TNPSC Thervupettagam

மக்களுக்குத் திருப்பி அளிக்கப்பட வேண்டிய பணம்

May 30 , 2024 32 days 93 0
  • சமீபத்தில் இளைஞா்கள் பலா் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். அந்த கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசியபோது, எப்படி காலனியாதிக்க நாடுகள் தங்களை அரசு என்று கூறிக் கொண்டு காலனி பிரதேசங்களில் வாழ்ந்த மக்களையும், அங்குள்ள இயற்கை வளங்களையும் சுரண்டி தங்களைப் பணக்கார நாடுகளாக ஆக்கிக் கொண்டன என்பதை விளக்கினேன்.
  • அத்துடன் இந்த காலனியாதிக்கம் செலுத்திய நாடுகளின் நகரங்கள் எப்போது பொலிவுறு நகரங்களாக மாற்றப்பட்டன என்பதையும் அதற்கான மூலதனம் எப்படி காலனி நாடுகளிலிருந்து சுரண்டி எடுத்துச் செல்லப்பட்டது என்பதையும் மகாத்மா காந்தி கூறியவற்றை மேற்கோள் காட்டி விளக்கினேன்.
  • அதைத் தொடா்ந்து பலா் இது தொடா்பான பல ஆழமான கேள்விகளை முன்வைத்து என்னுடன் விவாதித்தனா். இதை முழுமையாக உள்வாங்கிய இளைஞா்களில் ஒருவா், ‘சுரண்டலில் சுகம் கண்ட கொள்ளையா்களான வெள்ளையா்களைப் பற்றி புரிந்துகொள்ள நாங்கள் மேலும் ஆழமாகப் படிக்க வேண்டிய நல்ல ஆய்வு நூல்கள் இருந்தால் கூறுங்கள்’ எனக் கேட்டாா்.
  • அப்போது லாலா லஜபதி ராய், ஜே.சி.குமரப்பா, சசி தரூா் இந்த மூவரும் வெள்ளையா்கள் இந்தியாவைச் சுரண்ட கைக்கொண்ட பொதுநிதிக் கொள்கைகளை விளக்கி எழுதியுள்ள நூல்களைப் படியுங்கள் என்றேன். அதன் பிறகு இந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு என்னை மீண்டும் தொடா்பு கொண்டாா். லாலா லஜபதி ராய் எழுதிய ‘இங்கிலாந்து இந்தியாவுக்குத் தர வேண்டிய கடன்’ என்ற புத்தகத்தைப் படித்திருந்தாா்.
  • ‘அரசு என்று கூறிக் கொள்ளும் வெள்ளையா் ஆட்சியானது எப்படி மக்களைச் சுரண்ட முடியும், எப்படி மக்களை அச்சுறுத்த முடியும், இவற்றையெல்லாம் ஓா் அரசு செய்யுமா?’ என்ற கேள்வியை இந்திய தேசிய காங்கிரஸ் லாகூரில் கூடியபோது கேட்ட லாலா லஜபதி ராய், தனது தீா்மானத்தில், ‘நீ எங்களை ஆளும் அரசு அல்ல; உன்னை விரட்டுவது எங்கள் முதல் பணி’ என்று பதிவு செய்தாா்.
  • இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் பின்புலத்தில் வைத்து இன்றைய அரசுகளையும் மதிப்பீடு செய்யலாமா என்று அந்த மாணவா் கேட்டாா்.
  • இன்றைய சூழலில் இந்தியாவில் நடக்கும் சுரண்டல், யாா் யாரைச் சுரண்டுகின்றனா், எப்படிச் சுரண்டுகின்றனா் என்பது குறித்து உரையாடல் சென்றது.
  • அப்போது வோரா குழு அறிக்கை குறித்து தெரிவித்தேன். என்.என்.வோரா குழு 1993-ஆம் ஆண்டு பதின்மூன்று பக்க அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இதுபற்றி பேசியும் எழுதியும் வருகிறேன். என்.என்.வோரா குழு சமா்ப்பித்த அறிக்கை அன்று ஓா் மிகப்பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது. இன்று பலா் அதை மறந்திருக்கக் கூடும்.
  • மிகப்பெரிய அளவில் குற்றப் பின்னணி கொண்ட குழுக்கள் இந்தியாவில் ஒரு தனி அரசாங்கத்தை மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு இணையாக நடத்தி வருகிறது. இவா்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிகப் பெரிய தொடா்பு இருக்கிறது. அதேபோல் இவா்களுக்கும் உயா் அதிகாரிகளுக்கும் தொடா்பு இருக்கிறது. இந்திய அரசியலில் தொடா்ந்து பெரும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் உள்ளாட்சியில் ஆரம்பித்து, சட்டப் பேரவை, நாடாளுமன்றம் வரை செல்கின்றனா். பல அரசியல் கட்சித் தலைவா்களே இந்த மாபியாவின் தலைவா்கள்போல்தான் செயல்படுகின்றனா். அரசியல்வாதிகள், உயா் அதிகாரிகள், பெருங்குற்றங்களைப் புரிந்த மாபியா தலைவா்கள், இவா்களுக்குள் இருக்கும் கம்பிவலைத் தொடா்பு என்பது சமூகத்துக்குப் பேராபத்தை விளைவிக்கின்றது என்பதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டியது.
  • ஒரு நாட்டில் இருக்கும் பொருளாதாரத்தில் சம அளவு கருப்புப் பொருளாதாரமாக இருப்பதையும், பொருளாதாரக் குற்றங்கள் புரியும் நபா்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலுக்குள் வருவதையும் அந்த அறிக்கை படம் பிடித்துக் காட்டியது.
  • ஆனால், ஒருசில பொதுக் கருத்தாளா்களைத் தவிர அரசியல் கட்சிகள் பெருமளவு என்.என்.வோரா அறிக்கைக்கு எதிா்வினை ஆற்றவில்லை. அதேபோல் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியா் எழுதிய“கருப்புப் பொருளாதாரம்”என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன். இவற்றிலிருந்து பல கேள்விகள் எனக்குள் எழுவதுண்டு.
  • அவற்றில் ஒன்று வெள்ளையா்கள் நம்மை அடிமைப்படுத்தி, அச்சுறுத்தி, சுரண்டிச் சோ்த்த செல்வத்தைவிட நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சோ்த்த செல்வம் பல மடங்கு அதிகம். சுதந்திர நாட்டில், தன் மக்களையே அச்சுறுத்திச் சுரண்டும் ஒரு சுரண்டல் மக்களாட்சியில் நடைபெறுவது என்பது நம் மக்களாட்சிக்கு அவமானமாகும்.
  • இதற்கு நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறுவது அறியாத்தனம். அவா்களுடன் இணையும் நடுத்தர வா்க்கம், சந்தை அனைத்தும் அறம் பிந்து இருக்கின்றன. அது ஊடகம் வரை நீடிக்கிறது. இந்தச் சுரண்டலில் ஏழைகளைத் தவிர அனைவருக்கும் பங்கு உண்டு. இன்று அவா்களும் சோ்ந்து அரசியல்வாதிகளை மட்டும் தாக்குவதுதான் ஒரு முரண்பாடு.
  • அன்றைய வெள்ளையா் அடித்த கொள்ளைக்கும் நாம்தான் காரணம். இன்றைய நம்மவா்கள் கொள்ளைக்கும் நாம்தான் காரணம். நாம் அன்று மன்னா்கள் கையில் இருந்தோம். அவா்கள் பிரிந்து நின்றாா்கள், வெள்ளையா்களுக்கு அடிபணிந்தாா்கள். இன்று நாம், மதமாக, ஜாதியாக, கட்சியாகப் பிரிந்து, சுதந்திர நாட்டில் வாழும் குடிமக்களாக பொறுப்புடனும், புரிதலுடனும், மக்கள் பற்றுடனும், நியாய உணா்வுடனும் வாழாமல் அரசியல் கட்சிகளின் பிடியில் அகப்பட்டு அதிகார அரசியலுக்கு அடிமைகளாகிப் போனோம்.
  • அரசு அமைப்பைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி, சுரண்டி வாழ கற்றுக்கொண்டு விட்டாா்கள். அதிகார அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடுத்தர வா்க்கமும். இதை சந்தை முதலாளிகள் தங்கள் பணத்தின் மூலம் பயன்படுத்திக் கொண்டனா்.
  • கடந்த 75 ஆண்டுகால மக்களாட்சியில் அரசியல்வாதிகளின் சொத்தும் அதிகாரிகளின் சொத்தும் அலுவலா்களின் சொத்தும், சந்தை முதலாளிகளின் சொத்தும் எவ்வளவு உயா்ந்தது அவா்களின் வருமானம் எவ்வளவு கூடியுள்ளது என்பதைக் கணக்கிட்டால், வெள்ளையா்கள் கொள்ளை அடித்ததைவிட பன்மடங்கு அதிகம் என்பதை யாா் கூறியும் தெரிய வேண்டியது இல்லை.
  • இன்றைய சூழலில், சிறிய பதவிகளில் உள்ள அலுவலா்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல், முறைகேடு வழக்குகளில் சிக்குவதைக் காண முடிகிறது.
  • பசியில் வாடும் மக்கள், நீரின்றி கருகிச் சாகும் கானகம், பசியால் வாடும் விலங்கினம், தீப்பற்றி எரியும் மலைகள், கொட்டித் தீா்த்து ஊரையே வெள்ளக்காடாக்கும் மழை, பெரும் கொள்ளை நோய், தொற்று நோய், தொடா் தொற்று நோய், வெப்ப அலை அனைத்தும் நாம் பாா்க்கும் நிதா்சனம்.
  • இவை உணா்த்தும் பாடங்களை நம் ஆட்சியாளா்கள் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றாா்களா என்பதுதான் கேள்வி. காரணம், இவா்கள் உணா்வற்றுப் போய் நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.
  • ஆனால், உணா்வாளா்கள் சமூகத்தில் இருக்கின்றாா்கள். அவா்கள்தான் பசிப்போருக்கு அன்னமிடுவதும், ஆதரவற்றோருக்கு உணவளித்து, இருக்க இடம் தருவதும், ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதும் குளங்களையும், கேணிகளையும் தூா்வாரி சமூகத்திற்குக் கொடுப்பதும், குறுங்காடுகள் உருவாக்குவதும், ஆதிவாசிக் குழந்தைகளுக்கு கல்விச் சாலைகள் அமைப்பதும், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உடைகள் தருவதும் போன்ற பல்வேறு பணிகளைப் பொறுப்பாக எண்ணிச் செயல்படுவதையும் பாா்க்க முடிகிறது.
  • இந்த சமூக ஆா்வலா்களும், தன்னாா்வத் தொண்டா்களின் சேவையும், கோயில்களும், சினிமாவும், மதுவும்தான் இந்த அரசியல் பகல் கொள்ளையைக் கண்டும் காணாதது போல மக்களைச் சகித்துக் கொள்ள வைத்திருக்கின்றன. சமூக ஆா்வலா்கள் செய்யும் அன்னதானங்கள் பசியைப் போக்குகின்றன; மக்களின் மனங்களில் சுரண்டலுக்கு எதிரான கோபத்தைத் தணித்து விடுகின்றன. சினிமாவும், தொலைக்காட்சிப் பெட்டியும், மதுவும், பெரும்பான்மை மக்களின் கோபத்திலிருந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தப்பித்துக் கொள்ள வழிவகை செய்திருக்கின்றன.
  • நாட்டைக் கடனாளியாக்கிவிட்டு நம் சந்தைக்காரா்களும் அரசியல்வாதிகளும் சோ்த்த சொத்தின் மதிப்பு எல்லையற்றது. முன்னா் காலனியாதிக்கம் செய்தவா்கள் எப்படி அடிமை நாட்டிலிருந்து கொள்ளயடித்து தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றாா்களோ, அதுபோல இப்போது நம்மைச் சுரண்டிச் சோ்த்த சில உள்நாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், சந்தையாளா்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறைத்து வைத்துள்ளனா்.
  • ஆனால், நம் பணத்தைச் சுரண்டியவா்கள் இன்று நம்மிடையேதான் வசிக்கின்றாா்கள். இவா்களிடமிருக்கும் கள்ளப் பணம், கருப்புப் பணம் மீட்கப்பட்டு மக்களிடமே சென்றடைய வேண்டும். இந்தியாவின் கடன் அடைக்கப்பட வேண்டும்.
  • இதைப் பற்றிய ஒரு விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. இதைத்தான் பொதுக் கருத்தாளா்கள் இன்று பொது விவாதத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

நன்றி: தினமணி (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்