- வேளாண் பொருள்கள் உற்பத்தி, கணினித் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, மருந்துப் பொருள்கள் தயாரிப்பு என நமது நாடு குறிப்பிட்ட சில துறைகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தாலும், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னமும் மேம்படவில்லை.
- இந்த வளர்ச்சியின் பயன்கள் கிராமப்புற அடித்தட்டு மக்களைச் சென்றடையாததால்தான், நமது நாட்டில் வசதி படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- இந்த நிலைமையை மாற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வந்தாலும், அவை கிராம அளவில் முழுமையாகச் சென்றடையவில்லை.
- 73, 74-ஆவது அரசியல் சட்டத் திருத்தங்கள் வாயிலாக, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 1992-ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அரசமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- இந்தத் திருத்த சட்டங்கள் 1993-ஆம் ஆண்டு, ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.
- அந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஊராட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு - காஷ்மீரின் சாம்பா மாவட்டம், பாலி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
- ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அந்த மாநிலத்தில் பிரதமர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி என்பதால் இது முக்கியத்துவம் பெற்றது.
உள்ளாட்சியில் நல்லாட்சி!
- பிரதமர் பேசும்போது "நாடு தற்போது 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. சுதந்திர நூற்றாண்டை எதிர்நோக்கியுள்ள அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு பொற்காலமாக இருக்கும்.
- ஜனநாயகக் கொள்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்துகின்றன. கிராமங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் திறம்பட வகுக்க வேண்டும்.
- அடுத்த சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்.
- இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்ற வேண்டும். நமது கிராமங்கள் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடையும்.
- ரசாயன உரங்களால் நிலமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
- பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்ட இந்த விஷயங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நமது நாடு உன்னதமான வளர்ச்சியை எட்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
- தேசிய ஊராட்சி தினத்தையொட்டி, பிரதமரைப் போலவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் - "தமிழகத்தில் இனி ஆண்டுக்கு நான்கு கிராமசபைக் கூட்டங்களுக்கு பதிலாக ஆறு கூட்டங்கள் நடத்தப்படும்.
- ஊராட்சி அளவில் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, சேவைகள் அனைத்தும் கிராம மக்களைச் சென்றடைய முதல் கட்டமாக இந்த ஆண்டிலேயே 600 கிராமச் செயலகங்கள் கட்டப்படும். நீடித்த, நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதன் மூலமே தமிழக ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ முடியும்.
- அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களைச் சென்றடைய வேண்டும்' என்று கூறினார் முதலமைச்சர்.
- பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தங்கள் அமலுக்கு வந்து 29 ஆண்டுகள் கடந்த பிறகும், கிராமப்புற உள்ளாட்சிகள் தங்களது இலக்குகளை இன்னமும் எட்டவில்லை. கிராம மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
- பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக அவர்கள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
- மத்திய - மாநில அரசுகள் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதி கிராமப்புறங்களை முழுமையாகச் சென்றடைவதில்லை.
- மத்திய - மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், கிராமப்புற மக்களை வறுமையின் பிடியிலிருந்து முழுமையாக மீட்க முடியவில்லை என்பதுதான் நிஜ நிலைமை.
- இதே போல, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத அளவுக்கு இட ஒதுக்கீடு அளித்தும் அவர்களால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிக்கும் பெண்களை அவர்களது கணவரோ உறவினர்களோ தங்கள் விருப்பம்போல் செயல்பட வைக்கும் போக்கு தொடர்கிறது.
- இது, கிராமங்களில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பலவித முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
- பெண் ஊராட்சித் தலைவர்கள் சுயமாகச் சிந்தித்து செயல்படக்கூடிய சூழ்நிலை உருவானால் மட்டுமே கிராமப்புறங்களில் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கும் ஆக்கபூர்வ வளர்ச்சியை எட்ட முடியும்.
- அதோடு, மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதி, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதையும் மத்திய - மாநில ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!
நன்றி: தினமணி (26 – 04 – 2022)