TNPSC Thervupettagam

மக்கள் நல்வாழ்வில் இரண்டாம் இடம்: பெருமையும் பின்னடைவுகளும்

December 30 , 2021 948 days 419 0
  • நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2019-20-ம் ஆண்டுக்கான சுகாதாரக் குறியீடுகளில் 19 பெரிய மாநிலங்களில் கேரளத்தையடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், உலக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக் மேற்கொண்ட இந்த ஆய்வில் 2018-19-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
  • குழந்தைகள் பிறப்பு விகிதம், பிரசவ இறப்பு விகிதம், பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதம், முழுமையான அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள விகிதம், மருத்துவமனைகளில் நடந்த பிரசவங்களின் விகிதம், கண்டறியப்பட்டுள்ள காசநோய் பாதிப்புகள், அந்நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களின் விகிதம், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு முதலியவற்றை அளவீடுகளாகக் கொண்டே மக்கள் நல்வாழ்வில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு 1 புள்ளி குறைந்துள்ளது; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் 2 புள்ளிகள் குறைந்துள்ளது; பிரசவ இறப்பு வீதம் 3 புள்ளிகள் குறைந்துள்ளது.
  • இந்தப் பின்னடைவு அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிசெய்யப்பட வேண்டியவை. காசநோயைக் கண்டறிவதிலும் முழுமையாகக் குணப்படுத்துவதிலும் தமிழ்நாட்டின் நிலை திருப்திகரமான அளவில் உள்ளது.
  • அது போலவே, எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளும் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே உள்ளன. கருவுற்ற பெண்களுக்கான சிகிச்சைகள், நவீனக் கருத்தடை முறைகளைப் பின்பற்றுதல் ஆகிய அளவீடுகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்றாலும் பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களைக் கவனிப்பதில் பின்தங்கியே உள்ளது.
  • தமிழ்நாடு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் இந்த அளவீடுகள் உணர்த்துகின்றன. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் விகிதமானது தமிழ்நாட்டில் 85.16%-ஆக உள்ளது.
  • மகாராஷ்டிரத்தில் இது 98.94% -ஆகவும் உத்தர பிரதேசத்தில் 95.99% -ஆகவும் உள்ளது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 83.87% என்ற அளவில்தான் உள்ளது. தெலங்கானாவில் இந்த விகிதம் 96.31% -ஆக உள்ளது.
  • பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதம், அதாவது பிறக்கும் 1,000 ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
  • 2018-19-ல் 907 ஆக இருந்த பாலின விகிதம் அதற்கடுத்த ஆண்டில் 908 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. கேரளத்தில் பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதம் 957-ஆக உள்ளது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.
  • இமாச்சல பிரதேசம் (930), அஸ்ஸாம் (925), மத்திய பிரதேசம்(925), ஜார்க்கண்ட் (923), ஆந்திரப் பிரதேசம் (920) ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டைக் காட்டிலும் பிறக்கும் குழந்தைகளில் அதிக பாலின விகிதத்தைக் கொண்டிருக்கின்றன.
  • தமிழ்நாடு ஏற்கெனவே பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க ஏராளமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும் இந்த நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து கண்காணிப்பதற்கு மேலும் அதிக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • மக்கள் நல்வாழ்வில் தேசிய அளவில் முன்னிலை வகிப்பதற்காகப் பெருமைகொள்ளும் தமிழ்நாடு அதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில், பின்னடைவுகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்