- அரசியல் கட்சியில் உயர்பதவி வகித்த ஒருவர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "என்னை இந்தப் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் என் தலைவர்' என்று மேடையிலிருந்த தலைவருக்குப் புகழாரம் சூட்டினார்.
- அடுத்ததாகப் பேசிய அந்தத் தலைவர் "எந்தப் பதவிக்கும் ஓர் அழகு இருக்கிறது. அந்தப் பதவியின் அழகை மெருகூட்டும் ஒருவரை அப்பதவியில் நியமிக்க வேண்டும். அதுதான் ஒரு கட்சியின் தலைவனுக்குள்ள திறமை. அதைத்தான் நான் செய்தேன்' என்று குறிப்பிட்டார்.
- "பதவிக்கு என்ன அழகு? பதவிக்கு அதிகாரங்கள், பொறுப்புகள், கடமைகள்தான் இருக்க வேண்டும். இந்தத் தலைவர் அழகு என்று குறிப்பிடுகின்றாரே' என்று நான் அப்போது எண்ணியதுண்டு.
- ராபர்ட் டால் என்ற அரசியல் அறிவியலாளர் "மக்களாட்சியின் அழகு' என்று தன்னுடைய கட்டுரைகளில் அடிக்கடிக் குறிப்பிடுவதை படித்து விட்டு அதன் மூலத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் மக்களாட்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.
- அந்த வரலாற்றைப் படிக்கும்போது தான் மக்களாட்சியை நிலைநாட்ட, மானுடம் எவ்வளவு பெரிய விலை கொடுத்துள்ளது என்பது தெரிந்தது.
மக்களாட்சி
- மக்களாட்சிக்கான மக்கள் எழுச்சி, ஓங்குவதும் ஒடுங்குவதுமாக செயல்பட்டு அது மானுட சமூகத்தில் இன்று நீக்கமற நிறைந்துள்ளது.
- ஜனநாயகப்படுத்துதல் என்பது முதல் அலையாக கிரேக்கத்திலும் ரோமிலும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்தது.
- இரண்டாவது அலையாக 10 - 11-ஆம் நூற்றாண்டுகளில் வட இத்தாலியில் வீசத் தொடங்கியது. இந்த இரண்டு முறையுமே மிகச் சிறந்த செயல்பாட்டைத் தரக்கூடியதாக அந்த மக்களாட்சி விளங்கியது.
- இந்த இரண்டிலுமே மக்களாட்சி, சிறிய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு மக்களைக் கவர்ந்தது.
- ஆனால் அதே மக்களாட்சி, மூன்றாவது முறை பேரலையாக அமெரிக்காவிலும், பிரான்சிலும் பெரிய அரசாங்கத்தை கட்டமைத்து மாபெரும் மக்கள் சக்தியாக 18-ஆம் நூற்றாண்டில் உருவானது.
- இந்த மக்களாட்சிப்படுத்தும் உலக நிகழ்வு ஒரு நேர்க்கோட்டில் நடைபெற்றதல்ல. மக்கள் போராட்டங்கள், உலகத்தில் எத்தனையோ வகையான மக்களாட்சி முறைகளை உருவாக்கியுள்ளன. இதன் மையப்புள்ளி அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவது என்பதே.
- "மக்களை மக்களே ஆள்வது', "அதிகாரத்தை மக்கள் கையாள்வது' என்றெல்லாம் மக்களாட்சியைப் பற்றி விளக்கினாலும், அது உலகத்தில் எடுத்த அவதாரங்கள் அதிகம்.
- பலவகையான மக்களாட்சிகளை மானுடம் கண்டுள்ளது. இதில் மிக முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மக்களாட்சிக்கான போராட்டங்கள் பற்றியே.
- மனித சமூகம் மிகப் பெரிய விலை கொடுத்துத்தான் மக்களாட்சியைப் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் அது சிதிலமடைய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
மக்களாட்சியின் மேல் புரிதல்
- அடிக்கடி பலரும் "சும்மா வரவில்லை சுதந்திரம்' என்று கூறுவார்கள். அது உண்மைதான். நாம் அதை ஒரு விலை கொடுத்து வாங்கி இருக்கின்றோம்.
- சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்குவதுபோல் மக்களாட்சிப்படுத்த போராடிய வரலாற்றை யாரும் விளக்குவதில்லை.
- எனவேதான் மக்களுக்கு சுதந்திரம் பற்றிய புரிதல் வந்தது போல் மக்களாட்சி பற்றிய புரிதல் இன்றும் வரவில்லை.
- அரசியல் அறிஞர் ராபர்ட் டால், "ஒரு சமூகத்தில் மக்களுக்கு எந்த அளவு மக்களாட்சி பற்றிய புரிதல் உருவாகின்றதோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தில் மக்களாட்சி மாட்சிமை பெறும்' என்கிறார்.
- ஒரு சிறிய நகரத்தில் ஆரம்பித்த மக்களாட்சி, இன்றைக்கு 138 கோடி மக்கள்தொகை கொண்ட பெரிய தேசத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகமாக நிறுவப்பட்டுள்ளது.
- இந்த முறையில் எவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும் மக்களின் எண்ணத்திற்கேற்ப ஓர் ஆட்சி அமைக்கப்பட்டு விடுகிறது.
- அது, சாதாரண மனிதனுக்கு "என் வாக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்' என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
- அத்துடன் அது நின்று விட்டால், அது தேர்தலை மட்டுமே மையப்படுத்திய ஒரு மக்களாட்சியாகத் தேங்கி நிற்கிறது என்று பொருள்.
- இன்று உலகில் மிகப்பெரிய சக்தியாக விளங்கக்கூடிய பல இயக்கங்களில் மக்களாட்சிக்கான இயக்கங்கள்தான் முன்னிலை பெற்றுள்ளன. காரணம் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் என்ற மந்திரச் செயல்பாடுதான்.
- மூன்றாவது அலையில் உருவான மக்களாட்சிக்கு வித்திட்டவர்களின் மக்களாட்சி பற்றிய பார்வையைப் பார்த்தால், மக்களாட்சியில் மானுடம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பது புரியும்.
- எனவேதான், மக்களாட்சி குறித்த சிந்தனையாளர்கள், "மக்களுக்கு மக்களாட்சி பற்றி முழுமையான புரிதலை ஏற்படுத்தவில்லை என்றால், தலைவர்கள் மக்களை மேய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
- மக்களுடன் பயணித்து, மக்களுக்கான ஆட்சியைத் தந்து மக்களை அவர்களின் பங்களிப்போடு மேம்படுத்தாமல், மக்கள் மீது அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்' என்று கூறினர்.
- இந்த விளக்கங்களையெல்லாம் தாண்டிய ஓர் உன்னத அமைப்பைத்தான் பிரான்ஸ் நாட்டுச் சிந்தனையாளரான ரூசோ, தான் எழுதிய "சமூக ஒப்பந்தம்' என்ற நூலில் விவரித்துள்ளார்.
- இந்த விளக்கத்தை அந்தப் புத்தகத்தில் கூறியமைக்காக அந்தப் புத்தகத்தை எரித்தார்கள்; ரூசோவையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கொதித்தனர்.
- நேரடி ஜனநாயகம்தான் உன்னத மக்களாட்சி. அதற்கு நிகராக எந்த ஓர் அமைப்பும் இல்லை என்ற கருத்தை முன் வைத்தார் ரூசோ.
- அது மட்டுமல்ல, பிரதிநிதித்துவ மக்களாட்சியில் இன்று கூறப்படும் குறைகளை அவர் அன்றே கூறிவிட்டார்.
- தேர்தலின்போதுதான் மக்களை மதிப்பார்கள், அதன் பிறகு மக்கள் பிரதிநிதிகளே முதன்மைப்படுத்தப்படுவார்கள். பொதுமக்களின் பிரச்னைகளை எந்தப் பிரதிநிதியாலும் பொதுமக்கள்போல் எடுத்துரைக்க முடியாது என்பதை ஆழமாக விளக்குகிறார்.
- அன்று அவர் கண்ட கனவுதான் இன்று நாம் காணும் புதிய உள்ளாட்சி அரசாங்கமும், கிராமசபையும்.
மக்களாட்சியின் அழகு
- 1960-களிலே "புதிய இடது' என்ற அமைப்பினர், "பங்கேற்பு ஜனநாயகம்' மட்டுமே இன்றைய பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்று கூறினர்.
- இந்தியாவில், மகாத்மா காந்திதான் பிரதிநிதித்துவ மக்களாட்சிக்கு மாற்றாக பங்கேற்பு மக்களாட்சியை நிறுவ முனைந்தார்.
- அந்த மக்களாட்சியில் "மக்கள்' என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கமாக "கடையன்' என்ற சொல்லை வரையறுத்துக் கொண்டார்.
- "கடையனை உள்ளடக்கிய மக்களாட்சி, மக்களுக்கு அருகில் இருக்க வேண்டும். அதுதான் வலிமை பெற்றதாக இருக்கும்' என்று வலியுறுத்தினார். "மக்கள்' என்ற சொல்லுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான விளக்கத்தைத் தந்துள்ளனர் சிந்தனையாளர்கள்.
- ஒரு காலத்தில் சொத்து என்பது முதன்மைப்படுத்தப்பட்டது. அடுத்த நிலையில் கல்வி முதன்மை ஆனது. இப்படி பல்வேறு தகுதிகளை வைத்துத்தான் மக்களை அடையாளப் படுத்தினர்.
- எனவேதான் மக்கள் பங்கேற்பு என்றால் எந்த மக்கள் பங்கேற்பு என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இன்றும்கூட அந்தக் கேள்வி எழுப்பப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
- இன்று சமூகம் அடைந்துள்ள மாற்றங்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் நம்மை வியக்க வைக்கின்றன.
- மனிதர்கள் சமூகம் என்ற கட்டமைப்பிலிருந்து, தன்சுகம் தேடும் மனிதர்களாக இயங்க ஆரம்பித்து விட்டனர்; நுகர்வு கலாசாரத்தில் தோய்ந்து விட்டனர்.
- அரசாங்கத்தை, உயர்ந்த இடத்தில் இருக்கும் எஜமானனாக எண்ணிக்கொண்டு, அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ்வதில் ஒரு சுகத்தைக் கண்டனர்.
- இதைக் கலைத்து, பொறுப்பு மிக்க குடிமக்களாக மாற்றி, ஆளுகையிலும் மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் மக்களைப் பங்கேற்கச் செய்து, அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக உருவாக்க வந்த உள்ளாட்சிதான் இன்று நாம் பார்க்கும் உள்ளாட்சி அமைப்புகள்.
- இந்தியச் சூழல் இன்று நமக்குக் கூறும் பாடம் என்னவென்றால், மக்களாட்சிக்கான மக்கள் தயாரிப்பு பெருமளவு செய்திட வேண்டும்.
- அதாவது, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா எப்படி அரசியல் சாசனச் சட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று அவர்களிடையே புரிதலை ஏற்படுத்தினாரோ அப்படிச் செய்ய வேண்டும்.
- நம் நாட்டில் உள்ளாட்சிக்கு இருக்கும் சக்தி, ஆற்றல் பற்றி மக்களிடம் முழுப் புரிதல் இருந்தால் மிகப் பெரும் மாற்றங்களை, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடித்தட்டு மக்கள் பெற்றிருக்கக் கூடும்.
- அன்றைய புரிதல் பெற்ற தலைவர்கள் செய்திருக்கக்கூடிய மாற்றங்கள்தான், இன்று "உள்ளாட்சியை வலுப்படுத்துங்கள்' என்ற முழக்கம் மேலோங்கக் காரணமாக இருக்கின்றன.
- இவர்கள் நடத்துகின்ற கிராமசபைகளில் ஒரு அறிவார்ந்த விவாதத்தைக் காண முடிகிறது.
- ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிரச்னைகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து முடிவுகள் எடுக்கின்றார்கள்.
- இவர்கள்தான் மக்கள் கூடலை ஆத்ம சந்திப்புக்களாக மாற்றி பொதுமக்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றுகின்றார்கள்.
- அவர்கள் பேசுகின்ற மொழியில் வன்மம் இல்லை; பொய் இல்லை; புரட்டு இல்லை; வசவு இல்லை. ஆனால், அதில் அன்பு இருக்கிறது; கருணை இருக்கிறது; உணர்வு இருக்கிறது; ஒற்றுமை இருக்கிறது; பண்பு இருக்கிறது; பாசம் இருக்கிறது.
- அங்கு கடைநிலையில் வாழும் மனிதனின் கேள்விக்கு மரியாதையுடன் பதில் அளிக்கப் பட்டு அந்த மனிதன் மதிக்கப்படுவது என்பதுதான் அடித்தட்டு ஜனநாயகத்தின் அழகு.
- இங்கு பொதுமக்கள் பொறுப்புணர்ந்த குடிமக்களாக வாழ்கிறார்கள். இவர்கள் தாங்கள் வாழும் இடங்களில் இணக்கமான சமூக உறவைக் கட்டமைக்கின்றார்கள்.
- அதேபோல் இவர்கள் இயற்கையின்மேல் மாறா அன்பு கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர்.
- இவர்களின் கூட்டுக்கனவுதான் இவர்கள் வசிக்கின்ற இடங்களின் மேம்பாட்டுச் செயல்பாடுகள்.
- உள்ளாட்சி என்பது மக்களுக்கும் தனக்கும் உயிரோட்டமுள்ள தாய்- மகன் உறவுமுறை. இதுதான் மக்களாட்சியின் அழகு; இதுதான் மக்களாட்சியின் உன்னதம்.
- எனவே மக்களாட்சியின் அழகு என்பது நம் நாட்டின் மரபுப்படி ஆன்மாவில் செயல்படுவது.
- மக்களாட்சியின் அழகு என்பது மக்களின் குரலுக்கு செவிமடுத்துச் செயல்படுவது.
- இந்தச் செயல்பாடுதான் ஒரு சமுதாயம் உன்னதமாக விளங்க உதவியாக இருக்கும். அதுதான் மக்களாட்சியின் அழகு.
நன்றி: தினமணி (16 – 06 - 2021)