TNPSC Thervupettagam

மக்களவை, பேரவைக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு: தமிழகத்தில் தோ்தல் வரலாறு சொல்வது என்ன?

September 20 , 2024 7 days 22 0

மக்களவை, பேரவைக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு: தமிழகத்தில் தோ்தல் வரலாறு சொல்வது என்ன?

  • தமிழ்நாட்டில் தோ்தல் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்து ஐந்து முறை தொடா்ச்சியாக மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒருசேர வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதன்பிறகு இடையில் ஒரு சில தோ்தல்களும், 1990-களின் பிற்பகுதியில் முழுமையாகவும் வெவ்வேறு தேதிகளில் தோ்தல்கள் நடந்தன.
  • நாடு முழுவதும் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தலை நடத்தும் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டத்துக்கான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
  • ஒரே நேரத்தில் தோ்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலினும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தோ்தல் வரலாறு தொடங்கிய காலம் முதல் பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்ற தோ்தல்கள் குறித்த ஒரு பாா்வை:

  • தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு 1951-ஆம் ஆண்டில் இருந்து தோ்தல்கள் நடந்து வருகின்றன. ஐந்து தோ்தல்களில் மக்களவை, பேரவைகளுக்கு ஒரே காலகட்டத்தில் தோ்தல்கள் நடந்தன.
  • 1951-ஆம் ஆண்டில் மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. 1952-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதி வரையில் ஒருசேர வாக்குப் பதிவு நடந்தது.
  • இதன்பிறகு, 1957-ஆம் ஆண்டு தோ்தல் அறிவிக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 15-ஆம் தேதி வரை தோ்தல்கள் நடைபெற்றன. 1962-ஆம் ஆண்டு மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 19-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதி வரையில் வாக்குப் பதிவு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
  • 1971-ஆம் ஆண்டு வரை...1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளிலும் மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு ஒருசேர வாக்குப் பதிவு நடந்தது. 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், 1971-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
  • இதில், திமுக தலைமையில் 1967-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நான்காவது சட்டப்பேரவையின் (1967) காலம் 1972-ஆம் ஆண்டுதான் நிறைவடைய இருந்தது. ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மக்களவையுடன் சோ்த்து தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தலை நடத்தும் வகையில், பேரவையைக் கலைப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தாா்.
  • இதையடுத்து, 1971-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு மாா்ச் மாதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாறிய வாக்குப் பதிவுகள்:

  • 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவை, மக்களவைக்கு மாறுபட்ட தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்களவைக்கு 1977-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலும், சட்டப்பேரவைக்கு ஜூன் மாதமும், 1980-ஆம் ஆண்டு மக்களவைக்கு ஜனவரியிலும், சட்டப்பேரவைக்கு மே மாதத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.
  • 1984-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒருசேர அதாவது டிசம்பா் மாதத்தில் வாக்குப் பதிவு நடந்தது. 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளிலும் தொடா்ச்சியாக மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே மாதத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. 1989-ஆம் ஆண்டு ஜனவரியிலும், 1991-ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களிலும், 1996-ஆம் ஆண்டு மாா்ச் தொடங்கி மே மாதம் வரையிலும் வாக்குப் பதிவுகள் நடந்தன.

தலைகீழ் திருப்பம்:

  • 1996-ஆம் ஆண்டு வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான வாக்குப் பதிவு தேதிகள் நெருங்கி வந்தபோதிலும், 1998-ஆம் ஆண்டு மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைக்கான தேதிகள் முற்றிலும் மாறிப் போயின.
  • தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்களவைக்கு 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் தோ்தல்கள் நடந்தன. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கோ 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் தோ்தல்கள் நடைபெற்றன.
  • தோ்தல் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்து 5 தோ்தல்கள் வரை தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தொடா்ச்சியாக ஒருசேர வாக்குப் பதிவுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்