TNPSC Thervupettagam

மக்களாட்சிக்கான கல்வி இயக்கம் எப்போது?

December 31 , 2019 1795 days 896 0
  • கடந்த 20 ஆண்டுகளில்தான் உலக வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மக்களாட்சிக்குள் வந்து செயல்பட ஆரம்பித்துள்ளன. எனவேதான், ஒட்டுமொத்தமாக மக்களாட்சி நாடுகள் என்று கூறாமல், மக்களாட்சி நாடுகள், மக்களாட்சிப்படுத்தும் நாடுகள் என்று இரண்டாகப் பகுத்து அந்த ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • குறிப்பாக, இந்த ஆய்வுகள் அனைத்தும் குடிமக்களின் மக்களாட்சி பற்றிய புரிதல் குறித்தும், மக்களாட்சியைப் புரிந்து பயன்படுத்தும் ஆற்றல் குறித்தும்தான் அதிக அளவில் விவாதித்திருக்கின்றன.

மக்களாட்சி

  • மக்களாட்சிக்குள் புதிதாக நுழைந்த நாடுகள் தேர்தல்கள் குறித்தே விவாதித்து வருகின்றன. தேர்தலும், தேர்தலால் உருவாகும் ஆட்சி மாற்றங்களும் குறித்த விவாதங்களை முன்னிறுத்தி, தேர்தல்தான் மக்களாட்சி என்று மக்களிடம் பதிய வைத்து வருகின்றன அரசியல் கட்சிகள் என்ற கருத்தினை இந்த ஆராய்ச்சி அறிக்கைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
  • உலகம் முழுவதும் மக்களை முன்னிலைப்படுத்தி கள ஆய்வு செய்ததில் மக்களாட்சி குறித்து பொதுமக்கள் கொண்டுள்ள கருத்தாக்கங்கள் எவ்வளவு வேறுபாடுகள் நிறைந்ததாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
  • இந்த ஆய்வுகளிலேயே மிகப் பெரிய ஆய்வை நடத்தியது ஐ.நா. நிறுவனம். 2013}ஆம் ஆண்டில் 194 நாடுகளில் ஜனநாயகம் குறித்த மக்கள் கருத்துகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது ஐ.நா. அனைத்து நாடுகளிலும் நாட்டு முன்னேற்றத்துக்கு, மக்கள் விரும்புவது, "மக்களாட்சி முறை' எனப் பதிவு செய்துள்ளது; உலகின் 94 சதவீத மக்கள்  மக்களாட்சி முறையில் வாழ்வதைத்தான் விரும்புகின்றனர். 

ஆய்வு அறிக்கைகள்

  • இந்த ஆய்வு அறிக்கைகள் பல விசித்திரமான முடிவுகளைக் கொண்டு வந்துள்ளன. பல நாடுகள் வேகமாக மக்களாட்சிக்குள் வந்தாலும், அதை நடத்த உருவாக்கப்பட்ட அமைப்புகள் எதேச்சாதிகாரமாகச் செயல்படுவதும், மக்களின் செயல்பாடுகளில் மக்களாட்சியின் உட்கூறுகளான அடிப்படை அலகுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகள்,  நீதி, எதிர்க் கருத்தை மதித்து நடத்தல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், சட்டத்தின்படி ஆட்சி, மக்களின் பங்கேற்பு போன்றவற்றை நிராகரித்துச் செயல்படுவதையும் இந்த அறிக்கைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
  • வலுவுள்ள ஜனநாயக நாடுகள் முடிவெடுக்கும் தளங்களில் மக்கள் பங்கேற்பு என்பதை பிரதானப்படுத்தும் நிலையில், புதிதாக மக்களாட்சிக்கு வந்த நாடுகளில் மக்களாட்சியில் பயணிக்க விரும்பும் மக்கள், பங்கேற்பு முறை முடிவெடுக்கும் பழக்கத்தை விரும்பாமல் தலைவர்களுக்கே அந்த அதிகாரங்களைத் தாரை வார்க்கும் பழக்கத்தை ஆய்வு அறிக்கைகள் எடுத்தியம்புகின்றன. 
  • பங்கேற்பு ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல் மக்கள் இருப்பதையும் ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களாட்சி முறையே சிறந்த முறையிலான ஆட்சி என்று கூறும் மக்கள், ஜனநாயகக் கூறுகள் குறித்த புரிதல் இல்லாமல், தாங்களும் அந்த மக்களாட்சியின் விழுமியங்களை இழந்து, மக்களாட்சி அமைப்புகளும் மக்களாட்சிக் கூறுகளை இழப்பதைப் பார்த்துக்கொண்டு மக்களாட்சியில் இருப்பதாக மக்கள் மகிழ்ந்து இருப்பதுதான் புதிர் என இந்த ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

மற்ற நாடுகளில்...

  • சீனா,  வியத்நாம் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் தாங்கள் மக்களாட்சியில் வாழ்வதாகவே கருதி அது குறித்து தங்களது கருத்துகளைக் கூறியுள்ளனர். மக்களாட்சி முறைதான் மக்களுக்கு நல்லது என்று மக்கள் கூறினாலும், எது மக்களாட்சி, எது மக்களாட்சிக்கு விரோதமான எதேச்சாதிகார ஆட்சி என்று பிரித்துப் பார்க்க முடியாதவர்களாகத்தான் மக்கள் இருக்கிறார்கள் என ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
  • மக்களாட்சியில் இல்லாத மக்கள் அரசை மதிப்பீடு செய்யும்போது, சேவைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அரசு பூர்த்தி செய்து விடுகிறது என்ற பதிலை நிறைவுடன் கூறுகின்றனர் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய நாடுகளில் வாழும் மக்கள், மக்களாட்சியில் இயங்கும் நாடுகளில் வாழும் மக்களைவிட அரசின் மீது நம்பிக்கையுடன் வாழ்கின்றனர், நிறைவுடன் வாழ்கின்றனர் என இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் ஒரு கேள்வியை நம் சிந்தனையில் எழுப்புகிறது. மக்களாட்சி குறித்து பொதுமக்கள் எப்படிப்பட்ட புரிதலைக் கொண்டுள்ளனர்?  மக்களாட்சி குறித்த புரிதலை பொதுமக்களுக்கு  யார் ஏற்படுத்துகின்றனர்? அந்தப் புரிதலுக்கு ஏற்ப மக்களாட்சியில் அவர்கள் செயல்படுகின்றார்களா என்பதுதான் அந்தக் கேள்விகள்.
  • எனினும், மக்களாட்சியில் வாழும் மக்களைவிட, எதேச்சாதிகார ஆட்சியில் வாழும் மக்கள் அரசின் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளனர். தேர்தல் நடைபெறுகிறது, தொடர்ந்து ஆட்சி மாறுகிறது; ஆனால், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

விளைவுகள்

  • மக்களுக்குச் சென்று சேரவேண்டிய பலன்களை யாரோ எடுத்துச் செல்கின்றனர்.
  • ஏனெனில்,  மக்களாட்சியைப் புரிதலுடன் மக்கள் பயன்படுத்தவில்லை. இதன் விளைவு, மக்களாட்சியை ஒருசில வர்க்கத்தினர் பயன்படுத்தி, தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். அது மக்களாட்சியை மதிப்பிழக்கச் செய்யும் செயல்.
  • மக்களாட்சி முறையில் பல்வேறு முறைகள் உலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இவை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மக்களாட்சி முறையில் செயல்படும் அரசுகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி ஒட்டுமொத்த மக்களின் நல்லாதரவையும்  பெற்றுள்ளன. 
  • அதே நேரத்தில் மக்களாட்சி நடைபெறும் சில நாடுகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட அரசை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலுக்கு மக்கள்  தள்ளப்படும் நிலை உள்ளது. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு நிலைகளில் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் செயல்படுகின்றன.
    எனவே, இந்த மக்களாட்சி நாடுகளை வகைப்படுத்தவும் தரப்படுத்தவும், ஒப்புநோக்கவும், ஒரு விரிவான முறைமையியலை உருவாக்கி ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளை குறைந்தபட்ச மக்களாட்சிக் கூறுகளை வைத்தும், அதிகபட்ச மக்களாட்சிக் கூறுகளை வைத்தும் ஆய்வு செய்துள்ளனர்.
  • இந்த ஆய்வறிக்கைகளில் குறைந்தபட்ச மக்களாட்சியிலிருந்து அதிகபட்ச மக்களாட்சி வரை தரம் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.  இதில், மக்களாட்சி விரிவடையும்போது,  சமுதாயத்துக்கு மக்களாட்சி தரவேண்டிய நற்பயன்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், மக்களாட்சி விரிவடைவது சாதாரண நிகழ்வு அல்ல. இந்தச் செயல்பாடுகளை ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து ஜனநாயகப்படுத்துதல் என்ற செயல்பாட்டை இயக்கமாக உருவாக்கி பல நாடுகளில் உயர்நிலையை மக்களாட்சி அடைந்துள்ளது.
  • சுதந்திரத்துக்கு எப்படிச் சமுதாயம் போராடுகிறதோ, அதே நிலையில் மக்களாட்சிக்கும் போராடினால்தான் ஒரு நிலைத்த தரமான மக்களாட்சியை உருவாக்க முடியும். சுதந்திரப் போராட்டத்தைவிட கடுமையான போராட்டம் என்பது மக்களாட்சிக்கானது என்பதை அறியாது இருந்ததால்தான் பல நாடுகளில் குறைந்தபட்ச மக்களாட்சியுடன் மக்கள் ஏங்கி நிற்கின்றனர். 

மக்களாட்சியின் கூறுகள்

  • இந்த ஆய்வுகளில் மக்களாட்சியின் கூறுகளான தேர்தல், வாக்குரிமை, பேச்சுரிமை, சமத்துவம், நீதி, சுதந்திரம், மக்களாட்சிக்கான அமைப்புகளை நிறுவுதல், அவற்றை முறையுடன் இயக்குதல், சட்டத்தின்படி ஆட்சி, பங்கேற்பு, குடிமைப் பண்பு, நியாயம், பொறுப்புடன் நடத்தல், எதிர்க் கருத்தை மதித்துச் செயல்படுதல், மனித உரிமைகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துதல், ஊழலில்லா ஆட்சி } நிர்வாகத்தை ஏற்படுத்துதல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யாதிருத்தல், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுதல் முதலானவற்றை பின்புலத்தில் வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு நாடுகளின் நிலையை உலக அரங்கில் அரங்கேற்றியுள்ளன இந்த ஆய்வு அறிக்கைகள்.
  • நம் நாட்டைப் பொருத்த அளவில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களாட்சி குறைந்தபட்ச நிலையில் இருப்பதுதான் வியப்பாக உள்ளது. சுதந்திரம் பெற்றவுடன் சட்டத்தின்படி ஆட்சி என்பதை மக்கள் ஏற்று, சிரமங்களையெல்லாம் அமைதி காத்து அரசுடன் இணைந்து செயல்பட்டனர்; ஆனால், இன்று இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட  மக்கள் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள்; இந்தியப் பொருளாதாரம் ஒரு வளர்ந்த பொருளாதாரம்; இருந்தபோதும், சட்டத்தின்படி ஆட்சி என்பதைப் புறக்கணிப்பதும், தேர்தலைத் தாண்டி மக்களாட்சியை விரிவுபடுத்த முடியாமல் இருப்பதும், 72 ஆண்டுகால அரசுகளின் செயல்பாடுகள் மூலம் குறைந்தபட்ச வசதிகளைக்கூட ஏற்படுத்தித் தர முடியவில்லை என்பதும் மக்களாட்சியை முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
  • இருந்தபோதிலும், மக்களாட்சிக்கான பல அடிப்படைக்கூறுகள் இந்தியாவில் தொடர்ந்து செயல்படுவது பாராட்டுக்குரியது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சூழலில் பல அடிப்படை மக்களாட்சிக் கூறுகளை நம் அரசியல் கட்சிகளும், அரசும் தங்கள் செயல்பாடுகளில் கடைப்பிடிக்காமல் இருப்பது என்பது பாராட்டக்கூடிய அம்சம் அல்ல.

நன்றி: தினமணி (31-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்