மக்கள் தொண்டு முருகன் தொண்டு
- ஆன்மிக நாட்டமும் சமூகநல அக்கறையும் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடியார்கள் பலர் நமது மண்ணில் வாழ்ந்தனர். சமூகமோ, அரசோ தடம் மாறும்போது, அதைத் திருத்துவது தம் கடமை எனவும் அவர்கள் எண்ணினர். இந்தப் பண்புகளுக்கு உடனடி உதாரணங்களாக ராமலிங்க வள்ளலார், குன்றக்குடி அடிகளார் எனச் சில ஆன்றோர்கள் நமது நினைவுக்கு வருவர். முருகனடியார்கள் வரிசையில் அத்தகைய ஆளுமைகள் சிலரைக் காண முடியும்.
ஓலைச்சுவடியில் உறங்கும் பாடல்கள்
- திருநெல்வேலியில் 1839இல் பிறந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். மிக இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. தண்டபாணி சுவாமிகள், திருவாமாத்தூரில் கௌமார மடத்தை நிறுவினார். பல வகையான யாப்பு வடிவங்களில் செய்யுள்களை இயற்றினார். வண்ணம் என்கிற வடிவத்தில் பாடல் இயற்றும் தேர்ச்சி பெற்றிருந்ததால், ‘வண்ணச்சரபம்’ என்கிற அடைமொழியைப் பெற்றார். 1898இல் இறந்தார். இவர் எழுதிய ‘புலவர் புராணம்’ 72 புலவர்களின் வரலாற்றைப் பதிவுசெய்கிறது. தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். தமிழ் எழுத்துகளின் இயல்பை உணர்த்தும்விதத்தில் வருக்கக் குறள் என்கிற நூலும் உதடுகளைக் குவித்து உச்சரிக்கப்படும் தமிழ் எழுத்துகளைக் குறித்து குவிபா ஒருபது என்னும் நூலும் தமிழ் அலங்காரம் என்கிற நூலும் இவர் எழுதியவை.
- ஆங்கிலேயர்களை எதிர்த்து இவர் பாடிய நூல், ‘ஆங்கிலியர் அந்தாதி.’ சைவம், வைணவம் என இரண்டு பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஒரு கையில் சூலச் சின்னமும் இன்னொரு கையில் சக்கரச் சின்னமும் வரைந்திருப்பார். சாதியின் பெயரால் பிரிவினைக்கு உள்ளாகாதிருப்பது, கைம்பெண் திருமணம் போன்றவற்றைத் தன் பாடல்கள் வழியே இவர் ஆதரித்தார். இவர் எழுதிய பாடல்களில் சரிபாதி இன்னும் அச்சேறவில்லை. அவை இன்னும் ஓலைச்சுவடிகளாகவே கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை அச்சில் ஏற்றி நூல்களாகக் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரையைத் துதிக்காதீர்
- 1870இல் பவானி அருகில் உள்ள பூதநாச்சி என்னும் ஊரில் பிறந்தவர் திருப்புகழ் சுவாமிகள். இவருக்கு வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் எனவும் பெயர் உண்டு. படிப்பில் நாட்டம் இல்லாததால், தொடக்கக் கல்வியைக்கூட இவர் பெறவில்லை. இல்லற வாழ்க்கையில் துயரமும் வயிற்றுவலியும் இவரை வருத்தின. பழநியில் உள்ள முருகன் கோயில் அருகே நீண்ட காலம் தங்கி, இறைவனுக்குப் பணிசெய்து, நிவேதனப் பொருள்களை உண்டு வந்த இவருக்கு வயிற்று வலி நீங்கியது. அங்கே ‘திருப்புகழ்’ பாடப்படுவதைக் கேட்டு, அதைப் பாடும் ஆவலும் இவருக்கு ஏற்பட்டது. திருப்புகழைப் பரப்பும் பணியில் ஈடுபட்டார். தமிழகத்தின் பல பகுதிகளுக்குத் திருப்புகழ் பாடல்களைக் கொண்டுசேர்த்ததால், இவர் ‘திருப்புகழ்’ சுவாமி என அழைக்கப்பட்டார். இவர் அமைத்த ஆசிரமம், வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலையில் உள்ளது.
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில் துரைமார்களின் வீட்டுக்குச் சென்று அரசு ஊழியர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட மக்கள் வாழ்த்தும் வழக்கம் இருந்தது. ஆங்கிலேயர் மீதான அடிமைத்தனத்தை வளர்க்கும் இந்த வழக்கத்தை திருப்புகழ் சுவாமிகள் எதிர்த்தார். புத்தாண்டு அன்று துரையைக் காண்பதற்குப் பதிலாக முருகன் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை இவர் அறிமுகப்படுத்தினார். அதைச் செயல்படுத்தும்விதமாகத் தம்மைப் பின்பற்றுவோர் சிலருடன், 1918இல் புத்தாண்டு அன்று திருத்தணி கோயிலுக்குச் சென்று திருப்புகழ் பாடி வழிபட்டார். அந்த வழக்கம், ‘திருத்தணி படி விழா’ என்ற பெயரில் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பக்தர்களால் நடத்தப்படுகிறது. அந்த வழக்கத்துக்குப் பின்னணி, ஆங்கிலேயர் ஆட்சிக்கான எதிர்ப்புதான்.
தனித்தமிழ் நாட்டம்
- ராமநாதபுரம் அருகில் உள்ள பாம்பனில் பிறந்தவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இவரது இயற்பெயர் அப்பாவு. இவர் 1848இல் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது. தமிழ், வடமொழி இரண்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய பல நூல்களில் ‘சண்முகக் கவசம்’ பக்தர்களிடையே போற்றப்படும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நேரும் கேடுகள் வாராமல் முருகன் காக்க வேண்டும் என இப்பாடல் வழியே வேண்டப்படுகிறது. வட மொழியில் பாடல்கள் எழுதியிருப்பினும், தாய்மொழியான தமிழைப் போற்றுபவராக பாம்பன் சுவாமிகள் இருந்தார். தமிழும் வட மொழியும் கலவாமல் எழுத்துநடை சாத்தியமற்ற அக்காலத்தில், வட மொழிச் சொற்கள் சிறிதும் இன்றி தமிழ்ச் சொற்கள் மட்டுமே கொண்டு ‘சேந்தன் செந்தமிழ்’ என்கிற நூலை இவர் இயற்றினார். 1906இல் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிற மொழிச் சொற்கள் கலவாமல் எழுதும் போக்குக்கு இவர் முன்னோடி எனலாம்.
- பூஜை, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டுக் கடவுளை அணுகும் பார்வை இந்த அடியார்களுக்கு இருந்தது. கடவுளுக்குச் செய்யும் தொண்டும், சமூகத்துக்குச் செய்யும் தொண்டும் வேறு வேறு இல்லை என்பதே இவர்களது வாழ்க்கையின் சாரம். இத்தகைய ஆன்றோரின் கருத்துகளுக்குப் பொருத்தமான துறைகளில் இடமளிப்பதை அரசு தன் கொள்கையாகக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ அமைய வேண்டும். கடவுள் தொண்டுடன், சமூகத் தொண்டுக்கும் பேர் போன முருக மடங்களின் இன்றைய நிலையைக் கவனித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலிருந்து அரசு தன் பணியைத் தொடங்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 08 – 2024)