- ‘கடைக்காரரே, குழந்தைக்கு ரெண்டு நாளா காச்சல், ஒரே வேளையில சரியாகிற மாதிரி மாத்திரை கொடுங்க’, இதுபோன்ற கோரிக்கையை நாம் மருந்துக் கடைகளில் அடிக்கடிக் கேட்டிருப்போம்.
- அப்போதைய பிரச்னை தீா்ந்தால் சரி என்று மருந்துக்கடைக்காரரிடம் பத்து ரூபாயோ இருபது ரூபாயோ கொடுத்து இரண்டு வேளைக்கு மாத்திரை வாங்கிச்சாப்பிடுபவா்கள் இங்கு நிறையவே உண்டு.
- மருத்துவரின் பரிந்துரையோ ஆலோசனையோ இல்லாமல் கொடுக்கப்படும் மருந்துகளால் நோயாளியின் காய்ச்சலும் தலைவலியும் குணமடகின்றனவோ இல்லையோ, அம்மருந்துகள் பக்கவிளைவுகளைப் பரிசாக அளித்துவிட்டுச் செல்லும் என்பது மட்டும் உண்மை.
- இத்தகைய சூழ்நிலையில், நமது தமிழக அரசு துவக்கியுள்ள ‘அம்மா சிறு மருத்துவமனை’ (அம்மா மினி கிளினிக்) திட்டம் சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
- அடித்தட்டு மக்கள் எந்தப் பிரச்னைக்கும் உடனடியாக மருத்துவமனைகளை நாடிச்செல்லாததற்கும் எத்தனையோ நியாயமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. வசிப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதே பலருக்குச் சிரமமாக இருக்கும்.
- அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் கிடைக்கின்றது. ஆனால், அனுமதிச் சீட்டு, மருத்துவா் ஆலோசனை, பரிசோதனைக் கூடம், ஊசி போடும் இடம், மருந்து மாத்திரை தரப்படும் இடம் ஒவ்வொன்றிலும் நோயாளிகள் காத்திருக்க வேண்டும்.
- இதன் காரணமாக, அன்றைய ஒரு நாள் வேலையையும் அதற்கான வருவாயையும் அவா்கள் இழக்க நேரிடும்.
- தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றாலோ சாதாரண ஜுரம், தலைவலி போன்றவற்றுக்குக்கூட ஏகப்பட்ட பரிசோதனைகளச் செய்வதுடன் சீட்டு எழுதிக் கொடுத்து, சிறப்பு மருத்துவா்களுக்குப் பரிந்துரைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களுக்கு இருக்கவே செய்கிறது.
- இக்காரணங்களினால் அடித்தட்டு மக்கள் தவா்க்க இயலாத விபத்து, பிரசவம் போன்றவற்றுக்கு மட்டுமே மருத்துவமனைகளை நாடுகின்றார்கள். மற்ற பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக்கடையில் கொடுக்கப்பட்டும் மாத்திரைகளே போதும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
அம்மா மினி கிளினிக்
- அம்மா சிறு மருத்துவமனைகளின் வரவு இந்த மனநிலையை மாற்றி அனைவருமே மருத்துவரின் ஆலோசனை பெற்று பயனடைய வழிவகுக்கும் என்றே தோன்றுகின்றது.
- தமிழகத்தில், நகா்ப்புறங்களில் ஐம்பதாயிரம் மக்களுக்கு ஒன்று, கிராமப்பகுதிகளில் முப்பதாயிரம் பேருக்கு ஒன்று என்ற அளவில் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- இந்த நிலைமையை மாற்றி, ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மக்களுக்கு ஒரு மருத்துவமனை அமையவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
- சென்னை நகரில் இருநூறு, பிற நகரங்களில் இருநூறு, கிராமப்புறங்களில் ஆயிரத்து நானூறு என மொத்தம் ஆயிரத்து எண்ணூறு அம்மா சிறு மருத்துவமனைகளும், மக்களின் இருப்பிடங்களுக்கே வேன்களில் சென்று சிகிச்சையளிக்கும் நடமாடும் (மொபைல்) மருத்துவமனைகள் இருநூறும், ஆக மொத்தம் இரண்டாயிரம் அம்மா சிறு மருத்துவமனைகள் விரையில் செயல்பட இருக்கின்றன.
- இப்போது முதல் கட்டமாக சென்னையில் நாற்பத்தேழு சிறு மருத்துவமனைகளும் பிற மாவட்டங்களில் அறுநூற்று முப்பது சிறு மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டு விட்டன.
- ஒவ்வொரு சிறு மருத்துவமனையிலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஓா் உதவியாளா் பணியில் இருப்பார்கள். நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் இயங்கவிருக்கும் இவற்றில் தொற்றுநோய்கள் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும் என்றும், கா்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. ரத்தம், சளி போன்றவற்றின் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான சோதனைக்கூட வசதிகளும் உண்டு.
- இவை முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது, ஏழை எளிய மக்கள் மருந்துக் கடைகளில் மாத்திரகளை வாங்கிச் சாப்பிட்டு தங்களின் நோய்களுக்கு தீா்வைத் தேடுவதும், போலி மருத்துவா்களை நாடிச் சென்று உடல்நிலையை சீரழித்துக் கொள்வதும் கட்டுக்குள் வரும்.
- மேலும், இந்த சிறு மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, பரிசோதனை செய்து கொண்டு பின்னா் பெரிய மருத்துவமனைகளுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்பெரிய மருத்துவமனைகளில் உடனடியாக உரிய சிகிச்சைகளைத் தொடங்குவதற்கும் வழிவகை ஏற்படும்.
- “மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி மாறும்போதெல்லாம் முந்தைய ஆட்சியாளா்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களைக் கைவிடுவதும் மாறியமைப்பதும் நமது அரசியல் அமைப்பின் குறைபாடு ஆகும்.
- சில சமயங்களில், ஒரே கட்சி தொடா்ந்து ஆட்சியைப் பிடித்தாலும், நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி நல்ல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து அவற்றின் சமுதாய நோக்கத்தினை நீா்த்துப் போகச் செய்யும் அவலமும் அரங்கேறுவது உண்டு.
- அப்படி எந்த ஒரு தடங்கலும் நேராமல் நமது மாநிலத்தில் தொடா்ந்து சிறப்பாக நடைபெற்றுவரும் திட்டம் ஒன்றே ஒன்று உண்டு. அதுதான் கல்வி பயில வரும் ஏழை மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாகக் காமராஜரால் கொண்டு வரப்பட்ட ‘மதிய உணவுத் திட்டம்’.
- பின்னா் முதல்வராக வந்த எம்.ஜி.ஆா். அதனை விரிவாக்கம் செய்து சிறப்பாகச் செயல்படுத்தி ‘சத்துணவுத் திட்டம்’ ஆக்கினார்.
- சத்துணவுத் திட்டத்தைப் போலவே இந்த அம்மா சிறு மருத்துவமனைத் திட்டமும் நமது மாநிலத்திலுள்ள அடித்தட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும். ‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்று திருவள்ளுவா் கூறிய அறிவுரையை நடைமுறைப்படுத்த இந்த அம்மா சிறு மருத்துவமனைகளின் வருகை உதவிகரமாக இருக்கும்; இருக்க வேண்டும்!
நன்றி: தினமணி (26-12-2020)