- மக்கள்தொகை அடிப்படையில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வருகிறது இந்தியா. ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டிருக்கும் ‘உலக மக்கள்தொகை 2023’ அறிக்கையின்படி, சீனாவைவிட கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் ஜூன் இறுதியில், முதலிடத்துக்கு (142.86 கோடி) இந்தியா வந்துவிடும் என்பது உறுதியாகிவிட்டது.
- மக்கள்தொகை அதிகரிப்பு என்பது இயற்கை வளங்கள் தொடங்கி, கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு அம்சங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடியது. வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, ஊட்டச்சத்தின்மை பிரச்சினைக்கு எதிரான நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், அடிப்படைச் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் எனப் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கக் கூடியது.
- உணவு, குடிநீர், வசிப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை இன்னும் அதிகமாக்கக்கூடியது. ஏற்கெனவே, 82 கோடி இந்தியர்கள் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். காலநிலை மாற்றம் ஏற்படுத்தியிருக்கும் சவால்களும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்சினை இது. பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா, மக்கள்தொகையில் முதலிடம் பிடிப்பது என்பது இடநெருக்கடி சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
- மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த ‘ஒரு குழந்தை’ திட்டத்தை மிகக் கடுமையாக அமல்படுத்திவந்த சீனா, 2016இல்தான் அதைத் தளர்த்தியது. மறுபுறம், இந்தியா 1970களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் காட்டிய தீவிரத்தை 1990கள் முதல் தளர்த்தத் தொடங்கி விட்டது. எனவே, மக்கள்தொகையின் அடிப்படையில் சீனாவை இந்தியா முந்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.
- ஆனால், இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் 0-14 வயதினர், 15-24 வயதினரின் எண்ணிக்கை குறையும் என்றும் 25-64 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. அதாவது, வேலை தேடும் வயதினரும், வயோதிகத்தால் நோய்மையடைந்து மருத்துவ வசதிகளை நாடும் வயதினரும் அதிகரித்திருப்பார்கள். குறிப்பாக, 2030ஆம் ஆண்டுவாக்கில் முதியோரின் எண்ணிக்கை 19.4 கோடியாக இருக்கும். இவைதான் பெரும் சவால்களை இந்தியாவுக்கு ஏற்படுத்தவிருக்கின்றன.
- அதிகரிக்கும் மக்கள்தொகையைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கக் காத்திரமான திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையும் முக்கியம். அடுத்த 25 ஆண்டுகளில், வேலை செய்யும் வயதுடையவர்களில் உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பார் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு என்ன உத்தரவாதம் என்பது விவாதத்துக்குரியது.
- அதிகமான மக்கள்தொகை என்பது கணிசமான தொழிலாளர் எண்ணிக்கையுடன் தொடர்புடையது தான். எனினும், இத்தனை ஆண்டுகளாக இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா அதற்கான வாய்ப்புகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திவந்திருக்கிறது என்பது கேள்விக்குறி. இவ்விஷயத்தில் சீனாவுடன் ஒப்பிட்டால், இந்தியா சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் அதிகம். சீனாவின் தொழிலாளர்களில் தொழில் பயிற்சி பெற்றவர்கள் 26%. இந்தியாவில் அது 5% மட்டுமே.
- இந்தியாவின் மக்கள்தொகையில் 48% பேர் பெண்கள் என்கிறது உலக வங்கி. ஆனால், பாலினச் சமத்துவம், பெண்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். கூடவே, புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை, சமூகரீதியிலான ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வது என இந்தியா கடக்க வேண்டிய வேறு பல சவால்களும் உள்ளன. அனைத்துக்கும் முகங்கொடுக்க ஒருங்கிணைந்த திட்டங்களுடன் இந்தியா தயாராகும் என நம்புவோம்!
நன்றி: தி இந்து (24 – 04 – 2023)