TNPSC Thervupettagam

மக்கள் சக்தி களமிறங்கட்டும்

July 14 , 2020 1473 days 704 0
  • பெரிய சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நகரங்கள் கரோனாவுக்கான கதவைத் திறந்துவிட்டன. தற்போது அழையா விருந்தாளியான கரோனாவை அந்த நகரங்கள் வெளியேற்ற பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

  • அந்த வைரஸ் தற்போது பாதம் பதித்துள்ள இந்தியாவின் மற்ற பகுதிகளும் தங்களைக் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கின்றன. கிராமப்புற இந்தியாவும் கிழக்கு, வடகிழக்கு இந்தியாவும் இதில் உள்ளடங்கும். ஆகவே, உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப, இந்தியா முழுவதுக்குமான தற்காப்பு தேவை.

  • பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமப் பகுதிகள் போன்றவற்றில் வெவ்வேறு அளவுக்குத் தொற்று இருப்பதால் வேறுபட்ட அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

  • நகர்ப்புறத்தில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே நோயைக் கட்டுப்படுத்துவது ஒரு சவால். இந்த வைரஸ் இன்னும் அவ்வளவாகப் பாதிப்பை ஏற்படுத்தியிராத, ஆனால் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஏனைய பகுதிகளைப் பாதுகாப்பது மற்றுமொரு சவால்.

  • பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட களைப்பும், பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் ஏக்கமும் இருந்தாலும், நியூசிலாந்து மாதிரியோ வியத்நாம் மாதிரியோ கரோனாவை வெற்றிகொள்வதற்கு முன்பு நாம் பல போர்களை நடத்த வேண்டியிருக்கும்.

சமூக வளங்களைப் பயன்படுத்துவோம்

  • மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் முறையிலிருந்து நாம் விலகிச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. பரிசோதனை, தனிமைப்படுத்தல் தொடங்கி பொதுமக்களின் மேம்பட்ட விழிப்புணர்வு, தற்காப்பு நடவடிக்கைகள் வரை வெற்றிகரமாகச் செயல்படுவதில் நாம் நமது சமூக வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • இதுவரை தன்னார்வலர் குழுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் பலம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

  • கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் திறம்படச் செயல்படுவதைக் கேரளத்திலும் ஒடிஷாவிலும் காண முடிகிறது. ஆந்திர பிரதேசமும் கிராமங்கள், வட்டங்கள் அளவில் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

  • நாமும் இதையெல்லாம் பின்பற்றலாம். நோயாளிகள் தாங்களாகவே மருத்துவமனைக்கு வருவதை மட்டுமே நம்பியிருந்தால் குறைந்த அளவே வெற்றி கிடைக்கும். பிறரால் வெறுத்து ஒதுக்கப்படுவது, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுதல் குறித்த அச்சம் போன்றவை நோயாளிகள் தாங்களாகவே மருத்துவமனைக்கு வருவதைத் தடுக்கின்றன.

  • இன்ஃப்ளூயன்ஸா போன்றவற்றையும், கரோனாவின் பிற அறிகுறிகளையும் நாமாகக் கண்டறிந்து, நோயாளிகளின் வீட்டிலேயே பரிசோதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • ஏற்கெனவே அதிக பணிச்சுமையால் திணறிக்கொண்டிருக்கும் அங்கீகாரம் பெற்ற சமூக மருத்துவப் பணியாளர்களையே (ஆஷா) அதிகம் சார்ந்திராமல், முதற்கட்டப் பரிசோதனைகளைத் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு செய்யச்சொல்லலாம்.

  • வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்ட, மெலிதான கரோனா அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கும் மருத்துவக் கட்டமைப்புக்கும் இடையிலான பாலமாக அதுபோன்ற தன்னார்வலர்கள் இருப்பார்கள்.

  • இளம் தன்னார்வலர்களுக்கு வெப்பமானியும் விரல்நுனி நாடி ஆக்ஸிமீட்டரும் கொடுக்கலாம். ஒவ்வொரு தன்னார்வலரும் தொற்றுக்களைக் கண்டறிவதற்காகவும் அதற்குப் பிந்தைய நடைமுறைகளுக்காகவும் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட 50 வீடுகளுக்குத் தினமும் செல்லலாம். தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு உடல்நிலை மோசமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அவர் உதவுவார்.

மாணவர் படை

  • இப்படி எளிதில் பயிற்சி தரத் தக்க, கட்டுக்கோப்பான, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்களை எங்கு கண்டறிவது? நாட்டு நலப்பணித் திட்டமானது (என்.எஸ்.எஸ்.) இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

  • மகாத்மா காந்தியின் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ‘நாட்டு நலப்பணித் திட்டம்’ அவரது 150-வது ஆண்டில் தனது செயல்திறனை நிரூபிக்கலாம்.

  • தேசிய மாணவர் படை (என்.சி.சி.) பாதுகாப்புத் துறையின் வழிகாட்டலில் இயங்குகிறது. இந்த இளைஞர் குழுக்களையெல்லாம் களத்தில் இறக்கிவிடலாம்.

  • முதியோர்கள், வேறு நோய்களுடன் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் பயிற்சியளிக்கலாம்.

  • திறன்பெற்ற மருத்துவப் பணியாளர்கள் போதிய அளவு இல்லை என்ற பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்றாலும் இடைவெளி இல்லாமல் பணியைச் செய்ததாலும் முன்களத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

  • சமீபத்தில் படிப்பை முடித்திருக்கும் மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்துவதற்காகவும், பொதுமுடக்கத்தால் தங்கள் மருத்துவ நிலையங்களை மூடியிருக்கும் தனியார் மருத்துவர்களை ஈர்ப்பதற்காகவும் தேசிய மருத்துவத் திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு மட்டும் செயல்படக் கூடிய குறுகிய கால ‘சர்வீஸ் கமிஷ’னை அரசு உருவாக்கலாம். இந்தத் தற்காலிக நடவடிக்கைகள் விரிவானதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான எதிர்கால மருத்துவப் பணியாளர் கட்டமைப்புக்கு அடித்தளம் இடக் கூடும்.

மக்களின் கூட்டுப் பாதுகாப்பு

  • மருத்துவ விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நாம் மேற்கொள்ள வேண்டும், வெகு மக்கள் ஊடகங்கள் வழியாக மட்டுமல்ல உள்ளூர்த் தலைவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

  • மகளிர் சுயஉதவிக் குழுக்களில் ஆரம்பித்து குடியிருப்போர் நலச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் உள்ளிட்டவை தங்கள் உறுப்பினர்களுக்கும் ஏனையோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தக் குழுக்களைப் பிரச்சாரக் களத்தில் இறக்கிவிடலாம்.

  • நோய்ப்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் தொற்றுகளைக் குறைப்பதற்குப் பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் அதே நேரத்தில், பரவலைத் தடுப்பதற்கு நுண்-கண்காணிப்பு முயற்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

  • சேரிகள் போன்ற இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது கடினமாக இருக்கலாம்; ஆனால், முகக்கவசங்களும் கைகழுவுவதும் பெரிய அளவில் மக்களைப் பாதுகாக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் லாரிகளுக்கு நகராட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • சமூகத்தின் அனைத்துத் தரப்புகளையும் கரோனா அச்சுறுத்துகிறது. சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக மட்டுமே அதை எதிர்த்துப் போராட முடியும். வைரஸுக்கு எதிராக மக்கள் சக்தியைப் பயன்படுத்த வேண்டிய தருணம் இது.

  • இதற்கு, தொண்டுநிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பை அரசு வரவேற்க வேண்டியது அவசியம். மேலும், ‘மக்கள் பங்கேற்புடன் கூடிய பொது சுகாதார’ மாதிரியை அரசு உருவாக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (14-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்