TNPSC Thervupettagam

மக்களைத் தேடி மருத்துவம் என்பதன் மகத்துவம்

December 13 , 2021 965 days 553 0
  • நெடுங்காலமாக நமக்கான நலச்சவால் என்பது தொற்றாத வாழ்க்கைமுறை சார்ந்த நோய்க் கூட்டம் தான்.
  • சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 70 ஆண்டுகளில் தொற்றுநோய்களை சரியான தடுப்பூசிகள், எதிர் நுண்ணுயிரி மருந்துகள், இவை மட்டுமல்லாது பொதுச்சுகாதார மேம்பாடு, கல்வியிலும் வாழ்க்கையிலும் சமூகநீதியை வலியுறுத்திய நகர்வுகள், பெண்கல்வி என எல்லாமுமாகச் சேர்ந்து நம் தமிழ்நாட்டில் தொற்றுநோய்களைப் பெரிதும் கட்டுப் படுத்தியுள்ளன என்பது தெள்ளத் தெளிவு.
  • உலகச் சுகாதாரத் தரக் குறியீடு, நிதி ஆயோக் குறியீடு போன்றவற்றில் தமிழ்நாடு இதில் உயர்ந்து நிற்பதே இதற்கான ஆதாரம்.
  • தொற்றாத வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கான தடுப்பூசிகள், சரியான உணவும் வாழ்க்கைமுறையும் நோயின் தொடக்கத்திலேயே துல்லியமாகக் கணித்து மருத்துவம் செய்வதும் மட்டும்தான்.
  • சரியாக மருத்துவம் மேற்கொள்ளாதோரில், இந்த நோய்கள் ஏற்படுத்தும் பின்னூட்ட நோய்கள் ஏராளம். இளம் வயதில் வரும் மாரடைப்பு , பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, சில வகை புற்றுநோய்கள் எல்லாம் கட்டுப்படுத்தாத சர்க்கரையாலும் ரத்தக் கொதிப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம்

  • இந்த நோய்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, நோயின் தீவிரத்தைக் குறைக்க, பெரும் பொருட்செலவு தேவைப்படுவது வருத்தம் தரும் இன்னொரு உண்மை.
  • அரசுக்கும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் இந்தப் பண நெருக்கடி வருடாவருடம் அதிகரித்துவருகிறது. வாழ்க்கைமுறை சார்ந்த இந்தத் தொற்றா நோய்கள் முன்பு வயோதிகர்களுக்கு மட்டுமே ஏற்பட்டன.
  • ஆனால், இன்று முப்பதுகளில் இருப்போருக்கே அதிகம் வர ஆரம்பத்திருப்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
  • இவ்வயதினர்தான் அவர்களின் குடும்பத்தில், வாழும் சமூகத்தில் இன்னும் நாட்டுக்கு என்று அனைத்து வகையிலும் நல்ல வளர்ச்சியைத் தரக் கூடியவர்கள்.
  • நாற்பதுகளில் இந்த நோய்களிடம் சிக்குபவர்களுக்கு வரும் உடல்நல/ மனநலத் தொய்வால் இத்தனை வளர்ச்சியுமே பாதிப்புறும்
  • சமீபத்தில் வெளியான NFHS-5 தேசிய குடும்ப நல சர்வே-5, (ஜுன் 2019 மற்றும் ஏப்ரல் 2021) வெளியிட்டுள்ள முடிவுகள் நிறைய கவலைகளைத் தெரிவித்திருக்கின்றன.
  • கிட்டத்தட்ட 39.1% பெண்கள் மற்றும் 42.1% ஆண்களுக்கு சர்க்கரை அளவு 141-க்கு மேல் இருப்பதை, அந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் களப்பணியாளர்களின் ஆய்வு முடிவில், நோயுற்ற பலரும் சிகிச்சையைப் பாதியில் நிறுத்திக்கொண்டுவிடுவது, அக்கறையின்றி இருப்பது எல்லாம் உறுதியாகியுள்ளது.
  • அதே போல் முழுமையான தேசிய உணவியல் சர்வே (CNNS 2016 -18) இந்திய குழந்தைகளில் 5-9 வயதில் 6.3% பேரும் 7-19 வயதில் 7.8% பேரும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ள குழந்தைகளாக இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
  • கூடவே 5.3% குழந்தைகள் அதிரத்தக் கொதிப்பை ஏற்படும் வாய்ப்புடையவர்கள் என்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது.
  • சரியான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், விளையாட்டு உள்ளிட்ட வாழ்க்கைமுறைகள் மட்டுமே இவர்களைப் பிற்காலத்தில் சர்க்கரை நோயாளிகளாக மாற்றாமல் இருக்கும்.
  • தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு படுக்கைக்கு மேலான நிலையில் உள்மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருந்தபோதிலும், வருடாவருடம் பெருகிவரும் சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்க் கூட்டங்களுக்கு நிச்சயம் இந்தப் படுக்கை வசதிகள் போதாது.
  • கூடவே, வெறும் 10.3% சர்க்கரை நோயாளி மக்கள் மட்டுமே அதனைக் கட்டுக்குள்ளும் 7.3% பேர் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்ளும் வைத்துள்ளனர் என அந்த சர்வே தெரிவிக்கிறது.
  • காரணம், பலரும் பல்வேறு காரணங்களால், சிகிச்சை எடுக்காமல் இருப்பது, சிகிச்சையைப் பாதியில் விடுவது என்று இருக்கிறார்கள்.
  • கட்டுப்படுத்தியிருக்கும் நோயாளிகளைத் தவிர மீதமுள்ள 88-90% மக்களுக்கு, அடுத்த 10-15 ஆண்டுகளில், மாரடைப்பு, சிறுநீரக நோய் அல்லது பக்கவாதம் வரும் வாய்ப்பு 30%-க்கு மேலாக அதிகம் என்கிறது மருத்துவ ஆய்வு முடிவுகள்.
  • இந்தச் சிக்கலைத் தவிர்க்க ஆரம்பத்திலிருந்தே சரியான மருத்துவ சிகிச்சை, சரியான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி ஆகியவை ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம்.
  • இதை கருத்தில் கொண்டே, தமிழ்நாட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ‘ஆரம்பக் கட்டத்திலேயே நோய்க் கணிப்பு’, ‘சரியான சிகிச்சை’, ‘குறிப்பிட்ட கால இடைவெளியில் நோய்க் கண்காணிப்பு’ என அத்தனையும் மக்களின் இல்லம் தேடிச்சென்று நடக்கின்றன.
  • இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, டிசம்பர் 3-க்குள் 38,47, 770 புதிய நோயாளிகளுக்கும் 14,67,505 பழைய நோயாளிகளுக்கும் வீடு தேடிச் சென்று, சர்க்கரை நோய்க்கும் ரத்தக் கொதிப்புக்குமான உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • இத்திட்டம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் மருந்துகள், இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி), அவசியப்படுவோருக்கு பெரிடோனொயல் டயாலிசிஸ் பைகள் என அத்தனையும் வழங்கப்படுகின்றன.
  • அவசியப்படும் சமயத்தில் உடனடியாக உயர் நிலை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • நோய் முற்றியவர்களுக்கு மருத்துகளுடன் பேலியேடிவ் எனப்படும் வலிநிவாரணச் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை என அனைத்தும் கிடைப்பதற்காகக் கிராம மருத்துவச் செவிலியர்கள் தொடங்கி, அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையப் பணியாளர்களும் மருத்துவர்களும் பணியாற்றுகின்றனர்.
  • இப்படியான, பெரும் முன்னெடுப்பு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.
  • தேசிய மாதிரிகள் ஆய்வு -75 ம் சுற்று முடிவில் (NHS-75th round) தேசிய அளவில் 2018-ம் ஆண்டுக்கான மருத்துவச் செலவினங்கள் கணக்கிடப்பட்டன.
  • சர்க்கரை உள்ளிட்ட ’வளர்சிதை மாற்ற நாளமில்லாச் சுரப்பி குறைபாடு’களுக்கு (metabolic endocrine disorders) மட்டும் அரசு ரூ. 861.1 கோடியும் தனியார் 29,889 கோடியும் செலவிடுகிறார்கள்.
  • இதய நோய்களுக்கு அரசுக்கு ரூ. 1,599 கோடியும், தனியாருக்கு ரூ42,134 கோடியும் செலவாகிறதாம். இதில் வெளி நோயாளிகள், அவர்கள் வாங்கும் மருந்துகளின் செலவெல்லாம் சேரவில்லை.
  • கட்டுப்பாடு இல்லாத, தொற்றாத வாழ்க்கைமுறை நோய்கள் உருவாக்கும் உளவியல் சிக்கல்களும் ஏராளம். இளவயதில் பணிச் சுமைக்கிடையே வரும் உடல்சோர்வும் நெருக்கடியும் ஒருபுறம், எரிச்சல் மனோபாவத்தில் உமிழும் கடுஞ்சொற்களால் குடும்பத்தில் உருவாகும் நெருக்கடி இன்னொருபுறம் என உளவியல் நோய்களுக்கும் இவை வழிவகுத்துவிடும்.
  • வயோதிகத்தில் இந்நோய்க் கூட்டத்தின் பின்னூட்டமாக இணையும் சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் முதலிய நோய்களில் ஒருவேளை குடும்ப அரவணைப்பு இல்லாது போகும்போது பொருளாதாரச் சிக்கல்கள், உளவியல் தாக்கங்கள் எனப் பல சிரமங்கள் எழக்கூடும்.
  • மக்களைத் தேடி மருத்துவம் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு, வடிவமைக்கப்பட்ட நலவாழ்வுத் திட்டம். சர்க்கரை, ரத்தக் கொதிப்பு இரண்டு நோய்களை ஆரம்பத்திலேயே கணித்தல், சரியான சிகிச்சையை இடையில் நிறுத்தாமல் எடுத்தல், உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் முழுமையான அக்கறை இவை மட்டுமே மேற்கூறிய அத்தனை செலவினங்களையும் அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் குறைக்கும்.
  • கூடுதல் அக்கறைதான் தற்போதைய அவசர, அவசியத் தேவை. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் தமிழ்நாட்டு அரசின் இந்த முன்னெடுப்பு அந்த அக்கறையைக் கொண்டே, மருந்துகளுடனும் அன்புடனும் இல்லம் தேடி தினமும் வருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்