TNPSC Thervupettagam

மக்களவை மறுவரையறை: சிக்கல்களும் தீர்வுகளும்

March 5 , 2025 3 hrs 0 min 26 0

மக்களவை மறுவரையறை: சிக்கல்களும் தீர்வுகளும்

  • “மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு தமிழகத்துக்கு ஆபத்தாக முடியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்கிற வேண்டுகோளோடு இன்று (5.3.2025) அனைத்துக் கட்சிகளையும் கூட்டுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது ஒரு கற்பனை பயம், அச்சப்படத் தேவையில்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன.
  • மக்களவை மறுசீரமைப்பு தமிழகத்துக்குக் கிடைத்துவரும் அதிகாரப் பகிர்வைக் குறைத்துவிடும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதே ‘கருத்துப் பேழை’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன் (’தமிழகம் ஏன் தண்டிக்கப்படுகிறது?’, 23.9.2021). அப்போதைக் காட்டிலும் இப்போது அபாயம் அதிகரித்துவிட்டது. எப்படி?

தொடரும் தாமதம்:

  • பத்தாண்​டுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பு 2021இல் நடந்திருக்க வேண்டும். கரோனாவால் அது தள்ளிப்​போனது. அந்தக் கட்டுரையை எழுதி​ய போது கணக்கெடுப்பு 2022இல் நடந்து​விடும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு நாளதுவரை நடக்க​வில்லை. எப்போது நடக்கும் என்கிற தெளிவுமில்லை. 2002ஆம் ஆண்டில் நிறைவேற்​றப்பட்ட அரசியல் சட்டத் திருத்​தத்​தின்படி 2026க்குப் பிறகு நடத்தப்​படும் மக்கள்​தொகைக் கணக்கெடுப்பின் அடிப்​படையில் தொகுதிகள் சீரமைக்​கப்பட வேண்டும்.
  • 2021இல் (அல்லது 2022இல்) மக்கள்தொகை கணக்கிடப்​பட்​டிருந்​தால், அடுத்த கணக்கீடு 2031இல் (அல்லது 2032இல்) நடந்திருக்​கும். மறுசீரமைப்பு என்னும் கத்தி அப்போதுதான் கீழிறங்கி இருக்​கும். ஆனால் 2021 மக்கள்​தொகைக் கணக்கீட்டை மத்திய அரசு தாமதித்து​வரு​வ​தால், அதை 2026இல் நடத்தி, அதற்கடுத்த ஆண்டே மறுவரையறை செய்யக்​கூடும் என்கிற அச்சம் இப்போது ஏற்பட்​டிருக்​கிறது.

என்ன ஆபத்து?

  • நமது அரசமைப்புச் சட்டத்தின் 81ஆவது பிரிவின்படி ஒவ்வொரு மாநிலமும் அதனதன் மக்கள்​தொகையின் வீதத்தில் நாடாளுமன்ற இடங்களைப் பெறும்; இந்த இடங்கள் பத்தாண்​டுக்கு ஒரு முறை வரையறை செய்யப்​படும். அவ்விதமே 1951, 1961, 1971ஆம் ஆண்டு​களில் நடந்த மக்கள்​தொகைக் கணக்கெடுப்பின் அடிப்​படையில் மறுவரையறை நடந்தது. ஒவ்வொரு முறையும் மக்கள்தொகை கூடியது, நாடாளுமன்ற இடங்களும் கூடின; ஆனால், தமிழகத்தின் பிரதி​நி​தித்துவம் கூடவில்லை.
  • எழுபதுகளுக்குப் பிறகு மக்கள்​தொகைக் கட்டுப்பாடு வேகமெடுத்தது. இதைத் தென் மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தின. மக்களவையில் இந்த மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் குறைந்து​விடக் கூடாது என்பதற்காக இந்திரா காந்தியின் அரசு, 1976இல் நாடாளுமன்ற உறுப்​பினர்​களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டு​களுக்கு (அதாவது 2001 வரை) மாற்றப்​ப​டாமல் இருக்​குமென்று ஓர் அரசியல் சட்டத் திருத்​தத்தைக் கொணர்ந்தது. 2002இல் வாஜ்பாய் அரசும் இன்னொரு திருத்​தத்தின் வாயிலாக இந்தக் கால அவகாசத்தை மேலும் 25 ஆண்டு​களுக்கு (2026 வரை) நீட்டித்தது. இப்போது 2026இல் மறுவரையறை நடந்தால் என்ன ஆகும்?

மறுவரையறை - இரண்டு முறைகள்:

  • கார்னெகி அறக்கட்டளை (CEIP) என்கிற அமைப்பு, 2026 மக்கள்​தொகையை மதிப்​பிட்டு அதன் அடிப்​படையில் நாடாளுமன்ற இடங்களைக் கணக்கிட்​டிருக்​கிறது. இதன்படி தமிழகம் எட்டு இடங்களை இழக்கும். ஐந்து தென் மாநிலங்​களும் சேர்ந்து 26 இடங்களை இழக்கும். உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்​தான், மத்தியப் பிரதேசம் ஆகிய இந்தி பேசும் நான்கு மாநிலங்கள் மட்டும் 31 இடங்களைக் கூடுதலாகப் பெறும். தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் 5% குறையும். நான்கு வட மாநிலங்​களின் விகிதம் 6% கூடும்.
  • இன்னொரு முறை, எந்த மாநிலத்​துக்கும் இப்போதுள்ள இடங்களைக் குறைக்​காமல் சீரமைப்பது. இதன்படி மாக்மில்லன் என்னும் ஆய்வாளர், குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளத்தின் இடங்களை (20) நிலை நிறுத்​திக்​கொண்டு, அதனடிப்​படையில் மற்ற மாநிலங்​களின் இடங்களை மதிப்​பிட்​டிருக்​கிறார். இதன்படி தமிழகம் 49 இடங்களைப் பெறும் (இப்போது 39).
  • உத்தரப் பிரதேசத்தின் இடங்களோ 143ஆக உயரும் (இப்போது 80). அவையின் மொத்த இடங்கள் 848ஆக உயரும் (இப்போது 543). புதிய நாடாளு​மன்றம் 888 இடங்களோடு கட்டப்​படிருப்பது எதேச்​சை​யானதல்ல! இதன்படி, தென் மாநில இருக்கைகள் 164 ஆகும் (இப்போது 129). மேற்குறிப்​பிட்ட நான்கு வட மாநில இருக்கைகள் மட்டும் 324 ஆகும் (இப்போது 174). இதிலும் தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்துவம் 5% குறையும். இந்த நான்கு வட மாநிலங்​களின் விகிதம் 6% கூடும்.

இரண்டு ஆலோசனைகள்:

  • இவ்விரண்டு முறைகளில் எவ்விதம் மறுவரையறை செய்யப்​பட்​டாலும் அது தென் மாநிலங்​களின் பிரதி​நி​தித்து​வத்தைக் குறைக்​கும். ஆய்வாளர்கள் சில ஆலோசனைகளை முன்வைக்​கிறார்கள். முதலாவது அமெரிக்க மாடல். அமெரிக்​காவில் இரண்டு அவைகள் உள்ளன. கீழவையில் ஒவ்வொரு மாநிலத்​துக்கும் மக்கள்​தொகையின் விகிதத்தில் இடங்கள் இருக்​கும்.
  • மேலவையில் எல்லா மாநிலங்​களுக்​கும், அவற்றின் மக்கள்தொகை கூடுதலா​னாலும் குறைவா​னாலும், தலா இரண்டு இடங்கள் இருக்​கும். இதைப் பின்பற்​றலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். இந்த மாதிரியில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. இதிலும் கீழவையில் தென் மாநிலங்கள் இடங்களை இழக்கும். தவிர, அமெரிக்​காவில் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்​கள்தான் நகர்மய​மானவை, வருவாயும் வளர்ச்சியும் அதிகமுள்ளவை. இந்தியாவில் இது நேரெதிர். ஆகவே இந்த மாதிரி நமக்குப் பொருந்தாது.
  • இன்னொரு ஆலோசனை, கருவள விகிதம் தொடர்​பானது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஈன்று புறந்​தரும் பிள்ளை​களின் சராசரி எண்ணிக்கை கருவள விகிதம் (Total Fertility Rate, TFR) எனப்படு​கிறது. 1971இல் இந்தியாவின் கருவள விகிதம் 5.5ஆக இருந்தது. அதாவது, அப்போது ஓர் இந்தியப் பெண்மணி சராசரியாக 5.5 குழந்தை​களைப் பெற்றார். இது 2011இல் 2.54ஆகக் குறைந்தது. இந்த விகிதம் 2.1ஆக இருந்​தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படும். அந்த விகிதத்தில் பிள்ளைப்பேறு நிகழ்ந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் நிலையாக இருக்​கும்.
  • இந்தியாவின் கருவள விகிதம் குறைந்து​வருவது நல்ல செய்தி. ஆனால், இது எல்லா மாநிலங்​களிலும் ஒரே மாதிரியாக இல்லை. 2011இல் மேற்குறிப்​பிட்ட நான்கு மாநிலங்கள் உள்ளிட்ட ஏழு வட மாநிலங்​களில் இது பதிலீட்டு விகிதத்தைவிட அதிகம் (2.6 முதல் 3.2). தென் மாநிலங்​களில் இந்த விகிதம் மிகக் குறைவு (1.7 முதல் 1.8).
  • இதையொட்டிச் சில ஆய்வாளர்கள் சொல்லும் ஆலோசனை இது: இந்தியாவின் மக்கள் தொகை நிலைபெறும் வரை இப்போதுள்ள நாடாளுமன்ற இடங்களைப் பின்பற்​றலாம். அதன் பிறகு, மக்கள்தொகை அடிப்​படையில் இடங்களைப் பிரிக்​கலாம். இது பிரச்சினையை ஒத்திப்​போடுவது மட்டுமல்ல, அப்படிப் பின்னாளில் மறுவரையறை செய்யும்போது தென் மாநிலங்​களின் மக்கள்தொகை மேலும் குறைந்​திருக்​கும், வட மாநிலங்​களின் மக்கள்தொகை மேலும் கூடியிருக்​கும். ஆகவே இந்த ஆலோசனையும் நமக்கு உகந்ததன்று.

என்ன செய்ய​லாம்?

  • நாம் ஏன் நாடாளு​மன்​றத்தில் நமது பிரதி​நி​தித்துவம் குறையக் கூடாது என்று விரும்​பு​கிறோம்? ஏனெனில், நமது அரசமைப்பில் மத்திய அரசிடம்தான் அதிகாரமும் நிதியும் குவிந்து கிடக்​கின்றன. அதைப் பரவலாக்கி மாநிலங்​களுக்கு வழங்கி​விட்டால் இந்தக் கோரிக்கையின் அழுத்தம் குறையும். பல மேலை நாடுகளில் பாதுகாப்பு, அயலுறவு, ரயில்வே, பேரிடர் நிவாரணம், மானியங்கள் முதலானவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்​பாட்டில் இருக்​கின்றன.
  • ஹாங்காங் இன்னொரு எடுத்​துக்​காட்டு. அது சீனாவின் மாகாணங்​களில் ஒன்று, ஆனால் தன்னாட்​சி​யுடன் இயங்கு​கிறது. நாணயம், குடியுரிமை, நீதித் துறை, வரி வசூல் முதலானவற்றை ஹாங்காங் தனியாகக் கையாள்​கிறது. இந்த அயல்நாட்டு மாதிரி​களைப் பரிசீலித்து, இந்தியா தனக்கு இசைவானவற்றை எடுத்​துக்​கொள்​ளலாம்.
  • மாநிலங்கள் தன்னாட்சி பெறுகிறவரை, நாடாளு​மன்றம் இப்போதைய இடப்பகிர்வின் அடிப்​படை​யிலேயே இயங்க வேண்டும். அதுதான் சிறப்​பாகச் செயல்​பட்டு​வரும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்​களுக்கு அளிக்​கப்​படும் நீதியாக இருக்​கும். அதற்காக அரசியல் சட்டம் திருத்​தப்பட வேண்டும். தென் மாநிலங்கள் ஒருங்​கிணைய வேண்டும் என்கிற குரல்கள் எழுந்​திருப்பதன் பின்னணி இதுதான்!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்