மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்!
- கடந்த 21 மாதங்களாக, அமைதியிழந்து தவித்துவரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துவந்த நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்துத் திரும்பிய பின்னர் தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தினால் மட்டுமே மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முடியும்.
- பெரும்பான்மை இந்துச் சமூகமான மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பதற்றச் சூழல் உருவானது. மே 3இல் இரு தரப்பினருக்கும் இடையே வெடித்த மோதல் மணிப்பூரின் அமைதியைக் குலைத்தது. இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடிழந்திருக்கின்றனர்.
- இந்தச் சூழலில், 2025 பிப்ரவரி 10இல், மணிப்பூர் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் பிரேன் சிங் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. பல பாஜக உறுப்பினர்களும் பிரேன் சிங்குக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், நாகா மக்கள் முன்னணியும் ஏற்கெனவே தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுவிட்டன.
- வன்முறையைத் தூண்டும் விதத்தில் பிரேன் சிங் தொலைபேசியில் பேசியதாக வெளியான ஒலிப்பதிவுத் துணுக்கு அவரது ராஜினாமா முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்குமாறு தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்தப் பலனும் ஏற்படாத நிலையில், எதிர்பார்த்தது போலவே பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்திருக்கிறது.
- தங்கள் பகுதிக்குத் தனியாக ஆட்சி நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் குக்கி சமூக அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. மெய்தேய் சமூகத்தினருடன் சுமுகமான உறவுக்கு வாய்ப்பே இல்லை என்றும் பிடிவாதம் காட்டுகின்றன.
- இத்தகைய சூழலில், இரு தரப்பினருக்கும் இடையிலான பிணக்குகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். இரு தரப்பிலும் உள்ள ஆயுதக் குழுக்கள் கலைக்கப்பட வேண்டும். காவல் துறையிடமிருந்து திருடப்பட்ட ஆயுதங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். அண்டை நாடான மயன்மாரிலிருந்து ஆயுதம் கடத்தப்படுவதும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினை ஆகும்.
- முந்தைய காலங்களில் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்களே நிறைந்திருந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர்தான் அங்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருவதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கடி கூறிவருகிறார். ஆனால், அவரது கூற்றைப் பலவீனப்படுத்தும் வகையில் மணிப்பூர் பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படாமல் தொடர்கிறது.
- அமைதியை நிலைநாட்டும் வகையில் பிரதமர் மோடி நேரடியாக மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்கிற குரல்களுக்கு இனிமேலாவது அவர் செவிசாய்க்க வேண்டும். மணிப்பூரில் அரசியல் சார்பற்ற ஆட்சி நிர்வாகம் வந்திருப்பதால், எந்தவிதமான விமர்சனங்களுக்கும் இடமில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பலாம்.
- பிரேன் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயங்கக் கூடாது. மணிப்பூர் பிரச்சினைக்கு அரசியல்ரீதியிலான நிரந்தரத் தீர்வு காணப்பட்டால், அது தேசம் முழுமைக்குமான முன்னுதாரணமாக அமையும்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 02 – 2025)