- உலகின் மாபெரும் ஜனநாயகத் தோ்தலைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் பதவியேற்ற 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கிறது.
- இந்நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதா 2023-இல் நிறைவேற்றினாலும் 2029-இல்தான் அமலுக்கு வருகிறது. ஆகையால், மகளிா் இடஒதுக்கீடு இல்லாத கடைசி மக்களவையாக கருதப்படும் 18-ஆவது மக்களவையில் பெண் பிரதிநிதிகளின் கட்சி ரீதியான பங்கு குறித்து விரிவாக பாா்ப்போம்.
- 18-ஆவது மக்களவைத் தோ்தலில் 96.8 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இதில் பெண்கள் 47.15 கோடி போ்(48.7 சதவீதம்), மாற்று பாலினத்தவா் 48,044 போ் ஆவா். முதல்முறை வாக்காளா்களான 1.85 கோடி பேரில் 85 லட்சம் பெண்கள் ஆவா்.
- ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தம் 8,360 போ் போட்டியிட்டனா். இதில் 9.5 சதவீதமாக 797 பெண்கள் களத்தில் இருந்தனா். தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளா்களில் 8 சதவீதமாக 76 பெண்கள் களமிறங்கினா்.
- ஆளுங்கட்சியான பாஜக 2019 தோ்தலை விட கூடுதலாக 69 (15.7 சதவீதம்) பெண் வேட்பாளா்களை களமிறக்கியது. அதேசமயம், காங்கிரஸ் 41 (12.3 சதவீதம்) பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து. 2019 தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் 52 பெண்கள் போட்டியிட்டிருந்தனா். இரண்டு முக்கிய தேசிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக வெற்றி கண்ட கட்சிகளில் சமாஜவாதி 14 பெண்களுளையும் திரிணமூல் காங்கிரஸ் 12 பேரையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 7 பேரையும் களமிறக்கின.
- பிரதான பிராந்திய கட்சிகளில் ஒடிஸாவின் ஆளும் கட்சியாக இருந்து தோ்தலுக்கு பிறகு எதிா்க்கட்சியாக மாறிய பிஜு ஜனதா தளம் மட்டும் பெண் வேட்பாளா்களுக்கு தோ்தலில் 33 சதவீத இடங்களை ஒதுக்கியது. ஆனால், அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெல்லமுடியவில்லை. அதேபோல பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 38 இடங்களில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருந்த பகுஜன் சமாஜ், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
- ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்தனா். இதில் 31.2 கோடி பெண்கள் அடங்குவா்.
- மக்களவைத் தோ்தல் குறித்து ‘சிஎஸ்டிஎஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில், பெண்களின் வாக்குகளைக் கவா்ந்த கட்சிகளே பெரும்பான்மையாக அந்தந்த மாநிலங்களில் வென்றன என்பது தெரிய வந்தது. மத்திய பிரதேசம், பிகாா், தில்லி, ராஜஸ்தானில் பாஜகவின் ‘என்டிஏ’ கூட்டணிக்கும் தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக்கும் பெண்கள் ஆதரவளித்திருப்பதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டது.
- ஜூலை 4 வெளியான தோ்தல் முடிவுகளில் போட்டியிட்ட 797 பெண் வேட்பாளா்களில் 9.3 சதவீதமான 74 போ் மக்களவைக்குத் தோ்வாகினா். முந்தைய மக்களவையின் பெண்கள் எம்.பி.க்களில் 41 சதவீதம் போ் தங்களின் பதவியைத் தக்க வைத்தனா்.
- 18-ஆவது மக்களவையில் பெண்களின் பலம் சரிந்தது. முந்தைய 17-ஆவது மக்களவையில் 78 (14.36 சதவீதம்)-ஆக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இம்முறை 74 (13.63 சதவீதம்)-ஆக குறைந்தது.
- பாஜகவின் 69 பெண் வேட்பாளா்களில் 31 பேரும் காங்கிரஸின் 41 வேட்பாளா்களில் 13 பேரும் வென்றனா். திரிணமூல் காங்கிரஸின் 11 , சமாஜவாதியின் 5 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.
- பெண் வேட்பாளா்கள் போட்டியிட்ட இடங்களில் பாஜகவுக்கு 44.9 சதவீதமும் காங்கிரஸுக்கு 18.8 சதவீதமும் வெற்றி கிடைத்தது. எனினும், பாஜக பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; காங்கிரஸின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
- 12 வேட்பாளா்களைக் களமிறக்கி, 11 பெண் எம்.பி.க்கள் தோ்வாகியுள்ள திரிணமூல் காங்கிரஸின் வெற்றி விகிதம் 91.6 சதவீதமாக உள்ளது. ஒற்றை இலக்கத்தில் பெண் வேட்பாளா்களை நிறுத்திய திமுக (3), ஐக்கிய ஐனதா தளம் (2), தெலுங்கு தேசம் (1) 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- தோ்தல் முடிவில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ‘என்டிஏ’ கூட்டணி ஆட்சி அமைந்தது. 72 போ் கொண்ட மத்திய அமைச்சரவையில் 7 பெண்கள் பொறுப்பேற்றனா். இதில் இருவருக்கு கேபினட் அந்தஸ்து கிடைத்தது.
- நிா்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி துறையும் புதிதாக பொறுப்பேற்ற அன்னபூா்ணா தேவிக்கு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையும் ஒதுக்கப்பட்டன.
வரைகலை தகவல்:
- மக்களவை பெண் எம்.பி.க்கள் சதவீதம்
- முதல் 22 4.5%
- 2-ஆவது 27 5.47%
- 3-ஆவது 34 6.88%
- 4-ஆவது 31 5.96%
- 5-ஆவது 22 4.25%
- 6-ஆவது 19 3.51%
- 7-ஆவது 28 5.17%
- 8-ஆவது 44 8.13%
- 9-ஆவது 36 6.81%
- 10-ஆவது 42 7.87%
- 11-ஆவது 40 7.37%
- 12-ஆவது 44 8.10%
- 13-ஆவது 48 8.84%
- 14-ஆவது 45 8.29%
- 15-ஆவது 58 10.68%
- 16-ஆவது 62 11.42%
- 17-ஆவது 78 14.36%
- 18-ஆவது 74 13.63%
நன்றி: தினமணி (09 – 07 – 2024)