- வரலாற்றின் நாயகர்கள் மக்களுக்காக உழைத்தவர்களாக, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களாக இருந்தனர். இனி எழுதப்படவிருக்கும் வரலாற்றிலும் அப்படிப்பட்ட தலைவர்களுக்குத்தான் இடம் இருக்கும்.
- அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா, 58 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தேதியில் (1962 ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டார்.
- தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறியை எதிர்த்துப் போராடியதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு அது. ஆனால், சிறையில் இருந்தபடியே கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி, இறுதியில் வெற்றியும் கண்டார் மண்டேலா!
வெள்ளையின வெறி
- ஏற்கெனவே நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்காவில், நிறவெறியைச் சட்டபூர்வமாக்கியது வெள்ளையினத்தவர்கள் நிறைந்த தேசியக் கட்சி (National Party) அரசு.
- 1950-ல் ‘தி க்ரூப் ஏரியாஸ் ஆக்ட்’ எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கறுப்பின மக்கள் கடுமையான அடக்குமுறையைச் சந்தித்தனர். வெள்ளையினத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வசிக்கக் கூடாது, நிலம் வைத்திருக்கக் கூடாது, தொழில் நடத்தக் கூடாது எனப் பல்வேறு ஒடுக்குமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
- இப்படியாக, அந்நாட்டின் மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த கறுப்பின மக்கள், வெள்ளையின சிறுபான்மையின அரசால் கொடுமைப்படுத்தப்பட்டனர்.
- இதற்குச் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தாலும் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசு பின்வாங்கவில்லை.
மண்டேலாவின் போர்க்குணம்
- அந்தக் காலகட்டத்தில்தான் மண்டேலா எனும் போராளி உருவாகிக்கொண்டிருந்தார். விட்வாட்டர்ஸ்ராண்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர் மண்டேலா. அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த ஒரே ஆப்பிரிக்கக் கறுப்பின மாணவர் அவர்தான் என்பதால் நிறவெறியின் கொடுமையை அதிகமாகவே எதிர்கொண்டார்.
- இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த அவர், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் (ஏஎன்சி) சேர்ந்தார்.
- ஆரம்பத்தில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக அமைதி வழியில்தான் போராடினார்.
- ஆனால், அடக்குமுறைதான் அரசின் பதிலாக இருந்தது. 1960-ல் நடந்த போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்துப் பெரும் போராட்டங்கள் நடந்தன.
- 1962 ஜனவரியில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் பிரிவான ‘உம்கோன்ட்டோ விசிஸ்வே’ (Umkhonto weSizwe) அமைப்புக்கு ஆதரவு திரட்ட ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மண்டேலா, பிரிட்டனுக்கும் சென்றிருந்தார். பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பியவருக்குச் சிறைவாசம்தான் காத்திருந்தது.
- ஆகஸ்ட் 5-ல், சக போராளியான சிசில் வில்லியம்ஸுடன் ஜோஹன்னர்ஸ்பர்க்கை நோக்கி வந்துகொண்டிருந்தபோது போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
- பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது, தொழிலாளர்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
சிறைத் தண்டனை
- இதற்கிடையே, நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வெர்வேர்டுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார் மண்டேலா. ஆனால், வெள்ளையின மேலாதிக்கத்தையே கொள்கையாகக் கொண்டிருந்த வெர்வேர்டு அரசு, அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
- 1962 அக்டோபர் 15-ல் வழக்கு விசாரணை தொடங்கியது. நவம்பர் 7-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மண்டேலாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
- ஆரம்பத்தில் பிரிட்டோரியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 1963 மே மாதம் ராபன் தீவுச் சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் பிரிட்டோரியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்.
- இதற்கிடையே, அரசுக்கு எதிராக நாச வேலையில் ஈடுபட்டதாக மண்டேலா உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில்தான் மண்டேலாவுக்கும் மற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ராபன் தீவுச் சிறைக்கு அவரும் மற்றவர்களும் கொண்டுசெல்லப்பட்டனர்.
சிறைக் கொடுமைகள்
- ராபன் தீவுச் சிறையில் மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வெள்ளையின வார்டன்கள் கொடுமையாகவே நடத்தினர். பத்திரிகைகள் வழங்கப்படவில்லை. மண்டேலா பல முறை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1968-ல் அவரது தாய் மரணமடைந்தார். அவரது மகன் தெம்பி ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள மண்டேலா அனுமதிக்கப்படவில்லை. அவரது இரண்டாவது மனைவி வின்னி மண்டேலாவும் போராளி என்பதால் அவரும் அடிக்கடி சிறை செல்ல நேர்ந்தது.
- மண்டேலாவின் மகள்கள் நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் அவரைச் சிறையில் சந்திக்க முடிந்தது. இப்படித் தனது குடும்பத்தைவிடவும் கறுப்பின மக்களின் விடுதலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் மண்டேலா.
- வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் அவர் வாழ்ந்தார். எனினும், அவரது பெயரையும் படத்தையும் வைத்து கறுப்பின மக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தனர்.
- 1982-ல், ராபன் தீவுச் சிறையிலிருந்து, கேப் டவுனில் உள்ள பால்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1988-ல் மேற்கு கேப் மாகாணத்தின் பார்ல் விக்டர் வெர்ஸ்டர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
- அங்கு 14 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த அவர், 1990 பிப்ரவரி 11-ல் விடுதலையானார். அந்தச் சிறையில் வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டன. எனினும், சிறை சிறைதானே!
நீண்ட விடுப்பு!
- மண்டேலா விடுதலையானபோது அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் சிறை வளாகத்துக்கு வெளியே காத்திருந்தார்கள். அந்த நிகழ்வை உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர்.
- சிறையில் இருந்ததற்கான வடுக்களை அவர் சுமந்து திரியவில்லை. தன்னைச் சிறையில் அடைத்திருந்தவர்களை அவர் விரோதிகளாகக் கருதவில்லை.
- சொல்லப்போனால் அவர்களை மன்னித்துவிட்டார். உள்ளுக்குள் பொங்கியெழும் அறச்சீற்றத்தை, மெலிதான நகைச்சுவை கலந்து, எதிராளியால் மறுக்க முடியாத அளவுக்கு உறுதியாகப் பேசுவார் மண்டேலா.
- தனது சிறைவாசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “27 ஆண்டுகளாக நீண்ட விடுப்பில் இருந்தேன்” என்று நகைச்சுவையாகச் சொல்வார். அதேசமயம், கறுப்பின மக்களின் விடுதலையே அவருக்குப் பிரதானமாக இருந்தது. மண்டேலா தொடர்பான வழக்கு விசாரணை நடந்த சமயத்தில், ‘வெள்ளையின மனிதரின் நீதிமன்றத்தில் ஒரு கறுப்பின மனிதன்’ எனும் அவரது நீதிமன்ற உரை பெரும் புகழ்பெற்றது.
- “தண்டனை முடிந்து வெளிவந்த பின்னர், அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். அநீதி முற்றிலும் ஒழிக்கப்படும்வரை போராடுவேன்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னாட்களில் அதைச் செய்தும் காட்டினார்.
வளர்ச்சிப் பாதையில் தென் ஆப்பிரிக்கா
- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறவெறிக்கு முடிவுரை எழுதப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்றார் மண்டேலா.
- வெள்ளையின சிறுபான்மை அரசு முடிவுக்கு வந்த பின்னர், இதுவரை 6 முறை தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல்களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது.
- நிறவெறி உச்சத்தில் இருந்த காலத்தில் அங்கு தொழில் செய்ய தயங்கிய பன்னாட்டு நிறுவனங்கள், மண்டேலா விடுதலை செய்யப்பட்ட பின்னர் அங்கு முதலீடு செய்ய முன்வந்தன.
- 1994-ல், 139.8 பில்லியன் டாலராக இருந்த தென்னாப்பிரிக்க ஜிடிபி 2018-ல் 368.9 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
- அதேசமயம், ஏற்றத்தாழ்வு இன்னமும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. 1 சதவீத மக்களின் கையில்தான் நாட்டின் வளத்தில் 70.9 சதவீதம் இருக்கிறது என்று உலக வங்கியே குறிப்பிட்டிருக்கிறது.
- இன்னமும் பெரும்பாலான நிலங்கள், பண்ணைகள் வெள்ளையினத்தவர்களிடம்தான் இருக்கின்றன. எனினும், வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
- அந்நாட்டில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. சுகாதார வசதிகளும் மோசமான நிலையிலேயே இருக்கின்றன.
- எனினும், கல்வித் துறையில் ஓரளவு வளர்ச்சி இருக்கவே செய்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 17 சதவீதம் ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஊடகச் சுதந்திரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பாகவே இருக்கிறது.
- எல்லாவற்றையும் கடந்து, ஒரு நாள் தென்னாப்பிரிக்காவும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் எனும் நம்பிக்கையை, மண்டேலா விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது கனவு நிறைவேறும் என்று நம்புவோம்!
நன்றி: தி இந்து (06-08-2020)