பம். எனவே இன்பமும், அதன் காரணமாக உண்டாகும் மகிழ்ச்சியும் தற்காலிகமானவை.
  • மகிழ்ச்சி ஒரு மனோநிலை என்றால் இன்பம் அந்த மனோநிலையை அடையும் வழிமுறை. இரண்டுக்கும் இடையே வேறுபாடு உண்டு. மகிழ்ச்சி, இன்பம் இவ்விரண்டில் மகிழ்ச்சியே லட்சிய வடிவம் பெறுகிறது. அதைப் போன்றே துன்பமும் அதனால் உண்டாகும் துக்கமும். இன்பத்தின் வழியாக மட்டுமல்ல;
  • துன்பத்தைத் தவிர்ப்பதன் வழியாகவும் மகிழ்ச்சியை அடையலாம். ஆக, மகிழ்ச்சிக்கு இரண்டு பாதைகள் உண்டு. ஆனால், இரண்டு பாதைகளும் துன்பத்தின் இருள் படர்ந்தும், இன்பத்தின் கிளைகளின் வழியே நிலத்தில் படும் ஒளிப்புள்ளிகளாலும் நிறைந்திருக்கின்றன.

வாழ்வின் குறிக்கோள்

  • இந்தியத் தத்துவங்கள் எவையுமே மகிழ்ச்சியை வாழ்வின் குறிக்கோளாக முன்வைத்தவை அல்ல. நிலையாமை இந்தியச் சிந்தனையின் அச்சாகவும், தத்துவச் சிந்தனைகள் அச்சில் இணையும் ஆரங்களாகவுமே இருக்கின்றன. நமது துக்கம் எவ்வளவு நிலையற்றதோ அதைப் போலவேதான் மகிழ்ச்சியும் நிலையற்றது. எனவேதான், எந்தத் தத்துவமும் மகிழ்ச்சியை லட்சியமாக முன்வைக்கவில்லை. எல்லா உயிரும் இன்புற்றிருப்பது என்பது ஓர் உன்னதமான கற்பனை.
  • இந்தியச் சமூக அமைப்பு ஒன்றையொன்று சார்ந்து, அதேசமயம் கலவாமல் இருந்த பிரிவுகளால் ஆன ஒன்று. அவ்வாறு நன்கு பிரிக்கப்பட்ட, அதேசமயம் பிணைந்திருந்த சமூக அமைப்பே நிரந்தரமானதென்று அது நம்பியது. ஒவ்வொரு பிரிவுக்கும் மேற்சொன்ன நான்கு பகுப்புகளை வேறுவேறு நிறங்களில் பகிர்ந்தளித்தது, மறுத்தது. மீறுவதற்குக் கடினமான இந்தச் சமூக அமைப்பு மனித வாழ்வின் குறிக்கோளைக் குறித்த கவலையின்றி ஏற்கெனவே தங்கள் வாழ்வொழுங்கில் பதியமாகிவிட்ட தர்மங்களைப் பேணுவதையே அதன் லட்சியமாக்கியது.
  • மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் யாராவது இந்தியக் கிராமங்களில் வசிக்கும் ஒருவரைப் பார்த்து வாழ்வின் குறிக்கோள் என்னவென்று கேட்டிருந்தால் விதவிதமான பதில்களை அவர் அளித்திருக்கும் வாய்ப்பே அதிகம். ஆனால், மகிழ்ச்சியே வாழ்வின் குறிக்கோள் என்று சொல்லியிருக்க மாட்டார். இன்று, வாக்காளர் பட்டியலில் உள்ள யாரைக் கேட்டாலும் வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சியே என்பர்.

அது ஒரு விடுதலை நிலை

  • ஒன்றை ஏற்றுக்கொள்வதன் வழியாக நாம் அதைக் கடக்க விழைகிறோம். ஒன்றை எதிர்ப்பதற்கும் அதற்கு எதிராக எதிர்வினையாற்றுவதற்கும் முதலில் நாம் அதன் இருப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குத் துன்பமே இல்லை என்று மறுதலிப்பதன் வழியாக மகிழ்ச்சியை அடைய முடியாது. மாறாக, நாம் துன்பத்தை ஏற்பதன் வழியாகத்தான் அதைக் கடந்துபோகும் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம்.
  • அதன் மூலம் நமது துன்பம் மேலும் பெருகும் என்றாலும், துன்பத்தின் முடிவு துன்பமே ஆனாலும் நமது முயற்சிகளின் காரணமாக அது கொஞ்சம் விலகுகிறது. இந்த விலகலே நீட்ஷே சொன்னது. மனித வாழ்வு முடிவற்றதாகவும் வலியில்லாமலும் இருக்குமானால் யாருடைய தலையிலும் இந்த உலகம் ஏன் இவ்வாறு இருக்கிறது, இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது போன்ற கேள்விகளே நுழைந்திருக்காது என்கிறார் ஷோபன்ஹெய்ர்.
  • வலியும் துன்பமுமே தத்துவங்களை, சிந்தனைகளை, மதங்களை உருவாக்கியிருக்கின்றன. மகிழ்ச்சி என்பது ஒரு விடுதலை நிலை என்பதால் அந்த நிலையிலிருந்து ஒன்றுமே தோன்றாது. அந்த நிலை புதிதாக எதையுமே உருவாக்காது. அப்படி உருவாக்க முனைந்தால் அது துன்பத்துக்கே வழிவகுக்கும் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது.
  • மனிதர்களால் நிரந்தரமாக லட்சியார்த்தத் தளத்திலேயே வாழ முடியாது. வாழ்வுக்கே அப்படியொரு குறிக்கோள் இல்லை. ஆகவே, லட்சிய நிலைகளை விவாதித்து அதை ஒரு சமூக முறைமையாக மாற்றுவதற்கான முயற்சியாகவே பல்வேறு தத்துவங்கள் உருவாகின. எல்லாத் தத்துவங்களும் மகிழ்ச்சியை விவாதிக்கின்றனவே அன்றி, அவற்றை லட்சியமாக்கவில்லை.
  • ஆனால், நம் காலத்தில் நிலைபெற்றுவிட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதன் எலும்புகளைச் சுற்றிக் கட்டப்பட்ட சமூகங்களின் அனைத்துத் தசைகளும் மகிழ்ச்சி எனும் நிரந்தரக் கற்பனையின் அணுக்களால் நிரம்பியுள்ளன. அவை துன்பத்திலும் துன்பமான வறுமையிலிருந்து உலகை விடுவிப்பது மட்டுமல்ல;
  • அனைத்தையும் உழைப்போடு பிணைத்து அதற்கு ஒரு உன்னத வடிவை வழங்குகின்றன. உழைப்பு துன்பமா என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மத்தியக் காலத்தில் விவசாயி ஒருவரிடம், “உழைத்தால் என்னவாக முடியும்?” என்று கேட்டிருந்தால் அவர், “எவ்வளவு உழைத்தாலும் நான் விவசாயியாகவே தொடர முடியும்” என்று சொல்லியிருப்பார். ஆனால், முதலாளித்துவம் நாம் உழைத்தால் நமது நிலையிலிருந்து வேறொன்றாக மாறிவிட முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

பொய்த்துப்போகும் பொருளியல் விதிகள்

  • முதலாளித்துவம் உழைப்பை மூலதனத்துக்கான வழியாகப் பார்க்கிறது. அது உற்பத்திசெய்து குவித்து வைத்திருக்கும் பண்டங்களை மகிழ்ச்சியின் சிறு துண்டுகளாகக் கண்ணாடித் தடுப்புகளுக்கு உள்ளே காட்சிக்கு வைத்திருக்கிறது. ஒரு பண்டத்தை வாங்கி நுகர்வது என்பது இன்றைக்குத் தேவையின் பொருட்டு மட்டுமே நிகழ்வதல்ல.
  • இன்று ஒரு பண்டம் தேவையால் மட்டுமே மதிப்பைப் பெறுவதில்லை. அதற்கென உருவாகிவிட்ட மதிப்பும்கூடத் தேவையை உருவாக்குகிறது.
  • எந்த ஒரு அமைப்பும் நிரந்தரத்துவத்தை அடையவே முனையும். முதலாளித்துவமும் அப்படியொரு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த உற்பத்தி முறை நமது வாழ்வின், சூழலின் மீதான நெருக்கடியாக மாறியிருக்கும்போதிலும் நம்மை இன்னுமே பண்டங்களின் பிம்ப மயக்கத்தில் ஆழ்த்துவதில் தோல்வியடைந்திருக்கவில்லை.
  • தொழில்நுட்ப வளர்ச்சியைத் தனது வெற்றிக்கான கருவியாகக் கையாளும் முதலாளித்துவம் முந்தைய சமூக அமைப்புகளின் வழியாக உருவான லட்சிய நிலைகளைத் தகர்த்து, வாழ்வை உள்ளீடற்றுப்போகச் செய்வதன் வழியாக உருவாகும் வெற்றிடத்தைப் பண்டங்களால் நிறைக்கிறது.
  • நான் எனது வீட்டில் இருக்கும் கடவுள்களை அன்றாடம் வணங்கி ஒரு ஐபோனை வாங்கும் நிலைக்கு எனது வாழ்வு உயர வேண்டுமென்று வேண்டுகிறேன். பண்டங்களை லட்சியமாகக் கொண்ட எனது வாழ்வுக்கு அருள் செய்யவில்லை என்றால் கடவுளின் பயன்தான் என்ன?

முதலாளித்துவ சமரசம்

  • நம் காலத்தைய ஆன்மிகம் முதலாளித்துவத்தோடு சமரசம் செய்துகொண்டது. அதுவும் மகிழ்ச்சியைக் கற்பிக்கும், அவ்வாறு கற்பிப்பதை விற்கும் ஒரு துறையாக உருமாறியிருக்கிறது. நமது நவீன குருமார்களில் யாராவது வாழ்வே துக்ககரமானது என்றும், துன்பத்தையே வாழ்வின் இயல்பான நிலை என்றோ, அதுவே குறிக்கோளென்றோ ஷோபன்ஹெய்ரைப் போல போதிப்பவராக இருந்தால், நிச்சயமாக அவர்கள் பயணிக்கும் சொகுசுக் கார்களின் சக்கரங்களைக்கூட வாங்கும் சக்தியற்றுப்போகும் வாய்ப்பே அதிகம்.
  • உங்களால் மகிழ்ச்சியைப் பண்டமாக விற்க முடிந்தால் முதலாளித்துவப் பொன்னுலகத்தில் நீங்களே வழிபடக்கூடிய இடத்தை அடையத் தகுதியானவர்.
  • வாழ்வின் லட்சியமே மகிழ்ச்சி என்றும், கொண்டாட்டமே வாழ்க்கை என்றும் கருதுகோள்கள் உருவானது எப்போது? 1960-களுக்குப் பின்னான உலகமயமாக்கலுக்கும், நுகர்வுக் கலாச்சாரத்துக்கும் பெரிய அளவில் பங்கு உண்டு. தேவைக்கு நுகர்வு எனும் அறிவுரை எல்லாம் வார இறுதியில் உணவகங்களில் குவியும் கைதுடைக்கும் காகிதங்களோடு சேர்த்துக் கசக்கி எறியப்படுகிறது.
  • மகிழ்ச்சியைத் தனது வாக்குறுதியாகக் கொண்டிருக்காவிட்டால் முதலாளித்துவத்தால் நீடிக்க முடியுமா? இத்தகைய ஆன்மிகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், புத்தரும் மார்க்ஸும் சொன்னதையே தனது உற்பத்திப் பொருள் செய்கிறது என்றார்.
  • முதலாளித்துவ மதத்தில் பாகனியக் கடவுள்களின் இடத்தை எட்டிவிட்ட பண்டங்களின் நகரக் கோயில்களில் முன்வரிசையில் நின்று அவற்றைத் தொழுதலே நமது மகிழ்ச்சிக்கான எளிய மார்க்கம். பண்டங்களை அடைய விழையும் நமது விருப்பத்துக்கு எதிராக விழும் அனைத்துத் தடைகளும் நமக்குத் துன்பத்தை அளிக்கின்றன.
  • பழைய கடவுள்களே தயவுசெய்து எனது வாங்கும் சக்தியை அதிகரியுங்கள். எனது மகிழ்ச்சி மட்டுமல்ல; எனது நாட்டின் முன்னேற்றமும் அதிலேதான் அடங்கியுள்ளது என அரசும்கூட நம்புகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (26-12-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்