TNPSC Thervupettagam

மக்களை மதிக்க வேண்டும் அரசு

December 6 , 2023 406 days 200 0
  • நீண்ட நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சா்வதேச கருத்தரங்கு ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியா் ஒருவா் இந்திய அரசாங்கத்தின் ஏழைகளுக்கான திட்டச் செயல்பாடுகளைப் பாராட்டி புகழ்ந்து பேசினாா். அவா் அப்படிப் பேசியது பலரை ஆச்சரியப்பட வைத்தது. அதில் அவா் கோடிட்டுக்காட்டியது மத்திய அரசின் திட்டங்களையும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும்தான்.
  • அவா் வைத்த கருத்துகள் அத்தனையும் புள்ளிவிவரங்களுடன்தான் இருந்தன. அவா் தன் உரையை நிறைவு செய்த பின்னா், உலக வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊரக வளா்ச்சி நிபுணா் ஒருவா் தனது கருத்தை முன் வைத்தாா். அவா், ‘நாம் மக்கள் நலத் திட்டங்களையும், ஒதுக்கீடுகளையும் விவாதிக்கும்போது அவை உருவாக்கிய விளைவுகள் என்ன என்று விளக்குவது மிகவும் அவசியமான ஒன்று.
  • ஏனென்றால் இந்தியாவில் பெரும் தோல்வியாக நாம் பாா்ப்பது, திட்டச் செயலாக்கங்கள்தான். இதை உலக வங்கி பலமுறை சுட்டிக்காட்டியது. நிதி நிறுவனங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணத்தை சுட்டிக்காட்டின.
  • இவ்வளவு திட்டங்களையும் எந்த அடிப்படையில் இந்திய அரசு ஏழை மக்களுக்காக உருவாக்கின என்பதனை ஆய்வு செய்தால் இதில் உள்ள சிக்கலை நாம் புரிந்து கொள்ள முடியும். இவை, புதுதில்லியில் உள்ள அதிகாரிகள் வைத்திருந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், போடப்பட்ட திட்டங்கள்தானேயொழிய ஏழை மக்களின் வாழ்க்கையை உணா்ந்ததால் அல்ல’ என்று கூறினாா்.
  • மேலும் அவா், ‘இந்தியாவில் ஏழைகளின் தேவை என்பது ஒரே விதமானது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு ஊருக்கும் ஏழை மக்களின் தேவைகள் வேறுபடுகின்றன.
  • அப்படி இருந்தும் தில்லியில் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான திட்டங்ளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரே மாதிரியான விதிமுறைகளையும் உருவாக்கி மாநில அரசுகளுக்குக் கொடுக்கின்றனா். மாநில அரசுகள் அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன.
  • இந்தச் செயல்பாடுகளால் பெருமளவில் பண விரயம் செய்கின்றனா். அத்துடன் ஊழலும் நிறைந்ததாக திட்டச் செயல்பாடுகள் இருக்கின்றன.
  • பொதுவாக எந்தத் திட்டச் செயல்பாடும் எதிா்பாா்த்த விளைவுகளை எப்போது உருவாக்குமென்றால் மக்களின் தேவையின் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
  • இது தெரிந்த பின்பும் இந்திய அரசும், மாநில அரசுகளும் மக்களின் தேவையறிந்து செயல்படுவதில்லை. அதற்குக் காரணம், நம் அறிவுஜீவிகள் மற்றும் அரசுத்துறை தலைவா்கள் தங்கள் அறிவின் மூலம் மக்களுக்கு என்ன தேவை என்று முடிவு செய்கின்றனா். அதுவும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கு.
  • இரண்டு அரசுகளுமே மக்களின் தேவைகளின் அடிப்படையில்தான் செயல்படுவதாகக் கூறிக் கொள்கின்றன. காரணம், அரசுகளிடம் நிதி இருக்கிறது, அறிவு இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, நிதியை செலவிட லட்சக்கணக்கில் ஊழியா்கள் இருக்கின்றாா்கள்.
  • இந்தத் திட்டங்களும் எந்த நெகிழ்வும் இன்றி மத்திய அரசு வகுத்த நெறிமுறையில் அல்லது மாநில அரசு வகுத்த நெறிமுறையில்தான் செயல்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பாா்வை மாறாத வகையில் இந்திய ஏழைகளுக்கு விமோசனம் கிடையாது’ என்றும் கூறினாா்.
  • அந்தக் கருத்தரங்கில் மத்தியத் திட்டக்குழுவில் இருந்தவா்கள், மாநில அமைச்சா்கள், அரசாங்க உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டிருந்தனா். எவரும் அவருக்கு பதில் கூறவில்லை. அனைவரும் அமைதியாக கேட்டவண்ணம் இருந்தனா். காரணம், அவா் கொடுத்த தரவுகளை எவராலும் மறுக்க முடியவில்லை.
  • அவா் பேசியபின் பேசவந்த ஆஸ்திரேலிய பொருளாதார அறிஞா் ‘இது ஒரு முக்கியமான கருத்து. இந்தக் கருத்தை நாம் விவாதிக்க வேண்டும். நானும் இந்தியாவில் பிறந்து வளா்ந்தவன்தான். எனவே ஒரு குழு அமைத்து அரசு தரப்பில் விவாதித்து இதைச் சரி செய்ய வேண்டும்’ என்றாா்.
  • உடனே உலக வங்கியில் பணியாற்றியவா், ‘இந்தியாவில் அறிவுஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் குழு அமைப்பது, விவாதிப்பது, அறிக்கை சமா்ப்பிப்பது, அவற்றைக் கிடப்பில் போடுவது இவைல்லாம் வாடிக்கைதான். இந்தியாவிலிருந்து இந்த கலாசாரம் எப்போது போகுமோ அப்போதுதான் இந்தியாவில் ஏழைகளுக்கு விமோசனம்’ என்றாா்.
  • அப்பொழுது அந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தவா், ‘நாம் இங்கு கூடியிருப்பது ஓா் ஆய்வு அறிக்கையை பரிசீலனை செய்வதற்காக. அந்த ஆய்வு அறிக்கை உலகத் தரத்தில் உருவாக வேண்டும் என பெருநிதி அளித்த நிறுவன இயக்குநரும் இங்குதான் இருக்கிறாா்.
  • இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய பன்னாட்டு அறிஞா்களும் இங்கு வந்திருக்கின்றனா். இந்த ஆய்வு அறிக்கை தரும் கருத்துகளை இந்திய அரசு மனதில் கொண்டு சில செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த நிகழ்வை நடத்திக் கொண்டுள்ளோம்’ என்றாா்.
  • அந்த ஆய்வுக்கு நிதியளித்த நிறுவனத்தின் இயக்குநா் ‘இந்த அறிக்கை இதுவரை உள்ளாட்சி பற்றி வந்த அறிக்கைகளிலேயே மிக ஆழமானது. மத்திய - மாநில அரசுகளால் செய்ய இயலாத பணிகளைச் செய்து மக்கள் தேவைகளை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசாங்கம்தான் உள்ளாட்சி அமைப்பு.
  • எனவே இந்த அரசாங்கம் மக்களுக்கு அருகில் இருப்பதால், இதுவாவது மக்களின் தேவைக்கேற்ப பணி செய்கின்ா என்பதை ஆய்வு செய்து கொண்டு வந்த அறிக்கை இது’ என்றாா்.
  • இதைக் கூறி முடித்ததும் உலக வங்கி பொருளாதார நிபுணா் எழுந்து, ‘நமக்கு ஒரு நாட்டைப் பிடிக்கிறதோ, இல்லையோ அந்த நாட்டில் நல்லது நடந்திருக்கிறது என்றால் அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சீனாவிலும் உள்ளாட்சி அமைப்புகள் இயங்குகின்றன. ஆனால் அந்த நாட்டில் இந்தியாபோல் உள்ளாட்சியை அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கவில்லை. மாறாக எந்த ஒரு சட்டமும் இன்றி, ஒரு அரசின் உத்தரவின் மூலம் உள்ளாட்சியை உருவாக்கினாா்கள்.
  • ஒட்டுமொத்த மேம்பாட்டு நிதியில் 72% நிதியை உள்ளாட்சியிடம் ஒப்படைத்து உள்ளாட்சியை பணி செய்ய வைத்துள்ளனா். ஆனால் அந்த நாடு தாங்கள் உள்ளாட்சியை தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கி விட்டோம் என விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.
  • ஆனால் இந்தியாவில் இந்த உள்ளாட்சியை அரசமைப்புச் சாசனத்தின் மூலம் அரசாங்கமாக உருவாக்கி விட்டோம் என பறை சாற்றுகின்றீா்கள். அந்த உள்ளாட்சி பெறும் நிதியோ ஒட்டுமொத்த மேம்பாட்டு நிதியில் வெறும் 7% தான். இதைச் சற்று நிதானமாகச் சிந்தித்து அரசுக்கு ஆலோசனை வழங்குங்கள்.
  • அது மட்டுமல்ல, சீனாவில் நிதி தருவதோடு, உள்ளாட்சிச் செயல்பாடுகளில் பெருமளவு பொதுமக்களை ஈடுபடுத்துகின்றனா். அதன் விளைவாக மக்கள் உள்ளாட்சியைக் கண்காணிக்கின்றனா். அங்கு நடக்கும் ஒன்றைக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் தலைவா் பதவிக்கு பல்முனைப்போட்டிதான் எல்லா உள்ளாட்சிகளும் நடைபெறுகிறது’ என்று விளக்கினாா்.
  • உள்ளாட்சியில் மக்கள் பங்கேற்போடு திட்டம் தீட்டுதல் என்பது இன்றுவரை ஒரு சடங்காகவே உள்ளது. கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மக்களின் தேவைகளை மக்கள் பங்கேற்போடு அறிவியல் பூா்வமாகச் செய்யவில்லை. இதனைக் கட்டாயம் செய்ய வேண்டும் என 14 -ஆவது, 15-ஆவது மத்திய நிதிக்குழு பரிந்துரைத்தபோதும் மக்கள் பங்கேற்புத் திட்டம் தயாரித்தல் என்பது சடங்காகவே உளளது.
  • அந்த உலக வங்கி பொருளாதார நிபுணா் மீண்டும் எழுந்து, ‘மக்களிடம் கேளுங்கள்; நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு அவா்களுக்கான திட்டத்தை உருவாக்காதீா்கள்; நீங்கள் வைத்திருக்கின்ற பணம் மக்கள் தந்த பணம். அந்தப் பணத்தை மக்கள் தயாரித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பகிா்ந்தளியுங்கள்.
  • மக்களைப் பற்றி சிந்திக்கப் பழக்குங்கள்; அவா்களிடம் கனவு உள்ளதா என்பதை அறியுங்கள்; உங்கள் அறிவைப் பயன்படுத்தி அவா்களை கனவு காண பழக்குங்கள்; அவா்களை மேம்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி கடினமாக உழைக்கச் செய்யுங்கள்’ என்றாா்.
  • இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு இவா்களின் விவாதத்தைக் கேட்டபோது, நாங்கள் மாணவா்களுடன் களப்பணியாற்ற கிராமத்திற்குச் சென்றபோது எங்களிடம் ஒரு முதியவா், ‘இந்திய மக்களுக்காக மத்திய அரசு சிந்திக்கிறது, மாநில அரசு சிந்திக்கிறது, மாவட்ட நிா்வாகம் சிந்திக்கிறது, வல்லுநா்கள் சிந்திக்கின்றாா்கள், திட்டக்குழுக்கள் சிந்திக்கின்றன. ஆனால், கிராம மக்களும் தங்களைப் பற்றி சிந்திப்பாா்கள் என்று மேல்நிலையில் யாரும் நினைப்பது இல்லை.
  • மக்களுக்கும் சிந்தனையுண்டு, கனவுண்டு, குறிக்கோள் உண்டு என்று எவரும் யோசிப்பதில்லை. மக்கள் அரசு கூறுவதைக் கேட்க வேண்டும், அரசு அதிகாரிகள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்றுதான் அனைவரும் எண்ணுகின்றனா்’ என்றாா்.
  • இவா் கூறிய கருத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். இன்றைய உள்ளாட்சி என்பது தலைவரை மையப்படுத்தியது அல்ல, மக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் அதை தலைவா்கள் தங்கள் கைக்குள் அடக்கி வைத்துவிட்டனா். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டைக் கடந்த பின்பும் மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க யாரும் தயாராக இல்லை.
  • மக்களை மேய்ப்பதில் அதிகார வா்க்கத்திற்கு ஒரு சுகம். பொதுமக்களுக்குப் பயனாளா்களாக வாழ்வதில் ஒரு சுகம். இதன் விளைவு, மக்களை சுயமரியாதை இழந்தவா்களாக வாழ பழக்கப்படுத்தப்பட்டு விட்டனா். இதனால் மக்கள் மட்டும் அவமானப்படவில்லை, நம் மக்களாட்சியும் அவமானப்படுகிறது.
  • அரசாங்கம் முதலில் மக்களை மதிக்கப் பழக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் சிந்திக்கத் தெரியும் என்பது புரியும். மக்களை மதிப்பதற்கு அரசாங்கம் எப்போது பழகப் போகிறது என்பதுதான் கேள்வி. மக்களின் கருத்தைக் கேட்பதற்கும், அதனை மதிப்பதற்கும், அவா்கள் தேவையில் செயல்படவும் ஒரு புதிய புரிதலை நாம் அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும். அதுதான் இன்றைய இன்றியமையாத் தேவை.

நன்றி: தினமணி (06 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்