- சுடர்விட்டு எரியும் விளக்காக இருந் தாலும் அது தொடர்ந்து ஒளிர தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். ஆனால், தான் ஒளிதரும் விளக்கு என நிரூபிப்பதற்கே முத்துலட்சுமி ரெட்டி அந்நாளில் போராட வேண்டியிருந்தது. பள்ளிக்குச் செல்வதையே ஏதோ தகாத செயலில் ஈடுபடுவதுபோல் யார் கண்ணிலும் படாமல் மறைந்து செல்ல இந்தச் சமூகம் சிறுமி முத்துவை நிர்ப்பந்தித்தது. ஊராரின் தூற்றுதலையும் அவப்பேச்சையும் கேட்டுக் கொண்டுதான் அவர் பாடம் கற்றார். எது தன்னைப் பாதிக்க வேண்டும் என்பதில் அந்த வயதிலேயே அவர் உறுதியோடு இருந்தார்.
- மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்த முத்துலட்சுமி மேற்படிப்புக்காகப் புதுக்கோட்டையில் இருந்து வெளியேற நினைத்தார். முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமியின் முன்னாள் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பை முடித்திருந்தார். அவரது அறிமுகம் முத்துலட்சுமியின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.
மருத்துவக் கனவு
- ஒருநாள் முத்துலட்சுமியின் அம்மா சந்திரம்மாள் டைபாய்டு காய்ச்சலில் விழ, அதிலிருந்து அவர் மீண்டெழ மாட்டார் என்று பலரும் நம்பினர். அப்போது அமெரிக்காவில் இருந்து வந்திருந்த மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்த மருந்துகளால் நோயிலிருந்து சந்திரம்மாள் மீண்டார். அந்த நிகழ்வு முத்துலட்சுமிக்கு மருத்துவப் படிப்பின் மீதான பிடிப்பை அதிகரித்தது.
- மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக 1907ஆம் ஆண்டு தன் தந்தையோடு மதராஸுக்கு முத்துலட்சுமி பயணப்பட்டார். மருத்துவக் கல்லூரி முத்துலட்சுமியை உவப்புடன் வரவேற்கவில்லை. இங்கேயும் அவரது பிறப்பு தடையாக இருந்தது. போராட்டங்கள் அவருக்குப் புதிதல்லவே. அதிக உழைப்பும் உடல் வலுவும் தேவைப்படும் அறுவை சிகிச்சைப் படிப்புக்கு முத்துலட்சுமி சரிப்பட்டு வர மாட்டார் என மருத்துவக் கல்லூரி நினைத்தது. அந்த நினைப்பைத் தன் மகத்தான வெற்றியால் தவிடுபொடியாக்கினார் முத்துலட்சுமி. அறுவை சிகிச்சை படிப்பில் நூறு சதவீத மதிப்பெண்களோடு, அதுவரை ஆண்களே செய்திராத சாதனையைப் புரிந்தார். இடையில் சொந்த வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் முத்துலட்சுமிக்குப் பல்வேறு இன்னல்கள். அனைத்தையும் சமாளித்தபடியே படிப்பிலும் சிறந்து விளங்கினார். தன் வாசிப்பு உலகத்தை விரிவாக்கினார். உலக அளவில் போராடி வென்ற பெண்களைப் பற்றித் தேடித் தேடிப் படித்தார். ஏற்கெனவே சமூகப் பணிகளில் ஈடுபாட்டுடன் இருந்தவரின் உள்ளத்துக்கு அந்தப் பெண்களின் வெற்றிக் கதைகள் மேலும் உரமூட்டின.
சீர்திருத்த திருமணம்
- நம் இந்தியக் குடும்ப வழக்கப்படி ஒரு பெண் படித்து முடித்ததும் அடுத்து திருமணம்தானே. மகள் மருத்துவப் படிப்பை முடித்ததும் மீண்டும் திருமணப் பேச்சை ஆரம்பித்தார் முத்துலட்சுமியின் அம்மா சந்திரம்மாள். குடும்பம் என்பது பெண்ணின் அடையாளத்தை அழித்தொழிப்பதோடு அவளை அடிமையாகவும் ஆக்கிவிடும் என்று தாயிடம் வாதாடி திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்தார். ஆனால், குடும்ப உறவில் தன்னை நிகராக நடத்தும் ஆண் கிடைத்தால் மணந்துகொள்வதாகவும் சொன்னார். மேலும், தன் சமூகப் பணிகளுக்கு அவர் தடையாக இருக்கக்கூடாது என்கிற நிபந்தனையையும் முததுலட்சுமி விதித்தார். சமூக அமைப்பிலேயே ஆயிரம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறபோது சமூகத்தின் மீச்சிறு அலகான குடும்பத்தில் சமத்துவம் கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் முத்துலட்சுமி உணர்ந்திருந்தார். பிறகு தன் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட சுந்தரம் ரெட்டி என்கிற மருத்துவரை முத்துலட்சுமி மணந்துகொண்டார். ஆடம்பரமான, சடங்குகளின் அடிப்படையிலான திருமணத்தை மறுத்து, பிரம்ம சமாஜத்தின் முறைப்படி நடந்த முத்துலட்சுமியின் ‘சீர்திருத்த திருமணம்’ அந்நாளில் பலரையும் வியக்கவைத்தது.
கொடுமைக்கு எதிரான ஆண்குரல்
- 1915இல் ‘ஹவுஸ் சர்ஜன்’ படிப்பை முடித்தவர், 1917இல் சென்னை வேப்பேரியில் சிறிய மருத்துவ மனை ஒன்றை நடத்தினார். ‘ஹவுஸ் சர்ஜன்’ படிப்பின்போதே அவருக்கு சகோதரி சுப்பலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. முத்துலட்சுமிக்கு, சமூகச் சீர்திருத்தவாதியும் தேர்ந்த கல்வியாளருமான சுப்பலட்சுமியின் அறிமுகம் மற்றுமொரு மடை திறப்பு. சகோதரி சுப்பலட்சுமி என அழைக்கப்பட்ட அவர், 12 வயதிலேயே கணவனை இழந்தவர். இளம் கைம்பெண்ணான அவரது வாழ்க்கை சீர்பட்டதில் அவருடைய தந்தை சுப்பிரமணியனுக்குப் பெரும் பங்கு உண்டு.
- தன் மகள் கைம்பெண் ஆன பிறகு அனைத்து விதங்களிலும் அமங்கலியாக நடத்தப்பட்டு, வீட்டுக்குள் முடக்கப்படும் கொடுமையைக் காணச் சகியாத அவர், சாஸ்திர சடங்குகளைத் தன் பெண்ணுக்குச் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார். தன் வீட்டுப் பெண்ணுக்குக் கொடுமை நிகழும்போதாவது சுப்பிரமணியனைப் போன்ற அரிதினும் அரிதான சிலர் விழித்துக்கொள்கின்றனர். சடங்குகளின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகச் செயலாற்றுகின்றனர். ஆனால், பெரும்பான்மைச் சமூகமோ (பெண்களும் இதில் அடக்கம்) வழக்கம்போல் பத்துப் பதினொரு வயது குழந்தைகளுக்குக்கூடக் கைம்பெண் பட்டத்தை அளித்து உள்ளுக்குள் வேதனைப்படுவதாகக் கபட நாடகம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
- அந்த வேடதாரிகளைப் பற்றி சுப்பிரமணியன் கவலைப்படவில்லை. தன்னைத் தூற்றிப் பேசும் நான்கு பேரின் கருத்தைப் புறந்தள்ளிவிட்டுத் தன் மகளைப் பள்ளியில் சேர்த்தார். தன் தந்தையின் முடிவு சரியானதுதான் என்பதை உணர்த்தும்விதமாக 1911இல் மதராஸ் மாகாணத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்கிற சாதனையை சகோதரி சுப்பலட்சுமி படைத்தார். சுப்பலட்சுமி யின் இந்த வெற்றியும் சாதனையும் முக்கியமானவை. காரணம் இவைதான் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகச் செயலாற்றுகிற சுப்பிரமணியனைப் போன்றவர்களின் முன்னெடுப்புக்கு உரைகல்லாக அமைபவை.
- கல்வி பெற்ற சுப்பலட்சுமி கைம்பெண்ணான தன் அத்தை வாளாம்பாளுடன் சேர்ந்து கைம்பெண்கள் சிலருக்கு ஆதரவளித்துவந்தார். கைம்பெண்களுக்கு மறுவாழ்வோடு கல்வியும் அளிக்கும் வகையில் சென்னை மயிலாப்பூரில் 1912இல் ‘சாரதா இல்ல’த்தைத் தோற்றுவித்தார். சகோதரி சுப்பலட்சுமியையும் மருத்துவர் முத்துலட்சுமியையும் இணைக்கும் பாலமாக சாரதா இல்லம் அமைந்தது. சாரதா இல்லத்தில் இருந்த பெண்களுக்குச் சிகிச்சை அளித்துவந்தார் ‘ஹவுஸ் சர்ஜன்’ முத்துலட்சுமி. அந்த இல்லத்துக்கு நிதியுதவி அளித்துவந்த சிலர், சாரதா இல்லத்தில் பிராமணர் அல்லாத பெண்களுக்கு இடம் அளிப்பதை எதிர்த்தனர். அதைக் கேள்விப்பட்ட முத்துலட்சுமி ஒரு முடிவெடுத்தார். என்ன முடிவு அது? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)