- கடந்த சட்டமன்றத் தேர்தலின் வெற்றிகரமான பிரச்சார உத்திகளில் ஒன்றாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ அமைந்திருந்தது.
- பிரச்சாரப் பயணத்தில் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் அளித்த நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களின் மீது திமுக ஆட்சியமைந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
- அவ்வாறே ஆட்சியமைந்ததும் அம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப் பிரிவும் சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
- தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் தகுதியுள்ள மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, உரிய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
- தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட மனுக்களின் மீதான அதிவேக நடவடிக்கைகள், முதல்வருக்கு மனு அனுப்பினால் உடனடியாக அது பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மக்களிடம் உருவாக்கியுள்ளன.
- தினந்தோறும் முதல்வர் அலுவலகத்துக்கு நேரிலும் அஞ்சலிலும் ஆயிரக்கணக்கில் வந்து குவியும் மனுக்கள் அதற்கு உதாரணம். அதே நேரத்தில், மாவட்ட, வட்டார அளவில் அரசு அதிகாரிகள் தங்கள் வரம்புக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பல மனுக்கள் முதல்வர் அலுவலகம் வரைக்கும் மேல்முறையீட்டுக்கு வருவது நிச்சயம் நிர்வாகத் துறையின் அலட்சியத்தையே எடுத்துக்காட்டுகிறது.
- இந்தக் குறையைச் சுட்டிக்காட்டி சரிசெய்யும் வகையில் அமைந்திருக்கிறது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அண்மையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம்.
- சிற்றூர் அளவிலும் வட்டார அளவிலும் முடிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை அங்குள்ள அதிகாரிகள் உரிய காலத்தில் செய்து முடிக்காததன் விளைவே, முதல்வர் அலுவலகத்தை நோக்கி தினந்தோறும் பத்தாயிரம் மனுக்கள் வந்து குவியக் காரணம் என்று தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் தலைமைச் செயலாளர்.
- முதல்வர் அலுவலகத்திலிருந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறித்து அனுப்பப்பட்ட புகார்களின் மீது மாவட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டுத் தீர்வுகாண முடியும் பட்சத்தில், அந்தப் புகாரின் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். எக்காலத்துக்கும் தேவையான அறிவுறுத்தலாக இந்தக் கடிதத்தின் செய்தி கொள்ளப்பட வேண்டும்.
- தனது புகாரை எந்த அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது என்றுகூட அறியாதவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். கிராமம், நகரம் என்ற பேதம்கூட இதில் இல்லை.
- புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புபவர்கள் இருப்பதுபோலவே, நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தனிநபர் வழக்கு தொடுப்பதற்கான ஆதாரங்களாக அவற்றைக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்.
- எந்தத் துறை சார்ந்த புகாராக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் நீண்ட கால வழக்கம் ஒன்றும் தொடர்ந்துவருகிறது.
- மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளுக்கும் ஆட்சியரே உயரதிகாரி என்ற பிரிட்டிஷ் காலத்து நடைமுறையையும் காலத்திற்கேற்றவாறு மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். அதிகமாகிக்கொண்டிருக்கும் அவர்களது பணிச் சுமையைக் குறைக்கவும் அது உதவக்கூடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 - 09 - 2021)