- மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டுப் பலர் வெற்றிபெற்றுள்ளனர். முதல் தேர்தலுக்குப் பின் 1952இல் அமைந்த மக்களவையில் ஆளும்கட்சியான காங்கிரஸுக்கு அடுத்தபடியாக சுயேச்சை உறுப்பினர்களின் எண்ணிக்கையே இரண்டாம் இடத்தில் இருந்தது. 36 சுயேச்சை உறுப்பினர்கள் 1951-52 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றிருந்தனர்.
- முதல் ஐந்து தேர்தல்களில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். நெருக்கடிநிலைக் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற 1977 மக்களவைத் தேர்தலில் ஏழு சுயேச்சைகள் மட்டுமே வெற்றிபெற்றனர். 1980 தேர்தலில் சுயேச்சைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து நான்கு ஆனது.
- 1991 தேர்தலில் ஒரே ஒரு சுயேச்சை மட்டுமே வெற்றிபெற்றார். 1996 தேர்தலில் 11 பேர் வென்றதன் மூலம் சுயேச்சைகளின் எண்ணிக்கை நீண்ட காலத்துக்குப் பிறகு இரட்டை இலக்கத்தைத் தொட்டது. 1998, 1999, 2004 மக்களவைத் தேர்தல்களில் ஒற்றை இலக்கத்திலேயே சுயேச்சைகள் வெற்றிபெற்றனர்.
- 2009 தேர்தலில் 11 சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். நரேந்திர மோடியை முதல் முறையாகப் பிரதமராக்கிய 2014 தேர்தலில் வென்ற சுயேச்சைகளின் எண்ணிக்கை மூன்றாகச் சரிந்தது. 2019 தேர்தலில் நான்கு சுயேச்சைகள் வென்றனர்.
- சுயேச்சை மக்களவை உறுப்பினர்களை மாநிலவாரியாகப் பிரித்தால், மக்கள்தொகையில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் (12 மக்களவைகளில் 28 பேர்). ராஜஸ்தானிலிருந்து 19 சுயேச்சைகள் மக்களவைக்குச் சென்றுள்ளனர்.
- அம்மாநிலத்தின் பிகானேர் தொகுதியில் முதல் ஐந்து மக்களவைத் தேர்தல்களில் (1952-1971) சுயேச்சையாகப் போட்டியிட்ட உள்ளூர் அரச பரம்பரையைச் சேர்ந்த கர்ணீ சிங் வெற்றிபெற்றார். தமிழ்நாட்டிலிருந்து இதுவரை சுயேச்சைகளாகப் போட்டியிட்டவர்களில் எட்டுப் பேர் மட்டுமே வென்றுள்ளனர்.
- மக்களவைக்கு அதிக முறை சுயேச்சை உறுப்பினரை அனுப்பியுள்ள தொகுதி அசாமின் கோக்ரஜார். இதுவரை எட்டுப் பேர் இங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றுள்ளனர்.
- தேசிய, மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவை அறிவிக்கும் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் தேர்தல்களில் வாக்காளர்களைக் கவர்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
- இத்தகைய கட்சிகளுடன் தனிநபர்கள் போட்டி போடுவது எளிதல்ல. தேர்தல் செலவுகள் அளவுக்கு மீறிச் சென்றுகொண்டிருப்பதும் கட்சி பலம் இல்லாத சுயேச்சைகளுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. இது போன்ற காரணங்களால் சுயேச்சைகள் வெற்றிபெறுவது அரிதாகிவருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2024)