TNPSC Thervupettagam

மக்கள் வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்பு

May 25 , 2021 1341 days 619 0
  • இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகை இன்று பல்வேறு நெருக்கடிகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்:
  • சுதந்திர இந்தியாவில் இதுவரையிலானவற்றில் மிகவும் மோசமான மருத்துவ நெருக்கடி; பெருமளவிலான வேலையிழப்புகள், வருமானம் மிகவும் குறைந்துபோன நிலை; பெருந்திரளான மக்களைப் பசி பட்டினியில் தள்ளியது, மோசமாகிக்கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவைதான் அந்த நெருக்கடிகள்.

பல்வேறு தோல்விகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையை வலியுறுத்தாமலேயே உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்றும், ஒரு நாளுக்கு இரண்டு முறை உணவு வழங்கும் உணவுக் கூடங்களை நடத்த வேண்டும் என்றும் கடந்த மே 13 அன்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கும் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகளுக்கும் உத்தரவிட்டது.
  • இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியமானது; ஏனெனில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட பசி பட்டினிப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் கண்டுகொண்டதும், அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதும் இதுவே முதன்முறை.
  • எனினும், இதை உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் விரிவுபடுத்தவில்லை; உணவு, உணவு தானியங்கள் வழங்கலைத் தவிர்த்துப் பணமாக நிவாரணம் வழங்குவதை இது உள்ளடக்க வில்லை; இதை மாநில அரசின் கொடையாக ஆக்கியதே தவிர உரிமையாக ஆக்கவில்லை.
  • வாழ்வதற்கான உரிமையைப் பின்பற்றி வாழ்வாதாரத்தை அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருந்தால் மேற்கண்ட மூன்று இடைவெளிகளும் நிரப்பப் பட்டிருக்கும்.
  • இந்தியர்கள் வாழ்வதற்கான உரிமையின் மீது இந்திய அரசால் நிகழ்த்தப்பட்ட மோசமான அத்துமீறல் அதன் தடுப்பூசிக் கொள்கைதான். ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வது அடிப்படையானது; அரசு ஒவ்வொருவருடைய வாழ்வதற்கான உரிமையையும் மதிக்க வேண்டும் என்பதால், ஒருவரிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
  • தடுப்பூசியை ஒன்றிய அரசு தன்னுடைய செலவில் போட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். மிகவும் தனியார்மயமான மருத்துவத் துறையைக் கொண்டிருக்கும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகவே வழங்கப் படுகிறது.
  • (18-45 இடைப்பட்ட வயதைக் கொண்ட) மக்கள் இந்தத் தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளும்படியான நிலையை இந்தியா ஏற்படுத்தியுள்ளது – பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ஏற்றுக்கொள்ள முடியாததும் எதிர்பார்த்த விளைவைத் தராததுமான உத்தி இது.
  • இது இந்திய அரசின் மிக மோசமான தவறுகளின் விளைவாகும்: அரசு அதிக அளவிலான தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்குக் கட்டாய உரிமம் வழங்கி, போதுமான தடுப்பூசிகள் உற்பத்திசெய்வதை உறுதிப்படுத்தவில்லை; போதுமான அளவு தடுப்பூசிகளை ஏற்பாடு செய்யவுமில்லை; இந்தத் தடுப்பூசிகளைப் போடும் அதன் பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் கட்டியிருக்கிறது; ஒன்றுக்கொன்று மாறுபட்ட தடுப்பூசி விலைநிர்ணயத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.
  • இதனால், மாநில அரசுகள் தடுப்பூசிகளை வாங்குவதற்கு ஒன்றுக்கொன்று போட்டியிடுவதுடன் தனியார் மருத்துவமனைகளுடனும் போட்டியிடுகின்றன; பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்கள் தடுப்பூசிகளின் விலையை அளவுக்கதிகமாக உயர்த்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்தது.

முறைசாராத் தொழிலாளர்கள்

  • குறைந்தபட்சம் 90% தொழிலாளர்கள் முறைசாராத் தொழில்களைச் செய்பவர்கள்; அவர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்போ சமூகப் பாதுகாப்போ கிடையாது, கடந்த ஆண்டின் பொதுமுடக்கங்கள், கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடிகளின்போது அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
  • முறைசாராத் தொழில்களைச் சார்ந்திருக்கும் கிட்டத்தட்ட 100 கோடி மக்களின் நிலை குறித்துப் பொதுவெளியில் யாரும் வெகுண்டெழவில்லை. கொள்கை வகுப்பாளர்கள், குறிப்பாகத் தேசிய அளவில் இருப்பவர்கள், அவர்களை ஒட்டுமொத்தமாகக் கைகழுவி விட்டார்கள்.
  • செயல்படாமையின் விளைவுகள்மிகக் கடுமையாகவும் வெகு காலத்துக்கு நீடிக்கக் கூடியவையாகவும் இருக்கும். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் எதிர்காலப் பொருளாதாரத்தின் செல்திசைக்கும்கூட.
  • கடந்த ஆண்டு பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்தும் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்தைவிடக் குறைவாகவே சாப்பிட்டார்கள்; ஆரோக்கியமான உணவை உண்பது குறைந்துவிட்டது; ‘பசி பட்டினி கண்காணிப்பு’ என்ற ஆய்வு இதையெல்லாம் கண்டறிந்திருக்கிறது.
  • ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களில் கால்வாசியினரின் வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டது. இந்தியாவின் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் பசி பட்டினி அதிகமாகக் காணப்படுவதை அந்த ஆய்வு கண்டறிந்தது. முன்யோசனையற்ற சமீபத்திய பொதுமுடக்கங்கள் மீட்சிக்கான முயற்சிகளைத் தடுத்துவிடும்.
  • கடந்த அரை நூற்றாண்டின் மிகப் பெரிய மானுட நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் வேளையில், பெருந்தொற்று ஏற்படுத்திய சுகாதார, பொருளாதார விளைவுகளை எதிர்கொள்வதற்குப் போதிய அளவிலான நிதியூட்டத்தை மேற்கொள்ளாத சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.
  • நிதிமுறையைப் பொறுத்தவரை இந்தியா மரபார்ந்த அணுகுமுறையையே மேற்கொள்கிறது. ஏப்ரல் 2020-லிருந்து பிப்ரவரி 2021 வரையிலான ஒன்றிய அரசின் செலவினமானது, வட்டியற்ற செலவினங்கள் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.1% மட்டுமே உயர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
  • இந்தப் பெருந்தொற்றின் முதல் அலையின்போது இந்தியாவைவிட மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளைக்காட்டிலும்இந்தியாவின் பொருளாதாரம் ஏன் மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.
  • பொருளாதார மீட்சிக்காக அரசு ஏற்கெனவே தேங்கிக்கிடக்கும் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்குச் செலவிடுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
  • அதற்குப் பதிலாக, கோடிக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களுக்குப் பணம் வழங்கியிருந்தால் பசி பட்டினியிலும் வேலைவாய்ப்பின்மையிலும் மூழ்கிவிடாமல் அவர்களைக் காப்பாற்றியதுடன் வளர்ச்சியையும் அது தூண்டிவிட்டிருக்கும்.
  • ஏனெனில், இந்தத் தொகை அனைத்தும் சாதாரணமான, உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்களை வாங்குவதில் செலவிடப்பட்டிருக்கும்.
  • உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல் நியாயவிலைக் கடைகள் மூலம் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்குதல், உணவு வழங்குதல் போன்றவை நன்மை தருபவைதான்.
  • எனினும், அவற்றால் பொருளாதாரம் மிகக் குறைவாகவே விரிவடையும். நிவாரணம் தருவது, பொருளாதாரத்துக்குப் புத்துயிர் கொடுப்பது இரண்டுக்கும் சேர்த்து ஒரு குடும்பத்துக்கு ரூ.7 ஆயிரம் (கிட்டத்தட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கு இணையான தொகை) வழங்கப்பட வேண்டும்.
  • இலவச உணவு தானியங்கள், இலவச உணவுப் பொருட்கள் போன்றவற்றோடு இந்தத் தொகையும் வழங்கப்பட வேண்டும்.

வாழ்வதற்கான உரிமை

  • அரசு செய்ய வேண்டியது என்னவென்றால் வாழ்வதற்கான உரிமைக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகள் பலவற்றை எடுப்பதுதான். இதுவே தற்போது பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கு உறுதியான (கூடவே நியாயமான) வழிமுறையாக இருக்கிறது.
  • கரோனாவுக்கான விரிவாக்கப்பட்ட அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும், எல்லா மாநிலங்களுக்கும் இலவசமாக அவற்றை வழங்க வேண்டும்; தேவைப்படுவோருக்கு அடுத்த 6 மாதங்கள் ஒவ்வொரு மாதத்துக்கும் இலவசமாக 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும்; சீராக வேலைகள் இல்லாத முறைசாராத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
  •  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலும் தேவை அடிப்படையிலானதாக, இவ்வளவு நாட்கள்தான் வேலை, ஒரு குடும்பத்தில் இவ்வளவு பேருக்குத்தான் வேலை என்று இல்லாததாக மாற்றியமைக்க வேண்டும்; நகர்ப்புற இந்தியாவுக்கும் ஏற்றவிதத்தில் அதைப் போன்றதொரு திட்டத்தை உருவாக்கி, படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும். இவையெல்லாம்தான் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
  • இதற்கான வளங்களெல்லாம் எங்கே என்று கேட்கப்படும். கணிசமானோர் வேலையில்லாமல் இருக்கும், கணிசமான திறன் பயன்படுத்தாமல் இருக்கும், பயன்படுத்தப்படாத உணவு தானியங்களை (தற்போது 8 கோடி டன்கள்) கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரத்தில் வளங்களைத் திரட்டுதல் என்பது யாருடைய நுகர்வையும் குறைத்து விடாது.
  • செல்வச் செழிப்புப் பட்டியலின் உச்சியில் இருக்கும் 1% குடும்பங்கள் மீது 1.5% சொத்துவரி விதித்தாலே தேவையான தொகையைப் பெற்றுவிடலாம்.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நிதியமைச்சர் ஜானெட் யெல்லனும் மிகவும் புதுவிதமான வழிமுறைகளை யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் ‘வாழ்வதற்கான உரிமை’ என்ற முழக்கத்துக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை மீதான உறுதிமொழிகளுக்கும் செறிவும் அர்த்தமும் கொடுக்கக்கூடிய நடைமுறைகளை மேற்கொள்வதிலிருந்து இந்தியா பின்வாங்கிவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்