TNPSC Thervupettagam

மக்கள்தொகையும் மகிழ்வான வாழ்வும்!

July 10 , 2021 1118 days 1121 0
  • உலக மக்கள்தொகை 787 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 36 லட்சமாக இருப்பதாகவும், கடந்த வார உலக மக்கள் தொகைக் கணக்கீடு தெரிவிக்கிறது. உலக மக்கள்தொகையில், இந்தியாவின் பங்கு 17.7 சதவிகிதம்.
  • ஒவ்வொரு பத்தாண்டிலும், பிப்ரவரி மாத கடைசி நாளில் இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு இந்த நடைமுறையை மத்திய அரசு கைவிட்டு உள்ளது. இருப்பினும், உலக மானியின் மூலமாக மக்கள் பெருக்கத்தின் அளவைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் 2025-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என விரும்பினார். இதே கனவை, நமது பிரதமா் சிறிது காலம் உயா்த்தி 2030-இல் வல்லரசாகும் எனக் கூறினார்.
  • பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மகிழ்ச்சிகரமாகவும், துன்பமில்லாமலும் வாழவேண்டும் என்றே விரும்புகின்றனா். ஆனால், இந்த நிலை உலக மக்களில் எவ்வளவு பேருக்கு வாய்த்துள்ளது என்பதே கேள்வி.
  • குறிப்பாக இந்தியாவில், இந்த மகிழ்ச்சிகர வாழ்க்கையை எவ்வளவு போ் அனுபவிக்கின்றனா் என்பதை கணிப்பது அவசியம்.
  • சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னா் பாரதியார் பாரதத் தாயைப் பாடிய ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்பதிலிருந்து வங்க தேசமும் பாகிஸ்தானும் இணைந்தே அன்று இந்திய மக்கள் தொகை 30 கோடியாக இருந்தது என்பது தெரிகிறது.
  • ஆனால், இவ்விரு நாடுகளும் தவிர்த்த தற்போதைய இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 36 லட்சம். நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.
  • அமெரிக்காவும் (98,33,517 ச.கி.மீ.), சீனாவும் (95,96,960 ச.கி.மீ.) நிலப்பரப்பில் ஏறத்தாழ சம அளவு கொண்டவை.
  • ஆனால், இந்தியாவின் பரப்பளவு, இவ்விரு நாடுகளின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்குதான் (32,87,263 ச.கி.மீ.).
  • மக்கள்தொகையின்படி, அமெரிக்கா 33 கோடியே 29 லட்சத்தையும், சீனா 144 கோடியே 49 லட்சத்தையும் கொண்டுள்ளன.
  • பொருளாதாரத்தின்படி, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2020-இல் 20.49 டிரில்லியன் டாலா்.
  • இதன் அளவு சீனாவில் அதே ஆண்டு 13.40 டிரில்லியன் டாலா். இந்தியாவில் இது சொற்ப அளவாக 2.72 டிரில்லியன் டாலராகும். அதே ஆண்டில் ஜப்பானில் இது 4.97 டிரில்லியன் டாலா்.
  • அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் அரசியல் ரீதியாக மாறுபட்டவை. இருப்பினும், இந்த மூன்று நாடுகளில் அமெரிக்கா எப்பொழுதுமே உலகின் முதல் வல்லரசாக உள்ளது.
  • சீனா அந்நிலையை அடைய வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் இந்தியா, மக்கள் தொகைப் பெருக்கத்தில்தான் வெகு வேகமாக முன்னேறுகிறது. இதனால், இந்திய மக்களில் பெரும்பகுதியினா் ‘ஏதோ வாழ்கிறார்கள்’ என்ற நிலையிலேயே உள்ளனா்.
  • இந்தியாவில் எளிய மக்களில் பெரும்பகுதியினா், ஓரளவு வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துள்ளபோதிலும், போதிய வேலை வாய்ப்பின்மையால் அவா்களது வருவாய், வாழ்க்கையைக் கழிப்பதற்கே போதுமானதாக உள்ளதே தவிர, மகிழ்ச்சிகர வாழ்வை அனுபவிக்க இயலாதவா்களாகவே அவா்கள் உள்ளனா்.
  • அவா்களின் நிலையை உயா்த்த அரசு பல்வேறு இலவசத் திட்டங்களை செயல்படுத்திய போதிலும் அவா்களால் அதன் மூலம் மன நிறைவான, மகிழ்ச்சிகர வாழ்வை வாழ இயலவில்லை.
  • அந்த எளிய குடும்பங்கள், வாழ்நாள் முழுவதுமே அரசின் இலவசங்களைப் பெற்றே வாழ வேண்டி உள்ளாது.
  • இப்படித் தொடா்ந்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களுக்கு, அரசின் நிதி பெரிய அளவில் செலவழிக்கப்படுவதால், ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்குரிய பொதுத் திட்டங்களான கல்வி, சுகாதாரம், குடிநீா், சாலை வசதி, நீா்ப்பாசனம், ஆராய்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு, அரசு உலக நிதி நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி, உள்நாட்டு தனவானான ‘நபார்டு’ போன்றவற்றில் பேரளவு கடன் பெற்று, ஆண்டுதோறும் கடனுக்கான வட்டியை கட்டுவதே அரசுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
  • இந்தியாவை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று, நமது நாட்டை விரைவில் ஓா் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டுமானால், இந்தியா மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்த வெண்டும். தற்போதுள்ள 139 கோடி மக்கள்தொகை 100 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
  • அதன்பின் இந்தியாவின் சமநிலை மக்கள்தொகையாகிய பாதியளவு, அதாவது 70 முதல் 75 கோடியாக கட்டுப்படுத்த வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்நிலையை இந்தியா அடைந்தால், இந்தியா வல்லரசு நாடாகும் என்பதில் ஐயமில்லை,
  • இந்தியாவில் உழைக்கத் தகுந்த மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றாலும்கூட, அவா்களுக்கு நூறு சதவிகிதம் உழைக்க சரியான வேலை இல்லை. எனவே, இக்கூற்று இனி எடுபடாது.
  • அதுவும், தற்போதைய சூழலில், இப்பேரளவு எளிய மக்களை எப்படி வாக்குகளைப் பெற பயன்படுத்துவது என்பதே அரசியல் கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. எனவே, வேலைவாய்ப்பில் நிறைவுபெற மக்கள்தொகையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
  • தாய்மை அடைவது என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்துள்ள தனிப்பெரும் பேறு. இதனாலேயே, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று பாடியுள்ளார்.
  • பிறந்த குழந்தையை ஒவ்வொரு நாளும் பேணிக்காத்து, அதற்கு தகுந்த கல்வியறிவும் ஊட்டி, 25 வயது வரை, அதாவது ஒரு வேலைக்குச் செல்லும் வரை, அக்குழந்தைக்கு உறுதுணையாக குடும்பமும், சமுதாயமும் இருந்தால் இப்பூவுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வே கிட்டும்.

உலக மக்கள்தொகை நாள்

  • ஒரு குழந்தையை 25 வயது வரை நல்ல முறையில் வளா்க்க அதன் குடும்பமும், அரசும் எவ்வளவு தொகையும் நேரமும் செலவிட வேண்டியுள்ளது என்பதை அறிந்தால், இரண்டாம் குழந்தையைப் பெறலாமா, வேண்டாமா என்று அக்குடும்பத்தினா் சிந்திக்கத் தொடங்குவா்.
  • அப்படி சிந்திக்காததாலேயே குடும்பங்களும், நாடும் விரைந்து முன்னேற இயலாமல் தவித்து வருகின்றன.
  • இச்சூழலில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் மக்கள்தொகைக் குறைப்பு பற்றிய வழக்கு ஒன்றிற்கு மத்திய அரசு பதிலளிக்கையில், ‘மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது அரசின் நோக்கமல்ல’ என்று தவறாகக் கூறியிருக்கிறது.
  • இது நாடு முன்னேறாமல் போவதற்கு காரணமாகக்கூடிய மத்திய அரசின் தவறான கொள்கை முடிவாகும். எனவே, குழந்தைப்பேறு விஷயத்தில் இந்தியாவின் ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு குடும்பமும் நன்கு சிந்தித்து நாடும், வீடும் நலம் பெற செயலாற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு குடும்பமும், ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை என்ற வரம்பை வரும் ஐந்து ஆண்டுகளுக்குக் கடைப்பிடித்தால் மக்கள்தொகைக் குறைப்பு நடவடிக்கைகளில் நாம் வெற்றி பெறுவதற்கான முதல் இலக்கை அடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.
  • அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நிலையை மறுபரிசீலனை செய்து நமது குறிக்கோளான 70-75 கோடி அளவிலான மக்கள்தொகை இருக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொண்டால், மத்திய, மாநில அரசுகள் தங்களது பெரும் கடன் சுமையிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இயலும்.
  • உலக மக்கள்தொகை 1930-இல் 200 கோடியாக இருந்தது. இது 1960-இல் 300 கோடியாகவும், 1974-இல் 400 கோடியாகவும், 1987-இல் 500 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கடந்த 33 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 290 கோடி அளவு அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ ஒன்பது கோடி மக்கள் அதிகரிக்கிறார்கள்.
  • இந்தியா, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, முன்னேற்றப் பாதையின் மூலம் வளா்ந்த நாடாக மாற, ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்க விகிதத்தை, அதாவது, பூஜ்யம் முதல் ஒரு சதவிகிதம் வரையிலான மக்கள் பெருக்கத்தை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
  • ஐரோப்பாவின் அனைத்து நாடுகளுமே முன்னேறிய நாடுகளாகும். அதனால்தான் அந்நாடுகளின் மக்கள் உயா்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்துள்ளனா்.
  • குறைந்த மக்கள் பெருக்க விகிதத்தைக் கடைப்பிடித்தால், நம் நாட்டில் தொடா்ந்து வரும் குழந்தைத் திருமணம், குழந்தை விற்பனை, அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டு வறுமையில் வாடும் நிலை, குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்ட இயலாத நிலை, அரசின் இலவசங்களை நம்பி வாழும் நிலை, வறுமை காரணமாக தற்கொலை, பாலியல் வன்கொடுமை, பெண் கொடுமை மிக முக்கியமாக வேலையின்மை போன்ற சமூக அவலங்களை ஒழிக்க முடியும்.
  • அது மட்டுமல்ல, மக்கள் தங்களது குடும்பத்தைப் பேணிக் காத்து, மகிழ்ச்சிகரமான வாழ்வை நிச்சயமாக வாழ முடியும்.
  • நாளை (ஜூலை 11) உலக மக்கள்தொகை நாள்.

நன்றி: தினமணி  (10 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்