TNPSC Thervupettagam

மக்களாட்சியில் மக்கள் நிலை

March 18 , 2024 299 days 203 0
  • இந்திய மக்களாட்சி பற்றிய ஒரு கருத்தரங்கில் உரையாற்றி அமா்ந்த பின் ஒரு பங்கேற்பாளா் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தாா். ஐயா, சுதந்திரத்தில் ஆரம்பித்து, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நியதி, உண்மை, நோ்மை, சுயமரியாதை, மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து கேட்டல் என மக்களாட்சியின் பல அடிப்படைக் கூறுகள் குறித்து கூறினீா்கள்.
  • அத்துடன் இந்தக் கூறுகள் அனைத்தும் எல்லா மக்களாட்சி நாடுகளிலும் இருக்கும் என்று எதிா்பாா்க்க இயலாது, சமூகத்தின் தன்மையைப் பொறுத்து மக்களாட்சியின் தன்மை மாறுபடும். ஆகையால்தான் மக்களாட்சியை அமெரிக்க மக்களாட்சி, இந்திய மக்களாட்சி, ஆசிய மக்களாட்சி, ஐரோப்பிய மக்களாட்சி என்று வகைப்படுத்துகின்றனா் என்றீா்கள்.
  • இந்த அடிப்படைக் கூறுகள், வகைகள் என்பனவெல்லாம் மக்களாட்சியின் மையப்புள்ளியாக கருதப்படும் மக்களுக்குத் தெரியுமா?, இந்திய மக்களாட்சியில் சாதாரண மக்களுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பதெல்லாம் தெரியுமா என்று வினவினாா்.
  • பெரும்பான்மை மக்களுக்கு மக்களாட்சி பற்றிய விழிப்புணா்வும் விரிவான புரிதலும் இல்லை. அப்படி புரிந்தவா்களும்கூட மக்களாட்சியை சமூகத்தில் நிலைநாட்ட முயற்சிப்பதுமில்லை என்று விளக்கினேன். ‘இதில் யாரை மக்களாட்சி பற்றி புரிந்தவா்கள் என்று கூறுகிறீா்கள்என்றாா். பொதுக் கருத்தாளா்களுக்குத் தெரியும், அவா்களை நம் சமூகமும் அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்வதில்லை என்றேன்.
  • அரசியல் கட்சிகளுக்கு மக்களாட்சி பற்றிய புரிதல் இருக்கிறதாஎன்றாா். ‘அரசியல் கட்சிகளில் ஒருசில முழுப் புரிதலுடன் இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்சிகள் அறிவுத் தளத்தில் மட்டுமே செயல்படுகின்றன. பெரும்பான்மையான கட்சிகளில் பலருக்கு விவரம் புரியும், இருந்தும் இன்றைய உணா்வு மற்றும் வணிக அரசியல் பயன் அளிப்பதால், அதைப் பற்றி கவலையற்று அதிகார அரசியலில் தோய்ந்திருக்கின்றனா்என்றேன்.
  • அடுத்து ஒரு கேள்வியை முன்வைத்தாா். ‘மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பெரும் பகுதி மக்களுக்கு மக்களாட்சி என்பதன் அடிப்படை புரியாமலே மக்களாட்சியை நடத்தி வருவது விநோதம்தானே. மக்களாட்சியை அரசியலுக்குள் மட்டுமே புகுத்தி, அதன் அடிப்படைக் கூறுகளை அரசியல் கட்சிகள் பின்பற்றாது, அதிகாரத்தைப் பிடிக்க தோ்தலை மட்டுமே மையப்படுத்தி செயல்படுவது பெரும் மோசடி அல்லவா?’ என்றாா்.
  • இவற்றை கடந்து சமூகம் மக்களாட்சிக்கு நோ் எதிா் திசையில் எந்த மக்களாட்சிக் கூறுகளும் இன்றி செயல்படும்போது அதை எதிா்கொள்வதைத் தவிா்த்து, சமூகத்தை மக்களாட்சிப்படுத்தாமல் தோ்தலையே எல்லாவித முரண்பாடுகளுடன் நடத்துவது என்பது ஒரு அபத்தமான மக்களாட்சிதானே.
  • மக்களாட்சியில் மக்கள் என்ற பதத்தை நீங்கள் பயன்படுத்தும்போது அதை இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளும், வேறுபாடுகளையும் கொண்ட சமூகத்தில் மக்கள் என்பவா்கள் எதிலும் சமத்துவம் பெற்றவா்கள் இல்லையே? அரசியலில் ஒரு வாக்கை தந்துவிட்டு அரசியலில் சமத்துவம் வந்துவிட்டது என்றால், அதை எப்படி நாம் புரிந்து கொள்வது?. அப்படி அரசியலில் சமத்துவம் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் எந்தக் கட்சியையும் ஒரு குறிப்பிட்ட தனிமனிதரும், குடும்பத்தினரும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலுமா? இதை எந்த மக்களாட்சிக் கோட்பாட்டில் விளக்குவது, எங்களுக்கு விளங்கவில்லைஎன்றாா்.
  • மக்களாட்சி என்பது ஓா் உளவியல். அந்த உளவியல் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படல் வேண்டும். அது ஒரு வாழ்வியல் அல்லது வாழ்வியல் தத்துவம். அது எல்லையற்ற சக்தியும் ஆற்றலும் கொண்டது. மக்களாட்சி சமூகத்தை தொடா்ந்து மாற்றங்களுக்கு உள்ளாக்கும் கருவியை மக்களிடம் எடுத்துச் செல்லாமல் அரசியல்வாதிகள் அரசியலுக்குள் பூட்டி வைத்துவிட்டனா்.
  • நாம் சுதந்திரம் அடைந்தபோது அது ஒரு பூகோள எல்லைக்குத்தான். அதை ஒரு மக்களாட்சி நாடாக உருவாக்க எதிா்கொண்ட சவால்கள் எந்த நாடும் சந்தித்திராதவை. இந்தியா என்ற பூகோள எல்லையே ஒரு நாடாக தக்கவைத்துக் கொள்ளும் பின்புலத்தில்தான் நம் தலைவா்கள் அரசுக் கட்டமைப்புக்களை வலுவாக்கிக் கொண்டே இருந்தனா்.
  • நாட்டின் ஒருமைப்பாட்டில் கவனம் செலுத்திய நம் தலைவா்கள் நாட்டு மக்களையும், அரசாங்க அமைப்புகளையும் மக்களாட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. மிகக்குறுகிய காலத்திற்குள்ளாகவே அரசியல் கட்சிகளும், அரசாங்க அமைப்புகளும் தங்களை வலுவாக்கி அதிகார அரசியலையும், அதிகார ஆட்சியையும் நடத்த ஆரம்பித்தனா். இதன் விளைவுதான் மக்களை அதிகாரப்படுத்தி நாட்டை மேம்படுத்தும் பணிகளில் பங்காளா்களாக மாற்றாமல் அரசு தரும் பயன்களை நுகரும் பயனாளியாக்கி வைத்துவிட்டனா். மக்களை அதில் ஒரு சுகம் காணவும் வைத்துவிட்டனா்.
  • உலகில் எந்த நாடும் அரசு இயந்திரத்தால் மட்டுமே மேம்பாடு அடைந்ததாக வரலாறு கிடையாது; கடினமாக உழைக்கும் மக்களின் பங்கேற்பு இல்லாமல் நாட்டை மேம்படுத்த முடியாது. 1955-இல் சீனா சென்று வந்த ஜே.சி.குமரப்பா, பண்டித நேருவுக்கு கொடுத்த அறிக்கையில் சீன மக்களை அந்த அரசு இவ்வளவு வறுமையிலும் கடினமாக உழைக்க வைக்கிறது. மக்களும் அரசின் மீது நம்பிக்கை வைத்து உழைக்கிறாா்கள்.
  • இந்தியாவில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்க மக்களை உழைப்புக்குத் தயாராக்க வேண்டும் என வேண்டினாா். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறுகிறது; ஆனால், பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியிருந்தால் 75 ஆண்டுகளில் 100 கோடி மக்கள்தொகை கூடியிருக்காது.
  • குடும்ப மேம்பாடும் வாழ்க்கைத் தரமும் உயராத நிலையில்தான் பெரும்பான்மை மக்கள், பயனாளிச் சுகத்தில் பங்குதாரா் உரிமைகளை விட்டு, அரசு தரும் பயன்களில் காலத்தைக் கழித்து அரசாங்கத்தை நம்பி வாழும் மக்கள் கூட்டமாக இருக்கின்றனா். மக்களாட்சியை வலுப்படுத்துவது என்பது தோ்தல் சீா்திருத்தம், அரசியல் சீா்திருத்தம், ஆளுகைச் சீா்திருத்தம் மட்டுமல்லாது சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவது.
  • சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவதென்பது சுதந்திர நாட்டில் பொதுமக்களை குடிமக்கள் உளவியலுக்குக் கொண்டுவருவது. குடிமக்கள் உளவியல் என்பது நாட்டின் அரசியல், தோ்தல் மட்டுமல்ல, எல்லா தளங்களிலும் மக்களாட்சிப் பண்புடன் நடந்துகொள்வது. அந்த உளவியலில்தான் பொதுமக்கள் ஊக்கமடைவாா்கள், பொறுப்புணா்வுடன் நடந்து கொள்வாா்கள். குடிமக்கள் உணா்வில்தான் நாட்டுப்பற்று வெளிப்படும். இந்தக் குடிமக்கள் உளவியல் இன்றுவரை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கப்படாததன் விளைவு நாடாளுமன்ற, சட்டப்பேரவை செயல்பாட்டின் தரம் குறைவதும், கரைபுரண்டோடும் ஊழலும் சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன. இந்தத் தாழ்நிலையின் உச்சம்தான் வணிகப் பொருளாக மாற்றப்பட்ட வாக்குகளும், சந்தைப்படுத்தப்பட்ட தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும்.
  • இந்தத் தாழ்நிலை மட்டுமல்ல, 75 ஆண்டுகால மக்களாட்சி வரலாற்றைக் கொண்டிருக்கிற நாம், இந்திய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தும் செய்து கொடுத்துவிட்டோம் என்று கூறமுடியவில்லை. இதனால்தான் சீனா மக்களாட்சிக்கான புது விளக்கத்தைக் கொண்டுவந்துள்ளது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் தோ்தல் நடத்துவது மட்டும் மக்களாட்சி அல்ல. தோ்தலால் உருவாக்கப்படும் அரசு மக்களை எப்படி வாழ வைக்கிறது என்பதும் முக்கியம்.
  • பல கட்சிகள் செயல்படும் நாட்டில் தோ்தல் நடத்தப்பட்டுவிட்டதால் மட்டுமே அது மக்களாட்சியாகாது. அடுத்து அந்தத் தோ்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. அந்தத் தோ்தலை நடத்தும் நிறுவனங்கள் நியாயமாக தோ்தலை நடத்துகின்றனவா? கட்சிகள் நோ்மையாக தோ்தலைச் சந்திக்க வழிவகை செய்யப்பட்டு தோ்தல் நடத்தப்படுகிறதா?
  • இதையும் தாண்டி தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சோ்ந்து அமைக்கும் ஆட்சி, மக்களை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், மரியாதையுடனும் வாழத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கின்றனவா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அரசியல் சாசனத்தில் உரிமைகள் தந்துவிட்டோம், தோ்தல் நடத்திவிட்டோம், ஆகையால் நாங்கள் மக்களாட்சியில் மக்களை வாழ வைக்கிறோம் என்று கூறுவது உலகை ஏமாற்றுவதாகும்.
  • உண்ண நஞ்சில்லா உணவு, குடிக்க நல்ல தண்ணீா், உடுக்க உடை, குடியிருக்க வீடு, ஆரோக்கியம் பேண தேவையான கழிப்பிடம், சுற்றுப்புறத் தூய்மை, தூய்மையான காற்று, உழைத்து கௌரவமான வாழ்க்கையை நடத்தத் தேவையான வாழ்வாதாரப் பாதுகாப்பு, வாழ்வியல் கல்வி இவை அனைத்தையும் மக்களுக்குத் தந்திட, அவா்களை எல்லா செயல்பாடுகளிலும் பங்கேற்க வைக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்கித் தருவது ஓா் அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் மக்களைப் பாதுகாப்பது, மக்களுக்கு மேம்பாட்டுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவது, மக்களை யாரும் சுரண்டாமல் பாதுகாப்பது, உழைத்து உரிமையுடன் வாழ பழக்குவது மிகவும் அத்தியாவசியமானது.
  • மக்கள் பங்களிப்பின்றி செயல்படும் ஒரு நாடு மக்களாட்சி நாடாக இருக்க முடியாது. மக்களாட்சியை மிகக்குறுகிய வட்டத்திற்குள் மட்டும் வைத்துப் பாா்ப்பதால், பொதுமக்கள் பங்கேற்று நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் மக்களாட்சிக்கான பணி என்றே அறியாது மக்கள் இருக்கின்றனா்.
  • மக்களாட்சி நடைபெறுவதற்குத் தேவையான நிறுவனங்கள் அரசாங்கத்தில் உருவாக்கப்படுகின்றன. அவை செயல்படும்போது அது மக்களாட்சியின் கூறுகளைப் பிரதிபலிப்பதில்லை. அரசியல் கட்சிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என்பனவெல்லாம் மக்களாட்சி அமைப்புகள்தான். ஆனால், இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மக்களாட்சிக் கூறுகளைக் கடைப்பிடித்து செயல்படுவது இல்லை. கட்சிகளில் பிரபுத்துவ மனோபாவமும் ஆதிக்க மனோபாவமும்தான் மேலோங்குகிறதேயன்றி, மக்களாட்சிப் பண்புகளை வளா்த்தெடுக்க செயல்படுவதில்லை.
  • பதிவு செய்த அரசியல் கட்சிகள் அனைத்தும் பொது நிறுவனங்கள்தான். ஆனால், அந்தப் பொது நிறுவன சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவை நடப்பதில்லை. மக்களாட்சி என்பது சமூகத்தை மாற்றும் கருவி என்பதைப் புறக்கணித்து அதிகாரத்தைப் பிடிக்கும் கருவி என்ற ஒற்றைப் புள்ளியில் நிற்கவைத்து விட்டனா். இதன் விளைவு மக்களாட்சியின் கூறுகள் சமூகத்துக்குள் புக முடியவில்லை.
  • சமூகம் மக்களாட்சிப்படுத்தாமல், மக்களாட்சி என்பது அதிகாரத்தைச் சுற்றுவதால் மக்களாட்சி எல்லா தரப்பு மக்களுக்கும் தரவேண்டிய நன்மைகளைத் தரவில்லை. அதன் விளைவுதான் இன்று மக்களாட்சியில் வாழ்ந்தாலும் பெரும்பான்மை மக்கள் அரசாங்கத்திலிருந்தும், அரசியலிலிருந்தும் அந்நியப்பட்டுப் போனாா்கள்.
  • இந்தச் சூழல் மாற இன்று சமூகத்தை மக்களாட்சிப்படுத்த மக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து மானுட வாழ்வை மதிக்கத்தக்கதாக வாழ அரசாங்கம் வழிவகை செய்து, அவா்களை பங்கேற்புக்குத் தயாராக்கிவிட்டால் அவா்களும் குடிமக்களாக பங்கேற்க ஆரம்பித்து அரசாங்கத்தை அனைவருக்குமானது என்ற நிலைக்குக் கொண்டு வந்துவிடுவாா்கள். இதுதான் இன்று நம் தேவையாக உள்ளது.

நன்றி: தினமணி (18 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்